யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 6 மே, 2013

ஆட்டு எரு ஓர் சத்துமிக்க இயற்கை உரம்


yarasool Goat FarmBreeder and Supplier of Quality GoatsEmail.yarasoolgoatfarm@gmail.com


நம் நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியினை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளது. அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கினை விளைவிக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க நாம் பயன்படுத்தும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களே நம்மை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ரசாயன உரங்களின் விலையும் இப்பொழுது வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இயற்கை உரங்கள் இட்டு உற்பத்தி செய்த காய்கறிகளை அதிக விலைகொடுத்து வாங்கி உண்ணும் பழக்கம் உள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், செயற்கை உரம் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதுதானே. இதுபோன்ற எல்லா பிரச்னைகளையும் போக்க இயற்கை நமக்கு தந்த வரப் பிரசாதம்தான் ஆட்டு எருவாகும்.

ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு, ஒரு வருடத்திற்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு தயார்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. "ஆட்டு எரு அவ்வாண்டு மாட்டு எரு மறு ஆண்டு' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப்புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.

ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப் படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களை குதிரைமசால், முயல்மசால், வேலி மசால், சுபாபுல், தட்டைப்பயறு போன்ற தீவனங்களை அளித்தால் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணூட்டச் சத்துக்களும் தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச்சத்தும், 0.4 சதம் மணிச்சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. மேலும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகிறது.

நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் பண்ணலாம். அதற்கு முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத்தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்பவேண்டும். அவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3லிருந்து 4 மாதத்திற்கு ஒரு முறை ஆழ்கூள ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

ஆழ்கூள முறையை பொறுத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்தில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல் தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல்சத்தும் கிடைக்கும். மேலும் ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன?உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய சத்து ஆவியாகி வீணாகிவிடும். இவ்வாறு ஆழ்கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் எருவை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்துவிதமான வேளாண் பொருட்களுக்கும் பயன் படுத்தினால் அதிக லாபத்தையும் அடையலாம். ரசாயன கலப்படத்தை தடுத்து உயிரிழப்பையும் தவிர்க்கலாம். ஆகவே ஆட்டு எருவினை முறையாக பயன்படுத்தி இயற்கைவழி வேளாண்மைக்கு வித்திட்டால் நாமும் உயரலாம். நமது நாடும் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: