நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்
நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.
முட்டைகளை சேகரிக்கும் காலம்.
கோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளை, முட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
அடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்:
பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.
மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.
எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.
அடைக்கோழியின் உடல்நலன்:
பேன், செல் பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை 2 மிலி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் விடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் பேண், செல் பாதிப்பினால் ஏற்படும் அரிப்பு, நமச்சல் குறைந்து நல்ல நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.
கருக்கூடிய முட்டையைக் கண்டறிதல்:
நாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்பு, ஒரு அட்டை. கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டை போகும் அளவிற்கு ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைத்து கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும், ரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும். கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோ, ரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும். எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் மேற்கூறிய மேலாண்மை முறைகளைக் கவனத்தில் கொண்டு பெட்டை அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெற்று பலன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
*****************************************************************************
புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு
புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு
குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவுடன், மண் வளத்தை மேம்படுத்தக் கூடிய புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, எம்.சக்திவேல், எம்.ஜோதிலட்சுமி ஆகியோர் கூறியது:
கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த முறையில் வீடுகளிலுள்ள நெல், அரிசிக் குறுணை, கம்பு, சோளம், எஞ்சிய சமைத்த உணவுகளைத் தீவனமாக அளிக்கலாம். எனினும், இந்த முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது.
புறக்கடையில் நாட்டுக் கோழி வளர்ப்பில் இனப் பெருக்கத்துக்காக எந்தவொரு தனிக் கவனமும் செலுத்தத் தேவையில்லை. அந்தந்தப் பகுதியில் பலமுள்ள சேவல்கள் மூலமாகவே இனப் பெருக்கத்துக்கு தயாராகின்றன.
இதற்காக உடல் எடையின் அடிப்படையில் சேவல்களைத் தேர்வு செய்வது அவசியமாகும்.
முட்டை சேகரித்தல்..: பெட்டைக் கோழிகள் 20 வார வயதில் முட்டையிடத் தொடங்கும். பெரும்பாலும் பகல் நேரத்திலேயே முட்டையிடும். எனவே, காலையில் இரண்டு முறையும், பகலில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் முட்டைகளைச் சேகரிக்க வேண்டும்.
முட்டைகளை உப்புச் சட்டியில் அல்லது அரிசிப் பானைகளில் அடைத்து வைக்கக் கூடாது. இதனால், சுமார் 50 சதவீதம் முட்டைகள் குஞ்சு பொரிக்கும். முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க, இரும்புச் சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கைப் போட வேண்டும். பிறகு முட்டைகளை அதன் மேல் வைத்து பருத்தித் துணி கொண்டு மூடவேண்டும். இதன் மூலம் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவீதம் வரை இருக்கும்.
அடை வைத்தல்..: மூங்கில் கூடைகள் அல்லது அகலமான இரும்புச் சட்டியைப் பயன்
படுத்தி அடை வைக்கலாம். அடை வைக்கும் கூடையை ஒரு அறையின் இருண்ட பகுதியிலேயே வைக்க வேண்டும். வெளிச்சம் அதிகம் இருந்தால் கோழிகள் சரியாக அடைக்கு உதவாது.
மேலும், கோழிகளுக்குத் தகுந்தாற்போல் 10 முதல் 15 முட்டைகள் வரை மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும். அதிகமான முட்டைகள் வைத்தால் குஞ்சு பொரிக்கும் திறன் குறையும்.
அடை காக்கும் கோழிகளில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கோழிகளை தினமும் சிறிது நேரம் வெளியில் சென்றுவர அனுமதிக்க வேண்டும். அடை வைத்த 7ஆம் நாள் முட்டைகளில் கரு கூடிவிட்டதா எனக் கண்டறிந்து, கரு கூடாத முட்டைகளை உணவுக்காகப் பயன்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு..: புறக்கடை முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சில நேரங்களில் போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் போகக்கூடும்.
எனவே, மேய்ச்சலால் கிடைக்கும் உணவுப் பொருள்களுடன் கோழிகளுக்குக் குருணை அரிசி, தானியங்கள், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமக் கலவைப் பொருள்களையும் தர வேண்டும். மேலும், புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குப் புரதச் சத்து நிறைந்த தீவனமாக உள்ள பானைக் கரையான், அசோலா ஆகியவற்றையும் வழங்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக