யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு


திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தீவன சோளப் பயிர் பயிரிட விவசாயிகள் முன்வரலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் வைக்கோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. டெல்டா மாவட்ட ங்களில் பாரம்பரியமாக நெல் பயிரிடப்பட்டு வைக்கோல் முக்கிய உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
 தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் தேவைக்கும், உற்பத்திக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இச்சூழலை சமாளிக்க காவிரி டெல்டா மாவட்டங் களான திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தீவன சோளப்பயிர் பயிரிட ரூ. 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 
 திருவாரூர் மாவட்டத்தில் 700 ஏக்கரில் தீவன சோளப்பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் தீவன சோளப்பயிர் சாகுபடிக்கு ஆகும் மொத்த செலவில் 50 சதவீதம் மானியத் தொகையாக உற்பத்தியாளருக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி குறைந்தப் பட்சம் அரை ஏக்கர் பயிரிட வேண்டும். நீர்ப்பாசன வசதி அவசியம் இருக்க வேண்டும். ஏக்கரில் சுமார் 10 டன் தீவனம் கிடைக்கும்.
 உற்பத்தி செய்யப்பட்ட தீவன சோளப்பயிரை தங்களது தேவைக்கு போக மீதமுள்ளவ ற்றை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு விற்ப னை செய்ய வேண்டும். தீவனப்பயிர் உற்பத்தி செய்த பயனாளியிடமிருந்து வாங்கி அதனை 50 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் களுக்கு வழங்கப்படும்.
 எனவே நீர்ப்பாசன வசதியுடன் நிலம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணபித் துப் பயன்பெறலாம். திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 47.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஏக்கருக்கு மானியமாக ரூ. 6,440 வழங்கப்படுகிறது. 
கால்நடை தீவனப்பயிர் வளர்க்க மானியம் 
காஞ்சிபுரம்:கால்நடை தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 100 சதவீதம் மானியத்தில், தீவனப் புல் வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு சார்பில், விலையில்லா ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. தற்போது, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தீவனம் குறைந்து விட்டது.
கால்நடைகளுக்கு, பால்வளம் பெருக்க கூடிய கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல் ரகம் கோ-3 அல்லது கோ-4 உடன் முயல் மசால் அல்லது வேலி மசால், தானிய வகை தீவனப் பயிரான மக்காச்சோளம் போன்றவற்றுடன், அதிக புரத சத்து நிறைந்த, தீவன வகை தட்டைப்பயறு, போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன் மூலம் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்கலாம்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 50 ஏக்கர் பரப்பளவில், தீவனப் பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விவசாயிக்கு, 25 சென்ட் நிலம் இருந்தால் போதும். இந்த நிலத்தில் தீவனப் பயிர் பயிரிட, புல் விதை மற்றும் பண்ணை அமைப்பதற்காக, களை நிர்வாகம் மற்றும் தொழு உரம் வாங்க, 1,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு ஏக்கராக இருந்தால், 6,400 ரூபாய் வழங்கப்படுகிறது. தீவனப் பயிர் பயிரிடும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட கால்நடைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அனுகி, தீவனப் புல் வளர்க்க விண்ணப்பங்கள் பெறலாம்.
இது குறித்து, கால்நடைத்துறை உதவி இயக்குனர் ராஜன் சி ஆண்டனி கூறுகையில், ""தற்போது கால்நடைத்துறை சார்பில், கோ 1, கோ 2, கோ 3 ஆகிய ரக தீவனப் புல் விதைகள் வழங்கப்படுகிறது. இவற்றை பராமரிக்க, 100 சதவீதம் மானியம், அரசு வழங்குகிறது. பயன்பெற விரும்பும் கால்நடை விவசாயிகள் சம்பந்தப்பட்ட கால்நடை துறை உதவி இயக்குனர்களை அணுகி, தீவன வளர்ப்பில் புல் வகையை பயிரிடலாம்,'' என்றார்.
தீவனப் புல் பயிரிடுவதற்கு கோட்டங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்கள் விவரம்
கோட்டம் தீவனப் பயிர் பரப்பு
காஞ்சிபுரம் 20 ஏக்கர்
செங்கல்பட்டு 10 ஏக்கர்
மதுராந்தகம் 20 ஏக்கர்
மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தின் மையம் ஓர் அறிமுகம்

தோற்றம் : 

மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பள உரோம ஆராய்ச்சி நிலையம் 1962 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் அருகிலுள்ள மால்புராவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அந்த இடம் அவிக்காநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையத்தின் தென் மாநிலங்களுக்கான ஆராய்ச்சி மையம் 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானல் தாலுகாவில் மன்னவனூர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.

நோக்கம் :

இந்நிலையத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் பற்றிய அடிப்படை மற்றும் பயன்சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல்.

இறைச்சி, உரோம இழை மற்றும் உரோமத்துடன் கூடிய தோல் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முயற்சிகள் மேற்கொள்வது.

ஆராய்ச்சி மூலம் கற்ற தொழில்நுட்ப அறிவினை ஆடு மற்றும் முயல் உற்பத்தி செய்வோரிடையே பரப்புவது.

ஆடு மற்றும் முயல் வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர்கட்கு அது குறித்த தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் சார்ந்த பயிற்சி அளிப்பது.

செம்மறி ஆடு மற்றும் முயல் பராமரிப்பு குறித்த ஐயங்களைக் களைவது.

மேற்கூறிய குறிக்கோள்களை மனதில் வைத்து மன்னவனூரின் தட்பவெப்ப நிலைகள் கண்டு இங்கு ஆடை நெய்ய உகந்த கம்பள இழைகளைக் கொடுக்கும் செம்மறி ஆடுகளை வளர்க்க முயற்சிகள் தொடங்கப்பட்டன. முதன்முதலாக உயர்ந்த உற்பத்தி திறன் கொண்ட அந்நிய நாட்டு செம்மறி ஆடுகளின் தகவமைப்பை (Adaptability) அறியும் நோக்குடன், 1966 ஆம் ஆண்டு முதல் ரோம்னிமார்ஷ் (Romney Marsh),சௌத் டவுன் (South Down), காரிடேல் மற்றும் ராம்புல்லே (Rambouillet) போன்ற அயல்நாட்டு செம்மறி ஆடுகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவைகளில் காரிடேல் மற்றும் மெரினோ கிடாக்களை 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் குரும்பை இனங்களான கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி இன பெட்டைகளுடன் இனச்சேர்க்கை செய்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் சந்ததியில் உருவான கலப்பின ஆடுகள், எடையிலும், வளர்ச்சி விகிதத்திலும், உரோம உற்பத்தி மற்றும் தரத்திலும் நாட்டினங்களைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிக திறன் வாய்ந்ததாக அறியப்பட்டது.

1967 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 136 காரிடேல் செம்மறி ஆட்டு கிடாக்களை சுமார் 700 கோயம்புத்தூர் குரும்பை இன பெட்டை ஆடுகளுடன் கலப்பினம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. கலப்பின வழித்தோன்றல்களின் உற்பத்தி திறன் சார்ந்த காரணிகளான உயிர் வாழ் திறன், உடல் எடை, வளர்ச்சி வீதம், உரோம இழைகளின் தரம் மற்றும் உற்பத்தி, இனப்பெருக்கக் கூறுகளில் பதிவு செய்யப்பட்ட முன்னேற்றம் ஆகியன கோயம்புத்தூர் குரும்பை ஆடுகளின் திறனை விட குறிப்பிடத்தக்க அளவில் இருப்பது உணரப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இராம்புல்லே கிடாக்களை 1984-ல் கோவை ஆடுகளுடன் கலப்பினம் செய்ததில், கலப்பின குட்டிகளின் பிறப்பு எடை 2.5 கிலோவாக இருந்தது. ஆனால், அது கோயம்புத்தூர் குட்டிகளில் 2.3 கிலோ இருந்தது. ஆறு மாத எடை கலப்பின குட்டிகளில் 15.1 கிலோவாகவும், குரும்பையில் 12.8 கிலோவாகவும் இருப்பது எடை பதிவு செய்வதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. 

ஒன்பது மாதத்தில் மேற்கூறிய எடைகள் 20 மற்றும் 15.5 கிலோவாகவும் இருந்தது. இந்த ஆய்வுகளின் பொழுது ஆடுகளுக்கு புரதம் நிறைந்த அடர் தீவனம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆய்வில் கலப்பின ஆடுகளின் சினைப்படுத்தப்பட்ட விகிதம் 78.3 மற்றும் குட்டி ஈனும் திறன் 90.5 விழுக்காடு என உணரப்பட்டது. இளவேனில் (Spring)காலத்தில் சினைக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஈன்ற பெட்டைகள் முறையே 86.5 மற்றும் 86.2 விழுக்காடு என கண்டறியப்பட்டது.

உரோம உற்பத்தி, கலப்பின ஆடுகளில் 1.2 கிலோவும், கோவை குரும்பையில் 0.515 கிலோவும் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், பசை நீக்கம் செய்யப்பட்ட பின் உரோமத்தின் அளவு மொத்த உரோமத்தில் 70.5 விழுக்காடாகவும், கோவை குரும்பையில் 75.8 விழுக்காடாகவும் பதிவு செய்யப்பட்டது. 

ஏனெனில், கலப்பின ஆடுகளின் உரோம இழைகள் கோவை குரும்பை ஆடுகளின் உரோம இழைகளைக் காட்டிலும் சன்னமாகவும், அதிக எண்ணெய் பசை உடையதாகவும் இருந்தது. கலப்பின மற்றும் கோவை குரும்பையில் இழைக்கொத்தின் நீளம் முறையே 4.9 மற்றும் 5.2 சென்டிமீட்டர் என அளவிடப்பட்டது. கலப்பின ஆடுகளில் 0-3, 3-6, 6-12 மற்றும் 12 மாத வயதுகளில் உயிர்வாழ் திறன் (Survivability) முறையே 90.6, 98.3, 95.3 மற்றும் 100 விழுக்காடு என பதிவு செய்யப்பட்டது. 
செம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்!


விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தமிழ்நாட்டு விவசாயிகள் மழை பொய்த்து தங்கள் தொழில் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் மாற்றுத் தொழிலின்றி அண்டை மாவட்டங்களுக்கு தஞ்சம் பிழைக்கச் செல்லும் நிலைக்கு தீர்வு தருகிது கொடைக்கானலில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம்!

கொடைக்கானலில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள மன்னவனூர் என்ற இடத்தில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம் செம்மறியாடு, முயல் மற்றும் உரோம ஆராய்ச்சி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தில் 1965 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்ட மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையத்தின் தென் மண்டல கிளையான இந்த ஆராய்ச்சி மையம் 1970-ல் அமைக்கப்பட்டது. 

செம்மறியாடு வளர்ப்பிலும், இறைச்சி இன முயல் வளர்ப்பிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டிடவும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிடவும் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. 

பாரத் மெரீனோ என்றழைக்கப்படும் பொலி கிடாக்களை உருவாக்கிய மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி மையம், இங்கு பல்வேறு இன முயல்களை வளர்த்து, ஆய்வு செய்து அதனை எவ்வாறு வளர்த்து பயன் பெறலாம் என்கின்ற ஆலோசனைகளையும், அதற்குரிய அத்தியாவசியப் பொருட்களையும் அளிக்கின்றது. (பார்க்க இறைச்சி இன முயல் வளர்ப்பு)

இங்கு பாரத் மெரீனோ என்கின்ற நல்ல வளர்ச்சியைத் தரும், நிறைய உரோமத்தைத் தரும் செம்மறியாட்டு வகையை வளர்ப்பது மட்டுமின்றி, இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல்கள் பற்றியும், உரோமத்தை மட்டுமே தந்து நல்ல வருவாயைத் தரக்கூடிய ஜெர்மன் அங்கோரா வகை முயல்களையும் வளர்த்து ஆய்வு செய்து வருகின்றனர். 

ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட விரும்புவோருக்கு இம்மையத்தில் கட்டணத்துடன் 5 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மிகக் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாயை ஈட்டக்கூடிய பண்ணைத் தொழில்களுக்கு இந்த மையம் ஆலோசனை தருகிறது. 

பாரத் மெரீனோ - இரு பயன்கள் கொண்ட செம்மறியாடு
இறைச்சி இன முயல் வளர்ப்பு 
செம்மறியாடு, முயல்களுக்கு புல் மற்றும் தீவனப் பயிர்கள் 
தென் மண்டல ஆராய்ச்சி மையம் - ஒர் அறிமுகம் 

தொடர்புகொள்ள : 

பொறுப்பு அலுவலர், 
தென் மண்டல ஆராய்ச்சி மையம், 
மன்னவனூர் அஞ்சல்
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம். 
செம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்

தென் மண்டல ஆராய்ச்சி மையம், தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு உயர் ரக ஆடுகளை வளர்த்து அவற்றின் மூலம் தரமான செம்மறி ஆடுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இங்குள்ள மேய்ச்சல் நிலங்களில் முயல் மற்றும் ஆடுகளுக்கு தேவையான உயர் ரக புற்களையும் உயர் ரக தீவனப் பயிர்களையும் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதன்முதலாக 1973 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 56 ஹெக்டேர் நிலங்களில் களைச் செடிகள், புதர்கள் மற்றும் தடிமனான புல் புதர்கள் எரிக்கப்பட்டு நிலம் தயார் செய்யப்பட்டது. இந்நிலத்தில் சீமைக்கரையான் (Kikiyu), சிவப்பு குளோவர், குதிரை மசால் மற்றும் காக்ஸ்புட் என்னும் புற்களும், தீவனப்பயிற்சிகளும் பயிரிடப்பட்டன. இத்துடன், காய்கறி வகைகளான காரட், முட்டைகோஸ் மற்றும் பீட்ரூட் ஆகிய பயிர்கள் வளர்க்கப்பட்டன. இப்பயிருக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தேவையான உழவியல் செயல்கள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் மன்னவனூர் ஒரு வளமான பூமி என அறியப்படுகிறது. இதில் சிறந்த முறையில் குறைந்த செலவுகளுடன் கீழ்க்காண்கின்ற பல்வகையான புல் மற்றும் இதர தீவனப் பயிர்களை விளைவித்து அதன் மூலம் லாபகரமான ஆடு மற்றும் முயல் வளர்ப்பை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.

பயிர்களின் வளர்ச்சித் தன்மைகள் : பங்கோலா புல் (படர்புல்) (Pangola grass) :

இது படர்ந்து வளரக்கூடிய குறைந்த இலைகளையுடைய மற்றும் பனியினால் தாக்கப்படக்கூடிய புல்வகை என அறியப்பட்டது.

பாஸ்பேலம் டைலேட்டேட்டம் (அகன்ற இலைப்புல்) (Paspalum dilatatum) :

இது நல்ல இலை வளர்ச்சியும், தரையோடு தொட்டுக்கொண்டு வளரும் தன்மையும் கூடியது. இதன் இலை அகன்றும், மிருதுவாகவும், பனி எதிர்ப்பு சக்தியுடையதாகவும், எப்போதும் பசுமையுடனும் இருப்பதால் இது மன்னவனூர் நிலத்தில் ஓர் உபயோகமான புல் என அறியப்படுகிறது.

கினியா புல் (Guinea grass) :

இந்த மேல்நாட்டு புல் வகை மிவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஸ்டைலோசான்தஸிஸ் கிராசில்லிஸ் (Stylosanthesis gracilis) :

இத்தீவனப் பயிர் வளர்ச்சி குறைவாக இருந்த போதும் வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும்.

செடோரியா புல் (Setaria Sp.) :

இப்புல்லின் இலைகள் நீண்டும், அகன்றும், இளமையாகவும், மிருதுவாகவும், வளர்ந்த தன்மையுடையதாகவும், அதிக விதைகளை உருவாக்கும் தன்மையுடையதாகவும், பனி எதிர்ப்பு தன்மையும் இருப்பதால் இது மிகவும் பொருத்தமான புல் வகை என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

சில்வர் வெள்ளி இலை டெஸ்மோடியம் (Silverleaf desmodium) :

இந்த தீவனப்பயிர், மழைக்காலத்தில் மிக அதிக அளவில் வளர்ந்து அதிகமான இலைகளுடன் எளிதில் மேய்ப்பு நிலத்தில் பரவக்கூடியது. ஆடுகள் இதை மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. ஆயினும், இது பனி எதிர்ப்பு தன்மையற்ற தீவனப்பயிர்.

டாலிகாஸ் ஆக்சில்லரீஸ் (Dolichos axilaries) :

இத்தீவனப்பயிர் மிக அதிக அளவில் வளர்ந்து, அகலமான மற்றும் மிருதுவான இலைகொண்டது. மேய்ச்சல் நிலத்தில் இவை நன்கு வளரும். ஆயினும், பனி எதிர்ப்பு திறன் குறைவு.

ஓட்ஸ் (Oats) :

இத்தீவனப் பயிர் அகன்ற மிருதுவான இலைகளைக் கொண்டதாகவும், நல்ல உயரத்துடன் வளர்கிறது. ஒரு முறை பயிரிட்டால் 3 அல்லது 4 முறை இவற்றிலிருந்து இலைகளை அறுவடை செய்து ஆடு மற்றும் முயல்களுக்கு கொடுக்கலாம். அவைகள் இத்தீவனத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அவற்றின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது பனி எதிர்ப்பு திறன் உடையது.

குதிரை மசால் (Lucerne / Alfalfa) : 

பனி எதிர்ப்புத் தன்மை உடையது. நாடு முழுவதும் அதிக புரதசத்து வாய்ந்த தீவனப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு முறை பயிரிட்டால் தொடர்ந்து அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். இது அடர் தீவனத்திற்கு சமமான உணவாகும்.

அடைலோசியா (Atylosia) : 

இத்தீவனப் பயிர் பனி எதிர்ப்பு தன்மையுடையதாகவும், அதிகமான மற்றும் மிருதுவான இலைகளையுடையதாகவும் அறியப்படுகிறது. இவற்றின் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. அதிக விதைகள் கிடைப்பதால் இவற்றை மிக சுலபமாக இனவிருத்தி செய்யலாம்.

மல்பரி (Mulberry) :

பட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு பயன்படும் இச்செடிகளின் இலைகள் முயலிற்கும், ஆட்டிற்கும் மிக பயனுள்ள உணவாகும். மல்பரி மர வகையாக இருந்தபோதிலும், அவ்வப்போது அதிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பறித்து ஒரு புதர் போல் வளர்க்க முடியும். இதுவும் பனி எதிர்ப்பு திறன் கொண்ட அகன்ற மற்றும் மிருதுவான இலை கொண்ட தீவனப் பயிராகும்.

நேப்பியர் புல் (Napier grass) :

இத்தீவனப் பயிர் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவலாகப் பயிர்செய்யப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது. இது ஓர் அடர்த்தியான புதராக நீண்ட மிருதுவான இலைகளை உடையதாக உள்ளது. ஒரு முறை பயிரிட்டால் 4 முதல் 5 வருடங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். மன்னவனூரில் முதன்முறையாக பயிரிடப்பட்டதில் இதன் பனி எதிர்ப்பு தன்மை சிறிது குறைவாக உள்ளதென அறியப்பட்டுள்ளது. இதன் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன.

குதிரை மசால் மரம் (Tree Lucerne) :

இந்த மரக்கன்றுகள் ஊட்டியிலிருந்து எடுத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இது நன்கு உயரமாகவும், அதிகமான கிளைகளையும் கொண்டதாக உள்ளது. இதன் இலைகள் சிறியதாகவும், மிருதுவாகவும் உள்ளதால் முயல் இதை விரும்பி உட்கொள்கிறது. இதில் அதிக விதைகள் உற்பத்தியாவதால் இப்பயிரை எளிதில் இனி விருத்தி செய்யலாம்.

தொடர்பு கொள்ள :

பொறுப்பு அலுவலர்
தென் மண்டல ஆராய்ச்சி மையம்
மன்னவனூர் (அஞ்சல்)
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம்.
இறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நமது நாட்டிலும், முயல் வளர்ப்பதற்கான சாத்தியமான அம்சங்கள் நிறைய உள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இறைச்சி உற்பத்தியை பெருக்கிட முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும். முயல் கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வளர்க்கலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் ஏன் பலரும் முயல் வளர்க்க முன்வருவதில்லை என்பதை ஆராய்ந்தால் கீழ்க்கண்ட காரணங்கள் தெரிகின்றன. 

· முயல்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. 

· முயல் வளர்த்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும் என்ற தவறான கருத்து.

· முயலினை இறைச்சிக்காக வெட்ட அஞ்சுவது / பரிதாபப்படுவது. 

· முயல் பண்ணைத் தொடங்கிட போதுமான உதவிகள் கிட்டாமை. 

· விற்பனை வசதிகள் திறம்பட இல்லாத நிலை. 

· மானியத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை. 

மேற்கூறிய காரணங்கள் களையப்பட்டால் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் வளர்ப்பு வெகு விரைவாக பிரபலம் அடையும். 

முயல் இனங்கள் மற்றும் சாதகமான சூழ்நிலை : 

ஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லக்கூடிய இனங்கள் வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள். இவற்றில் அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காக குளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம். 

இறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்கலாம். தட்பவெப்பநிலை 36 ஊ வரைக்கும் இருக்கலாம். ஈரப்பதம் காற்றில் 70 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20 C) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்கச் சிறந்தது. 

முயல் இருப்பிடம் மற்றும் வளர்ப்பு :

முயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. (ஆழ்கூள முறையிலும் வளர்க்கலாம்). மூலதனம் குறைவான மரக்கூண்டுகளிலும் வளர்க்கலாம். வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 x 1.5 x 1.5') அளவுள்ள கூண்டும், பெண் முயலுக்கு (2.0 x 2.5 x 3.0') அளவுள்ள கூண்டும் ஏற்றது. இதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு சிறிய பாத்திரம் அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தீ உமிழி கொண்டு சுத்தம் செய்யலாம். முயல் சாணம் கூண்டுகளில் தங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். 

முயல் மிகவும் சாதுவான பிராணியாதலால், பள்ளி சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானது. முயல் வளர்க்க ஆரம்பிப்போர் முதலில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் முயல்கள் கொண்ட சிறு குழுவாக ஆரம்பிக்கலாம். முயல் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்த பின்னரே அதிக அளவில் முயல் வளர்க்க எண்ண வேண்டும். கொல்லைப் புறத்தில் வளர்க்க 1 ஆண் மற்றும் 3 பெண் முயல்கள் போதும். இதிலிருநது வாரந்தோறும் ஒரு கிலோ இறைச்சி கிடைக்கும். இது குடும்ப தேவைக்கு போதுமானது. கொல்லைப் புறத்தில் முயல் வளர்க்கும் சமையலறைக் கழிவுகள் மற்றும் பசுந்தீவனம் கொண்டே பராமரிக்கலாம். 

முயல் வளர்ப்பின் சிறப்பம்சம் : 

பசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும் இல்லை. முயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டது. கொலஸ்ட்ரால் மிக மிகக் குறைவு. இருதய நோயாளிகளும், முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி. முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லை. குறைந்த சினைக்காலம், அதிக குட்டிகள் ஈனும் திறன், துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள். நிச்சயம் லாபகரமான பண்ணைத் தொழில். ஆரம்பத்தில் சிறிய அளவில் பண்ணை அமைத்து, நல்ல அனுபவம் பெற்ற பின்னர் பெரிய அளவில் தொடங்கலாம். ஒரு நபர் 500 முயல்கள் வரைக்கும் பராமரிக்க முடியும். முன்னேற்றம் தரும் சிறந்ததொரு பண்ணைத் தொழில் முயல் வளர்ப்பு.

கிடைக்குமிடம் : 

கொடைக்கானல் தாலுக்கா, மன்னவனூரில் இயங்கிவரும் மத்திய அரசுப் பண்ணையில் இனவிருத்திக்கான முயல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பதிவின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இறைச்சியின முயல்கள் வெள்ளை ஜெயண்ட், சோவியத் சின்சில்லா மற்றும் உரோம இன முயல் அங்கோரா ஆகியன உள்ளன. முயல் வளர்ப்பதற்கான பயிற்சியும், தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், சாண்டிநல்லா என்ற இடத்தில் இயங்கிவரும் ஆட்டின இனவிருத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கூட முயல்களை இன விருத்திக்காக வாங்கலாம். 

வங்கியில் கடன் உதவி : 

அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் முயல் வளர்க்க கடன் உதவி பெறலாம். கடன் பெறுவதற்கு முன், வளர்ப்பதற்கான செலவுகள் மற்றும் நிகர லாபம் அடங்கிய திட்டத்தை சமர்ப்பித்து கடன் பெறலாம். ஆயுள் காப்பீடு வசதியும் முயல்களுக்கு உள்ளது.

முயல்களை இனவிருத்திக்காக விற்பனை செய்யலாம். உபரியான முயல்களை இறைச்சிக்குப் பயன்படுத்தலாம். உயிர் எடையில் குறைந்தபட்சம் 50ரூ இறைச்சி கிடைக்கும். முயல் தோலை பதப்படுத்தி, கைவினைப் பொருட்கள் செய்யலாம். இதில் தொப்பி, மேலாடைகள், பர்ஸ், சாவிக் கொத்து, கவர் முக்கியமானவை. முயல் எரு சிறந்த எருவாக கருதப்படுகிறது. இதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். சொந்த நிலம், தண்ணீர் வசதி, பசுந்தீவன வசதியுடைய விவசாயிகள், முயல் வளர்ப்பை ஆரம்பித்தால் நிச்சயம் கூடுதல் வருவாய் கிடைக்கும். நமது நாட்டின் இன்றைய இறைச்சித் தேவையை பூர்த்தி செய்யலாம். 

முயல் வளர்ப்பு - ஆதாயம் : 

இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கிய சிறிய முயல் பண்ணை அமைக்க ஆகும் செலவினங்கள் மற்றும் வருவாய் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

அனுமானங்கள் :

· கூண்டுகளில் அடைக்கப்பட்ட முயல்கள் 500 எண்ணிக்கை வரையில் ஒரே நபர் அன்றாடம் பராமரிக்க முடியும் என்பதால் கூலிக்கு தனியாக ஆள் தேவையில்லை. 

· ஒவ்வொரு பெண் முயலிடமிருந்து வருடத்திற்கு 30 குட்டிகள் பெறலாம். 

· இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கியது ஒரு குழுவாகும். 

· சராசரியாக பத்து பெண் முயல்களை இனச்சேர்க்கை செய்தால் எட்டு முயல்கள் ஒவ்வொரு முறையும் சினையாகும். 

· குட்டிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 240 (8 முயல்கள் ஒ 30 குட்டிகள்)

· குட்டிகளில் இறப்பு விகிதம் 10ரூ (24 குட்டிகள்)

· முயல் தீவனத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.13.00

· குட்டிகளை விற்கும் வயது - 3 மாதங்கள்

· குருணைத் தீவனம் உட்கொள்ளும் அளவுகள் (கிலோ)

ஆண் முயல்கள் 2 x 100 கி x 365 நாட்கள் = 73
பெண் முயல்கள் 10 x 150 கி x 365 நாட்கள் = 548
குட்டி முயல்கள் 216 x 50 கி x 60 நாட்கள் = 648
மொத்தம் = 1269

1. நிரந்தர மூலதனம் (ரூபாயில்)

முயல் கொட்டகை அமைக்கச் செலவு 
400 சதுர அடி. ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.25.00 வீதம் 10,000.00

முயல் கூண்டுகளின் விலை 
10 தனிக் கூண்டுகள் (1.5 x 1.5 x 1.5') ஒன்று ரூ.200 வீதம் 2,000.00

குட்டிகள் போடுவதற்கு 
கூண்டுகள் (2 x 2.5 x 3.0') 20 எண்ணிக்கை ஒன்று ரூ.400 வீதம் 8000.00

தீவன கலன்கள் 
50 எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00

தண்ணீர் தட்டுகள் 
50 எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00

இனவிருத்திக்கான 2 ஆண் = 10 பெண் முயல்களின் விலை ரூ.180 வீதம் 2160.00

இதர பொருட்கள் (தீ உமிழி, பக்கெட் முதலியன) 580.00

மொத்தம் 23,240.00

2. நிரந்தரச் செலவினங்கள் 

முதலீட்டிற்கு வட்டி 12% ஆண்டிற்கு = 2760.00
கொட்டகை மற்றும் கூண்டுகள் 
தேய்மானச் செலவு 12% ஆண்டிற்கு = 2460.00

மொத்தம் = 5220.00

3. நடைமுறைச் செலவுகள் 

அடர் தீவனத்தின் விலை ரூ.13.00
கிலோ வீதம் 1270 கிலோவிற்கு = 16510.00
மருத்துவச் செலவு = 1000.00
இதரவ செலவுகள் 
(சுண்ணாம்பு, தேங்காய் நார் முதலியன)= 1490.00

மொத்தம் = 19000.00

4. மொத்த செலவினங்கள் (2+3) = 24220.00

வருவாய் விவரங்கள் 

216 முயல் குட்டிகளை மூன்று மாத வயதில் ரூ.150 வீதம் விற்பதன் மூலம் 32,400.00
கழிக்கப்பட்ட முயல்களின் மூலம் 275.00
இறந்த குட்டிக்ளின் தோல் விலை ரூ.5 வீதம் 120.00
முயல் சாணத்தின் விலை 500.00
தீவனச் சாக்குகள் விலை 250.00

மொத்த வருவாய் 33,545.00

நிகர லாபம் 

ஆண்டு மொத்த வருவாய் 33,545.00

மொத்த செலவினங்கள் (நிரந்தரச் செலவு + நடைமுறைச் செலவு) 24,220.00

நிகர லாபம் ஒரு ஆண்டிற்கு 9,325.00

குறிப்பு :ஒரு நபரின் முழு நேர வேலை வாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 20 ஆண் முயல்கள் +100 பெண் முயல்கள் வளர்க்கும் பொழுது ஒரு ஆண்டிற்கு நிகர லாபம் ரூ.93,250.00 கிடைக்கும். 

தொடர்பு கொள்ள :

தென் மண்டல ஆராய்ச்சி மையம்
மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையம்
(இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)
மன்னவனூர்
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம்

சனி, 27 ஜூலை, 2013

மனதை லேசாக்கும் அலங்கார புறாக்கள்!
''உறையூர் வாங்க... இங்கே புறா கார்த்திகேயன்னு ஒருத்தர் இருக்கார்...'' என்று வாசகி உமா 'வாய்ஸ் நாப்’பில் அழைத்த அடுத்த அரை மணி நேரத்தில் நாம் அங்கு இருந்தோம். வீட்டில் நுழையும் முன்னரே படபடவெனச் சிறகடித்து, ஒலி எழுப்பி நம்மை வரவேற்றன விதவிதமான அலங்காரப் புறாக்கள்.
 
'அலங்கார மீன், அலங்காரப் பறவை, உயர் சாதி நாய்கள் வளர்ப்புபோல் அலங்காரப் புறா வளர்ப்பும் அதிகரித்துவருகிறது. இந்த அலங்காரப் புறாக்கள்,  400-ல் இருந்து  1,50,000 வரை சந்தையில் கிடைக்கின்றன' என்று பேச்சை ஆரம்பித்தார் கார்த்தி கேயன்.
கார்த்திகேயனிடம் 20-க்கும் மேற்பட்ட வகைகளில் அலங்காரப் புறாக்கள் உள்ளன. சைனீஸ் அவுல், ஜெர்மன் நன், பிரெஞ்ச் மோதினா, இங்கிலீஷ் மேக் என வெளிநாட்டு வகைப் புறாக்களுடன் ரோமர், முஸ்கி, டிரம்பட், பேன் டைல், சுபாஷ், பொகாரோ, எக்ஸிபிஷன் ரோமர், கிங் என இந்திய வகைப் புறாக்களும்  இவரிடம் வளர்கின்றன. இந்தப் புறாக்களைச் சென்னை, பெங்களூரு, மதுரை தூத்துக்குடி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து வாங்கி  வந்து வளர்த்துவருகிறார்.
'என்னுடைய தாத்தா ரெங்கையா புறா வளர்ப்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே பொழுதுபோக்காக ஆக்கிக்கொண்டவர். அவர் பந்தயப் புறாக்களையும் சாதாரணப் புறாக்களையும் வளர்த்துவந்தார். தாத்தாவுக்குப் பிறகு அப்பா ராமசாமி, அவருக்குப் பிறகு நான் என, மூன்று தலைமுறையாகப் புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அலங்காரப் புறாக்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறேன். இப்போது இது நமக்குப் பொழுதுபோக்கு இல்லை; பொருளாதார ஆதாரமாகவே மாறிவிட்டது'' என்கிற கார்த்திகேயன், 'புறாக்களைப் பார்க்கும்போதே மனதில் ஒரு நிம்மதியும் அமைதியும் உருவாகும்' என்கிறார் பெருமிதம் பொங்க.
புறாக்கள் மென்மையான சுபாவம் கொண்ட பறவைகள். சிறிய அதிர்ச்சியைக்கூட அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. கழுகு, காகம் போன்ற சக பறவைகளே இவற்றை உணவாக்கியும் கொள்வதால், புறா இனம் அருகிவருகிறது. ரோமர் வகைப் புறாக்களிடம் குழந்தைப் பராமரிப்புகுறித்த கவனம் அதிகம். அதனால் உயர் வகை புறா முட்டைகளை அடுக்கிவைத்து ரோமர் புறாக்களை அடைகாக்க வைத்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கின்றனர். இடி, மின்னல், வெடிச் சத்தம், புயல், மழை, கடும் பனி, அதிக வெயில் இவற்றால் அடைகாக்கப்படும் முட்டைகள், குஞ்சு பொரிக்காமல் கூழாகிவிடுமாம். போராட்டத் துக்குப் பிறகே ஒரு அலங்காரப் புறா, முட்டையில் இருந்து குஞ்சாக வெளிவருகிறது.
'இந்த அலங்காரப் புறாக்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் கொண்டவை. அதனால் கவனமாகப் பராமரிக்க வேண்டும். வாரம் இருமுறை புறாக்களின் மீது வெயில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றின் மீது தொற்றுண்ணிகள் பரவாமல் தடுக்க முடியும். புறாக் கூண்டு, அவை உலவும் இடங்கள், உணவு, தண்ணீர் பாத்திரங்களை வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்யத் தவறக் கூடாது' என்று புறாப் பராமரிப்புகுறித்து ஆர்வமுடன் விளக்குகிறார் கார்த்திகேயன்.
கார்த்திகேயனிடம் உள்ள டிரம்பட் வகையைச் சேர்ந்த புறாவின் சத்தமே டிரம்பட் வாசிக்கும்போது எழும் ஒலிபோல் இருக்கிறது. பிரெஞ்ச் மோதினா வகை புறா, கோழி போன்ற வடிவத்தில் இருக்கிறது. சைனீஸ் அவுல் புறாவின் கண்கள் பெரிதாகவும் மூக்கு மடங்கியும், சுபாஷ் வகை புறாக்கள் தினமும் இரண்டுமுறை குளித்து எப்போதும் பளிச் என்றும் காணப்படுகின்றன. இந்தியன் ஃபேன் டைல் வகை அவ்வப்போது மயில்போலத் தோகையை விரித்து ஆடுவதுபோல் சிறகை விரித்து உலவிக்கொண்டு இருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போதே மனம் லேசாகிறது. நமக்கும் சிறகு முளைக்கிறது. கவலைகளை மறந்து அந்தப் புறாக்களோடு நமது மனதும் சேர்ந்து பறக்கிறது!''
-அ.சாதிக்பாட்சா 
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

வியாழன், 25 ஜூலை, 2013

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு!


நாட்டுக் கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, 
காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பெரும் இலாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது. 
அங்கீகரிக்கப்பட்ட நாட்டுக்கோழிகள் 
யாவை?  சிறந்த முட்டைக் கோழியைத் 
தேர்வு செய்வது எவ்வாறு? எந்த வகை 
நாட்டுகோழியில் சுவை அதிகம்? எந்த 
நாட்டுக்கோழியில் மருத்துவக் குணம் 
அமைந்துள்ளது? நாட்டுக்கோழிகளைப் 
பண்ணை முறையில் வளர்த்து இலாபம் 
ஈட்ட முடியுமா? மருத்துவக் குணம் உள்ள 
கோழிகள் இந்தியாவில் கிடைக்கின்றனவா? 
 
நாட்டுக்கோழியிடும் முட்டைக்கும், 
வெள்ளை முட்டைக்கும் உள்ள வித்தியாசம்? 
அடைக்கு வைக்கும் முட்டைகள் அனைத்தும் 
ஏன் குஞ்சு பொரிப்பதில்லை? 
நாட்டு முட்டையில் சத்து அதிகமா, 
வெள்ளை முட்டையில் சத்து அதிகமா? 
பழுப்பு நிற முட்டைகள் ஏன் அதிக விலையில் 
விற்கப்படுகின்றன? 
 
கோழிகளுக்கு நோய் வரக் காரணம் என்ன? 
நோய் வராமல் தடுக்க வழி உண்டா? 
அலங்காரக் கோழிகள் என்றால் என்ன? 
சமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் என்றால் 
என்ன? கோழிப்பண்ணையில் அதிக 
செலவைக் குறைக்க வழி உண்டா? 
சமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் நாமே
தயாரிக்க முடியுமா? கோழிகள் தோல் 
முட்டையிடுவதன் காரணம் என்ன? 
என்பனபோன்ற மேலும் பல 
வினாக்களுக்கு விடை தருகிறது இந்நூல்!
 
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:  blackholemedia@gmail.com 
செல்பேசி:   +91 9600123146,       
விலை ரூ-150/-
நூலாசிரியர் முனைவர்.கு.நாகராசன் பற்றி...
இவர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ 
அறிவியல் பல்கலைக் கழகத்தின் 
அங்கமான கோழியின உற்பத்தி மற்றும் 
மேலாண்மை நிலையத்தில் 
பணியாற்றியவர். தற்பொழுது சென்னை 
கால்நடை மருத்துவக் கல்லூரியில் 
துணைப் பேராசிரியராகப் பணி செய்து 
வருகிறார். 
சமீபத்தில் உலகையே பீதியில் ஆழ்த்திய 
பன்றிக்காய்ச்சல் நோயை இந்தியப் 
பன்றிகளில் முதன்முதலில் கண்டறிந்து 
அந்நோய் மேலும் பரவாமல் தடுக்கும் 
உத்திகளைக் கூறியுள்ளார். அதற்காக 
முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் 
இவர் அறிவியல் சார்ந்த பல ஆராய்ச்சி 
மற்றும் பொதுக் கட்டுரைகளை உலகப் 
பிரசித்திப் பெற்ற ஆராய்ச்சி நூல்களில் 
எழுதியுள்ளார். நாட்டுக் கோழி வளர்ப்பு, 
கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, 
காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி 
வளர்ப்பு ஆகியவற்றைக் குறித்து 
வானொலி மற்றும் தொலைக் காட்சி 
நிகழ்ச்சிகளில் மக்களுக்கு வழங்கியுள்ளார். 
மேலும் இந்திய அரசாங்கத்தின் பல 
விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
நூல் குறித்து தினத்தந்தி (7.03.2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:
நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, அலங்காரக்கோழி வளர்ப்பு  ஆகியவற்றின் மூலம் பெரும் லாபம் ஈட்ட முடியும் என்பதையும், நாட்டுக்கோழி வகைகள், கோழிகளுக்கு வரும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகள் ஆகியவற்றையும் இந்த நூலில் கால்நடை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் முனைவர் கு.நாகராசன் விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த நூல், கோழி வளர்ப்பில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த கையேடு.
 
நூல் குறித்து தினமணி (12-03-2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:
நாட்டுக்கோழி வளர்ப்பது மிகவும் குறைந்து விட்ட காலத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பதனால் இலாபம் கிடைக்கும் என்று கூறும் நூல். இந்தியாவில் என்னென்ன கோழியினங்கள் உள்ளன? நாட்டுக்கோழி என்று எந்த வகைக்கோழிகளைக் குறிப்பிடுகிறோம்? கோழிகளுக்கு வரும் நோய்கள் எவை? அவற்றை எவ்வாறு தீர்ப்பது? கோழிகளுக்கு எப்படிப்பட்ட உணவுகள் தர வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் கூறும் நூல். நாட்டுக்கோழி வளர்ப்புடன் கூட, கூஸ் வாத்து வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, ஜப்பானியக்காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு பற்றிய கட்டுரைகளும் உள்ளன. கோழி வளர்ப்பைப் பற்றிய அறிவியல்பூர்வமான தகவல்களைச் சொல்லும் இந்நூல், கோழிகளின் மீது, ஆசிரியருக்கு உள்ள ஈடுபாட்டையும், அன்பையும் வெளிப்படுத்துவது சிறப்பு.