நல்ல மட்டன் ( இறைச்சி) வாங்குவது எப்படி?
ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்!
நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்!
உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி!
கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’ ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும்.
மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(கொஞ்சம் சிரமம் தான்), உண்மையில் நல்ல மட்டன் வாங்க இதோ டிப்ஸ்கள்!
செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா?மட்டன் (Mutton) என்று சொல்லப்படுவது செம்மறி ஆடு இறைச்சிதான்.
சவான் (Chevon) என்றால்தான் வெள்ளாட்டு இறைச்சி.
நமக்கு செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா? என்று முடிவு செய்யுங்கள்?
நிறைய பேர் வெள்ளாடு இறைச்சியைதான் விரும்புகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை! ஆனால் செம்மறி ஆடு இறைச்சிதான் மிகவும் ருசியானது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை!
எல்லோரும் வெள்ளாடு இறைச்சி வேண்டும் எனக் கேட்பதால் கசாப்புக்கடைகாரர் செம்மறி ஆட்டின் வாலில் கருப்பு மை தடவியும், அல்லது வேறு வெள்ளாடு வாலை செம்மறி ஆட்டின் வாலிற்கு பதிலாக சொருகி பாவலாகாட்டும் கசாப்புகடையும் உண்டு. வெள்ளாடு இறைச்சிதான் வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் காசாப்பு கடையில் தொங்கும் இறைச்சியின் வாலை தொட்டு மை தடவி உள்ளதா என பாருங்கள், அல்லது ஒட்டு வாலா என அறிய இழுத்து பாருங்கள். ஒரு சில கில்லாடி கடைகாரர் கருப்பு நிறம் ஆக்க ஹேர் டை அடித்துவிடுகிறார்கள் தொட்டாலும் கண்டுபிடிக்கமுடியாது! மேலும் ஒட்டல் வால் பகுதியை உள்பக்கமாக தைத்துவிடுவார்கள் அதுவும் எளிதா கண்டுபிடிக்கமுடியாது! எனவே செம்மறி ஆடு இறைச்சியை கண்டு பிடிக்க ஒரே டிப்ஸ் இறைச்சியில் கடைகாரர் எவ்வளவுதான் கழுவினாலும் லேசாக அதன் ரோமங்கள் ஒட்டிகொண்டிருக்கும் அதை உன்னிப்பாக கவனித்து இது செம்மறி ஆடு இறைச்சி எனக் கண்டு பிடிக்கலாம்! அது இல்லாதது வெள்ளாடு! மேலும் செம்மறி ஆடா, வெள்ளாடா, அல்லது மாட்டிறைச்சியா என கண்டுபிடிக்க என்சைம் பரிசோதனை, பைபர் எண்ணிக்கை பரிசோதனை,அனட்டாமிக்கல் பரிசோதனை பல பரிசோதனைகள் இருந்தாலும் அவைகள் கால்நடை மருத்துவர்களால் மட்டும் முடிந்தவைகளாக உள்ளது. ஒரு அதிர்ச்சி கொசுறு செய்தி, ஒரு நாயின் தலையை,கால்களை துண்டித்துவிட்டு தோலை உரித்துவிட்டு தொங்கவிட்டால் அசல் வெள்ளாட்டு இறைச்சி போன்றே இருக்கும்.இதை கண்டுபிடிக்க நிச்சயம் கால்நடை மருத்துவரின் உதவி தேவை! முனிசிபல் மற்றும் கார்ப்பரேஷன் பகுதியில் கால்நடை மருத்துவர் இறைச்சியை பரிசோதித்து அதன் தொடை பகுதியில் அவர் பணிபுரியும் நிலையத்தின் முத்திரையை பதித்திருப்பார், தலையில் நெற்றி பகுதியில் அரக்கு சீல் இருக்கும் இவைகளை கவனித்து வாங்கலாம். தலையில் இருக்கும் முத்திரை அந்த ஆட்டை உயிருடன் இருக்கும் பரிசோதனை செய்ததற்கான அடையாளம்.இந்த அடையாளம் இருந்தால் தான் இறைச்சி கூடத்திற்குள் ஊழியர்கள் அனுமதிப்பார்கள். அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது கால்நடை மருத்துவரால் மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டுள்ள முத்திரை!
இளம் இறைச்சியா? கிழட்டு ஆட்டு இறைச்சியா?தொங்கி கொண்டிருக்கும் இறைச்சியின் கழுத்து பகுதியை உன்னிப்பாக கவனியுங்கள். 1)கழுத்து பகுதி தடிமனாக பெரிதாக இருந்தால் அது வயதானதாக இருக்கலாம். இந்த இறைச்சி வேகவைக்க சிரம்ம படவேண்டும்
2) கழுத்து பகுதி மிகவும் சிறிதாக இருந்தால் இது குட்டியா இருக்கலாம் அல்லது சரியான வளர்ச்சியில்லா சவலை ஆடாக இருக்கலாம். இந்தவகை வளவளப்பாக பசை இல்லாமல் இருக்கும். இதுவும் நமது சமையலுக்கு ருசிசேர்க்காது.
3)மிதமான கழுத்து உள்ள இறைச்சி நமது சமையலுக்கு உகந்தது. நமக்கு மனைவியிடமிருந்து வசைகளையும் குறைக்கும்.
4)கழுத்தின் வெட்டு பட்ட பகுதி ஐஸ் கிரீமை வெட்டியது போல் (Smooth cuting) இருந்தால் முன்பே இறந்த ஆட்டினை வாங்கி கசாப்பு செய்திருக்கிறார்கள் என அனுமானிக்கலாம். இதையும் நமது ஆரோக்கியத்தை எண்ணி தவிர்க்கலாம்.
5) கழுத்தின் வெட்டு பகுதி பிசிறுகளுடன் மேலும் இறைச்சி இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நல்லது.
6) கிட்னியை சுற்றி கொழுப்பு சூழ்ந்துள்ளதா எனப் பார்க்கவேண்டும். இது போஷாக்காக வளர்க்கப்பட்டுள்ளதற்கான் அடையாளம்.
7) பொதுவாக ஆண் கிடாதான் கசாப்புக்கு விற்பனைக்கு வரும். அதனால் சிறிதாக இருந்தால் இளம் குட்டி! பெரிதாக கெட்டியாக இருந்தால் வயதானதாக இருக்கலாம். இதை வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என நினைக்கவேண்டாம். அப்படியெல்லாம் இல்லை.
8) தொங்கப்பட்டுள்ள ஆட்டில் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம். பொதுவாக இளம் பெட்டை ஆடுகள் இனப் பெருக்கத்திற்கு பட்டியில் வைத்துக்கொள்வதால் இந்த வயது பெட்டை ஆடுகள் கசாப்புக்கு வருவதில்லை. வயதான, நோயுற்ற, குட்டி போடமுடியால் இறந்துவிட்ட பெட்டை ஆடுகள்தான் விற்பனைக்கு வருகிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
எந்த பகுதி இறைச்சியை வாங்கலாம்?சிலர் தொடை கறியை மட்டும் கொடுங்கள் என்று வாங்குவார்கள் அந்த பகுதி கொஞ்சம் வேகுவதற்கு நேரம் அதிகம் ஆகும். ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி, தொடை பகுதி,சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்கும்மாறு வாங்குவது நல்லது. இளம் சிகப்பு ( ரோஜா) நிறம் இறைச்சியாக இருந்தால் நன்று. கொஞ்சம் டார்க்காக இருந்தால் அது கிழடாக இருக்கலாம் இதை வேகவைக்க சோடா உப்பு, பப்பாளி காய் என பல டிப்ஸ்கள் தேவைபடும். மேலும் சாப்பிட்டுமுடித்துவிட்டு பல் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் இறைச்சி துகள்களை அகற்றும் வேலை பிரதானமாக இருக்கும். ஆடு அறுக்கும்போதே அருகில் காத்திருந்து சுடசுட அந்த இறைச்சியை வாங்கிவந்து வேகவைத்தால் அது இளம் ஆடாக இருந்தாலுமே வேகவைக்க சிரமப்படவேண்டும். ஆடுகள் அறுக்கப்ட்டு சில மணிநேரங்கள் தோங்கவிடும் போதுதான் தசைபகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகி சமைக்க தயாராகிறது.எனவே அப்படி வாங்கி வந்த இறைச்சியை நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணி நேரம் வைத்திருந்து பிறகு சமைக்கலாம்.
இரத்தம், குடல் வறுவல் அபிமானிகளுக்கு ஒருவேண்டுகோள் இதில் சத்துக்களும் குறைவு, ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது இல்லை. ஆசையாக இருந்தால் சில நாட்கள் சாப்பிடலாம். ஆனால் நன்றா சமைத்து!
இந்த ஞாயிறு இந்த டிப்ஸ்களுடன் கசாப்புகடைக்கு வீறுகொண்டு செல்லுங்கள். நல்ல தரமான மட்டன் வாங்குங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்குங்கள்! டிப்ஸ்கள் வழங்குவது எளிது! கசாப்புகடைகாரரின் மீசையை கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் அவரின் கசாப்பு வெட்டு கத்தியின் மேல் ஒரு கண் இருக்கட்டும். பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல் நீங்கள் குறிப்பிடும் இறைச்சியை தைரியமாக கேட்டு வாங்குங்கள்! இல்லை என்றால் கடையை மாற்றுங்கள்!! என்னுடைய டிப்ஸ்களை நீங்கள் நடை முறைப்படுத்தி வாங்க முயற்சித்து கடைகாரர் மூலம் இலவசமாக கிடைக்கும் திட்டுகளோ, இரத்தக் காயங்களுக்கு ஆசிரியர் குழு பொறுப்பு இல்லை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக