ஆடுகளை நாம் கறிக்காக வளர்ப்பதால் நல்ல ஆரோக்கியமான வளமான ஆடுகளையே வாங்கி வளர்க்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ற ஆடுகளை வாங்கி வளர்க்கலாம். சினை ஆடுகளாக வாங்கினால் நாம் வாங்கியவுடன் அவற்றிலிருந்து குட்டிகளை பெறலாம். பெட்டை ஆடுகளை வாங்கும் பொழுது அவை 1 வருடம் நிரம்பியவைகளாக வாங்க வேண்டும். இளம் குட்டிகளாக வாங்கும் பொழுது 3 மாதத்திற்கு மேலான வளமான குட்டிகளை வாங்கி வளர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு 1 கிடா என்ற விகிதத்தில் ஆடுகளை வளர்க்க வேண்டும். கிடாக்கள் திடகாத்திரமாகவும், பெட்டை ஆடுகளை சினைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பண்ணையில் கிடா ஆடுகள்தான் முக்கியமானதாகும்.தீவனம் : ஆடுகளை மேய்ச்சலுக்கு மட்டுமே அனுப்பி வளர்த்து வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் புற்கள் அதிகம் இருப்பதால் மற்ற காலங்களில் ஆடுகள் வளமாக இருக்காது. எனவே ஆடு வளர்ப்போர் தேவையான தீவனப்புற்கள் மற்றும் வேலி மசால் போன்ற தீவனப்பயிர்களை வளர்த்து ஆடுகளுக்கு கொடுக்கலாம். ஆடுகளை தினமும் ஒரே இடத்தில் மேய்க்காமல் வேறு வேறு இடங்களில் மேய்க்க வேண்டும். கோடைகாலங்களில் சுமார் 10 மணிநேரங்களாவது மேய்க்க வேண்டும். மேலும் அவைகளுக்கு அடர்தீவனமும் கொடுக்கப்பட வேண்டும். வெள்ளாடுகள் கசப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு போன்ற சுவைகளை அறியும் திறன் பெற்றவை. தீவனம் சுத்தமாகவும், புதியதாகவும் இருப்பதை விரும்பும். விதவிதமான மர இலைகள், செடிகள், மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை உண்ணும். ஆடுகளுக்கு பசுந்தீவனங்கள் (புற்கள் மற்றும் மரத்தழைகள்) கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அதாவது கோ-1, கோ-3, கினியா புற்களை கொடுக்கலாம். மேலும் மரதழைகளான வேலிமசால், சூபாபுல், அகத்தி, கிளரிசிடியா, கொடுக்காபுளி, வேப்பமரஇலை, ஆலமரம், கருவேலமரம், பூவரசு, காட்டுவாகை, பலாமரம் இலை முதலியவைகளை கொடுக்கலாம். அடர்தீவனமும் ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும்.அதாவது குட்டிகளுக்கு 50 கிராம், வளரும் ஆடுகளுக்கு 100 கிராம், பெரிய ஆடுகளுக்கு 200 கிராம் என்ற அளவில் தினமும் கொடுக்க வேண்டும். குட்டிகள் பிறந்த 20 நாட்களுக்கு பிறகு சிறிது சிறிதாக புற்களை கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அடர்தீவனத்துடன் பயிறு வகைப் புற்கள் அதாவது ஸ்டைலோ, வேலிமசால் போன்றவற்றை தீவனமாகக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.தகவல் : டாக்டர்.ரிச்சர்ட் ஜெகதீசன், பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், TANUVAS-புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக