யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

செண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்

செண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்


நல்ல வடிகால் வசதியுடன் கூடிய எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப்பிரதேசங்களில் பயிரிடலாம். ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம்.

பிரத்யேக ரகம் - மேக்ஸிமா யெல்லோ. நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம் இடவேண்டும். பின் 15 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். விதையளவு: எக்டருக்கு 15 கிலோ.நடும் பருவம்: ஆண்டு முழுவதும். இருந்தாலும் ஜூன் - ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றது.

நாற்றங்கால்: நிலத்தை 2-3 முறை நன்கு உழுது கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் இட்டு நன்கு கலக்கிவிட வேண்டும். விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்து பின் 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை வரிசையில் பாத்திகளில் விதைக்க வேண்டும். மண் கொண்டு மூடி உடன் நீர் பாய்ச்ச வேண்டும். 7 நாட்களில் முளைத்துவிடும். 30 நாட்கள் ஆனவுடன் நாற்றுக்களை பிடுங்கி நடவேண்டும்.

நடவு: வரிசைக்கு வரிசை 45 செ.மீ. செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு எக்டக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்: நட்டவுடன் ஒரு தண்ணீர் பின்னர் 3ம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.நுனி கிள்ளுதல்: நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
சிவப்பு சிலந்தி: செடிகளில் இலைகள் மற்றும் பூக்களிலிருந்து சத்தினை உறிஞ்சும். சேதம் அதிகமாகும்போது பூக்கள் காய்ந்துவிடும். கெல்தேன் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய்: முதலில் இலைகளில் வட்டமான சிவப்புநிற புள்ளிகள் தோன்றும். பின்னர் புள்ளிகள் பெருகி இலைகள் கருகிவிடும். பெவிஸ்டின் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல்: வளர்ந்த செடிகளையும் நாற்றுக்களையும் தாக்கும். இந்நோய் பாதித்தால் வேர் அழுகிவிடும். பெவிஸ்டின் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து செடியைச் சுற்றி ஊற்றிவிட வேண்டும்.

அறுவடை: நட்ட 60ம் நாளில் இருந்து பூக்க ஆரம்பித்துவிடும். 80-90 சதவீதம் வரை மலர்ந்த பூக்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
மகசூல்: ஒரு எக்டருக்கு 18 டன் பூக்கள் கிடைக்கும்.

அனுபவ விவசாயி: அமுதா, த/பெ.மெய்யர், பேத்தாம்பட்டி, திருவரங்குளம் போஸ்ட், ஆலங்குடி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம். 91592 34283. இவர் 10 சென்ட் நிலத்தில் ஈஸ்ட்வெஸ்ட் நிறுவனத்தின் செண்டுமல்லி ரகத்தினை பயிரிட்டு ரூ.70,000 வரை நிகரலாபம் பெற்றுள்ளார்.

மேலும் விபரங்களுக்கு: உடுமலை, பொள்ளாச்சி, கோவை-99656 23265; புதுக்கோட்டை-81220 71332; மதுரை-73737 35484.

கருத்துகள் இல்லை: