தோற்றம் :
மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பள உரோம ஆராய்ச்சி நிலையம் 1962 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் அருகிலுள்ள மால்புராவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அந்த இடம் அவிக்காநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையத்தின் தென் மாநிலங்களுக்கான ஆராய்ச்சி மையம் 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானல் தாலுகாவில் மன்னவனூர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
நோக்கம் :
இந்நிலையத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் பற்றிய அடிப்படை மற்றும் பயன்சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல்.
இறைச்சி, உரோம இழை மற்றும் உரோமத்துடன் கூடிய தோல் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முயற்சிகள் மேற்கொள்வது.
ஆராய்ச்சி மூலம் கற்ற தொழில்நுட்ப அறிவினை ஆடு மற்றும் முயல் உற்பத்தி செய்வோரிடையே பரப்புவது.
ஆடு மற்றும் முயல் வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர்கட்கு அது குறித்த தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் சார்ந்த பயிற்சி அளிப்பது.
செம்மறி ஆடு மற்றும் முயல் பராமரிப்பு குறித்த ஐயங்களைக் களைவது.
மேற்கூறிய குறிக்கோள்களை மனதில் வைத்து மன்னவனூரின் தட்பவெப்ப நிலைகள் கண்டு இங்கு ஆடை நெய்ய உகந்த கம்பள இழைகளைக் கொடுக்கும் செம்மறி ஆடுகளை வளர்க்க முயற்சிகள் தொடங்கப்பட்டன. முதன்முதலாக உயர்ந்த உற்பத்தி திறன் கொண்ட அந்நிய நாட்டு செம்மறி ஆடுகளின் தகவமைப்பை (Adaptability) அறியும் நோக்குடன், 1966 ஆம் ஆண்டு முதல் ரோம்னிமார்ஷ் (Romney Marsh),சௌத் டவுன் (South Down), காரிடேல் மற்றும் ராம்புல்லே (Rambouillet) போன்ற அயல்நாட்டு செம்மறி ஆடுகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவைகளில் காரிடேல் மற்றும் மெரினோ கிடாக்களை 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் குரும்பை இனங்களான கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி இன பெட்டைகளுடன் இனச்சேர்க்கை செய்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் சந்ததியில் உருவான கலப்பின ஆடுகள், எடையிலும், வளர்ச்சி விகிதத்திலும், உரோம உற்பத்தி மற்றும் தரத்திலும் நாட்டினங்களைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிக திறன் வாய்ந்ததாக அறியப்பட்டது.
1967 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 136 காரிடேல் செம்மறி ஆட்டு கிடாக்களை சுமார் 700 கோயம்புத்தூர் குரும்பை இன பெட்டை ஆடுகளுடன் கலப்பினம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. கலப்பின வழித்தோன்றல்களின் உற்பத்தி திறன் சார்ந்த காரணிகளான உயிர் வாழ் திறன், உடல் எடை, வளர்ச்சி வீதம், உரோம இழைகளின் தரம் மற்றும் உற்பத்தி, இனப்பெருக்கக் கூறுகளில் பதிவு செய்யப்பட்ட முன்னேற்றம் ஆகியன கோயம்புத்தூர் குரும்பை ஆடுகளின் திறனை விட குறிப்பிடத்தக்க அளவில் இருப்பது உணரப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இராம்புல்லே கிடாக்களை 1984-ல் கோவை ஆடுகளுடன் கலப்பினம் செய்ததில், கலப்பின குட்டிகளின் பிறப்பு எடை 2.5 கிலோவாக இருந்தது. ஆனால், அது கோயம்புத்தூர் குட்டிகளில் 2.3 கிலோ இருந்தது. ஆறு மாத எடை கலப்பின குட்டிகளில் 15.1 கிலோவாகவும், குரும்பையில் 12.8 கிலோவாகவும் இருப்பது எடை பதிவு செய்வதன் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஒன்பது மாதத்தில் மேற்கூறிய எடைகள் 20 மற்றும் 15.5 கிலோவாகவும் இருந்தது. இந்த ஆய்வுகளின் பொழுது ஆடுகளுக்கு புரதம் நிறைந்த அடர் தீவனம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆய்வில் கலப்பின ஆடுகளின் சினைப்படுத்தப்பட்ட விகிதம் 78.3 மற்றும் குட்டி ஈனும் திறன் 90.5 விழுக்காடு என உணரப்பட்டது. இளவேனில் (Spring)காலத்தில் சினைக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஈன்ற பெட்டைகள் முறையே 86.5 மற்றும் 86.2 விழுக்காடு என கண்டறியப்பட்டது.
உரோம உற்பத்தி, கலப்பின ஆடுகளில் 1.2 கிலோவும், கோவை குரும்பையில் 0.515 கிலோவும் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், பசை நீக்கம் செய்யப்பட்ட பின் உரோமத்தின் அளவு மொத்த உரோமத்தில் 70.5 விழுக்காடாகவும், கோவை குரும்பையில் 75.8 விழுக்காடாகவும் பதிவு செய்யப்பட்டது.
ஏனெனில், கலப்பின ஆடுகளின் உரோம இழைகள் கோவை குரும்பை ஆடுகளின் உரோம இழைகளைக் காட்டிலும் சன்னமாகவும், அதிக எண்ணெய் பசை உடையதாகவும் இருந்தது. கலப்பின மற்றும் கோவை குரும்பையில் இழைக்கொத்தின் நீளம் முறையே 4.9 மற்றும் 5.2 சென்டிமீட்டர் என அளவிடப்பட்டது. கலப்பின ஆடுகளில் 0-3, 3-6, 6-12 மற்றும் 12 மாத வயதுகளில் உயிர்வாழ் திறன் (Survivability) முறையே 90.6, 98.3, 95.3 மற்றும் 100 விழுக்காடு என பதிவு செய்யப்பட்டது. |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக