யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 6 மே, 2013

புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்


வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்
வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
  1. கோ- 1 கலப்பின நேப்பியர் புல் நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் உற்பத்தியாகும். இவ்வகைப் புல்லைச் சிறிது சிறிதாக நறுக்கி, வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்க வேண்டும். பெரிய பண்ணையாளர்கள் தட்டை வெட்டும் கருவியைக் (Chaff Cutter) கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் தட்டை வெட்டும் கருவியையும் பல பண்ணையாளர்கள் வைத்துள்ளார்கள். தற்போது கோ-2 ரக புல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 33% அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.சாகுபடிக் குறிப்புகள் எக்டேருக்கு 30,000 புல் துணுக்குகள் தேவைப்படும். 30-75 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்துப் புல் துணுக்குகளை நட வேண்டும். 150 கிலோ தழைச் சத்தும், 60 கிலோ மணிச் சத்தும் ஒரு எக்டேர் பயிருக்குத் தேவை. இப்புல்லுக்குத் தொடர்ந்து நீர் அளிப்பது தேவை. ஆகவே, நல்ல பாசன வசதிக்கு ஏற்ற இறைவை இயந்திரம் அவசியம். மழைக் காலத்தில் மழைக் காலத்தில் மழை பெய்யும் சூழ்நிலையைப் பொறுத்து, 15-20 நாளுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடைக் காலத்தில் 8-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
    நட்ட 60 முதல் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இவ்வாறாக, ஆண்டிற்கு 5 முதல் 6 முறை அறுவடை செய்து 150 முதல் 200 டன் பசும்புல் பெறலாம். இதில் புரதம் 8% உள்ளது.
    இப்புல்லுக்கு இடையே ஊடுபயிராக மொச்சையினச் செடிகளையும் பயிரிடலாம்.
  2. கினிபுல் – அமில்வகை (Guinea Grass – Hamil)இதுவும் ஒரு சிறந்த புல் வகையே. இது ஓரளவு நிழலைத் தாங்குவதால், தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களில் பயிரிடலாம்.இதனைப் புல் துணுக்குகளாகவோ, விதை மூலமாகவோ பயிரிடலாம். எக்டேருக்கு 30-35,000 புல் துணுக்குகள் அல்லது 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகின்றன. வரிசைக்கு 45 முதல் 60 செ.மீ., இடைவெளி தேவை. 50 முதல் 60 நாட்களில் முதல் அறுவடையும், பின் 40-45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 100 முதல் 150 டன் வரை ஓராண்டில் கிடைக்கும் இப்புல்லில் புரதம் 7% அடங்கியுள்ளது.
  3. எருமைப்புல் (Para Grass)இது வெள்ளாடுகளுக்கு ஏற்ற சிறிய வகைப் புல். பொதுவாகச் சாக்கடைக் கழிவு நீர் மூலம் பல நகராட்சிகளில் இது பயிரிடப்படுகின்றது.45-60 செ.மீ., இடைவெளிவிட்டு வரிசையாக நடலாம். புல் துணுக்குகள் மூலமே பயிரிட வேண்டும். உர அளவு கோ-1 போன்றே. இதற்கு அதிக நீர் தேவை. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மழைக் காலத்திலும், 8-10 நாட்களுக்கு ஒரு முறை கோடைக் காலத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும். முதல் அறுவடை 75 முதல் 80 நாட்களிலும், பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 80 முதல் 100 டன் புல் கிடைக்கும். இதில் அடங்கியுள்ள புரத அளவு 7% ஆகும்.
மொச்சையினப் பயிர்கள்
  1. குதிரை மசால் (Lucerne)இது மிகச் சிறந்த பசுந்தீவனமாகும். இதனைப் பசுமையாகவும், காயவைத்தும் ஆடுகளுக்கு அளிக்கலாம். ஆனால் குதிரை மசால் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நன்கு வளர்வதில்லை. கோவை, பெரியார், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில பகுதிகளில் குதிரை மசால் பலன் கொடுக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இது பயிரிட ஏற்றதில்லை. இது ஒரு பல்லாண்டுப் பயிர்.இதை விதைக்க ஏற்ற காலம் அக்டோபர் – நவம்பர் மாதமாகும். ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதை தேவைப்படும். இதனை 20-25 செ.மீ., இடைவெளியில் வரிசையாகப் பயிரிடலாம். அல்லது தூவி விதைத்து விடலாம். வாரம் ஒரு முறை முதல் கட்டாயமாகவும், பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தழைச் சத்து 30 கிலோ, மணிச் சத்து 100 கிலோ தேவை.
    70 நாட்களுக்குப் பின் முதலட அறுவடையும், பின் 25-30 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டில் 6 முதல் 7 தடவை அறுவடை செய்து, 60 முதல் 70 டன் பசுந்தீவனம் பெறலாம். புரதம் 20% அளவில் இப்புல்லில் உள்ளது.
  2. ஸ்டைலோ (Stylosanthes)இப்பயிரைக் குதிரை மசால் பயிரிட முடியாத மற்ற இடங்களில் பயிரிடலாம். ஒரு எக்டேருக்கு 20-25 கிலோ விதை தேவைப்படும்.வரிசைக்கிடையே 30 செ.மீ., இடைவெளி கொடுக்க வேண்டும். தழைச் சத்து 30 கிலோவும், மணிச் சத்து 60 கிலோவும் தேவை. கோடையிவ் 20-30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். முதல் அறுவடை 65-70 நாட்களிலும், பின் 35-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
    ஆண்டில் 3 முதல் 5 முறை அறுவடை செய்து 30 முதல் 35 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லில் புரதம் 18-20% அளவில் உள்ளது.
  3. வேலிமசால் (Hedge Lucerne)இது வெள்ளாடுகளுக்கு ஒரு சிறந்த பசுந் தீவனப் பயிராகும். இதைத் தென்னந்தோப்பு, வாழைத் தோட்ட ஓரங்களிலும் பயிரிடலாம். தனிப்பயிராக எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 1 மீட்டர் இடைவெளி விட்டு, அடுத்த வரிசை விதை போட வேண்டும்.30 கிலோ தழைச் சத்தும், 50 கிலோ மணிச் சத்தும் தேவை. கோடையில், 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 1/2 முதல் 1 மீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பயிர் செய்த 4 மாத வயதில் முதல் அறுவடைக்குத் தயாராகும். பின் 1 முதல் 1 1/2 மாத இடைவெளியில், அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து 18 முதல் 20 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லின் புரத அளவு 18 – 20% ஆகும். இதனை கோ-1 மற்றும் கினி புல்லுடன் ஊடு பயிராகவும் பயிரிடலாம். இதனால் ஒன்றுன்கொன்று உதவி செய்து, அதிக மகசூல் பெற முடியும்.
    இது தவிரச் சணப்புப் பயிரை நெல் அறுவடைக்குப் பின் பயிரிட்டு ஆடுகளுக்குப் பசுந்தழையாகவும், காய்ந்த தீவனமாகவும் அளிக்கலாம்.
    இதுபோல் தட்டைப் பயற்றை மழைக்குப்பின் புஞ்சை நிலங்களில் விதைத்து ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். தவிரவும், பயிர் செய்ய பயனற்ற தரிசு நிலங்களில் கொழுக்கட்டை (Buffel Grass) அல்லது மலை அருகம்புல் (Rhodes Grass) விதைக்கலாம். சுற்றி வேலிக்கருவை நட்டுக் காக்கலாம்.
    ஒரு ஏக்கல் நிலத்தில் பசும்புல்லையும், துவரை இனத் தீவனத்தையும் வளர்த்தால், 30 ஆடுகளையும் அதன் குட்டிகளையும் வளர்க்க முடியும். குறிப்பிட்டுச் சொல்லுவதானால், கோ-1 புல், வேலிமசால் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் பயிரிட்டுச் சுற்றிலும் அகத்தி, சித்தகத்தி மரம் நட்டுத் தேவையான பசுந்தழை பெற்று, 30 வெள்ளாடுகளைப் பேண முடியும். இந்த ஆடுகள் வழங்கும் எரு நிலத்திற்கும் பயன்படும்.
வெள்ளாடுகளுக்கென்றே உள்ள சிறந்த தீவன மரங்களாவன:
  1. கொடுக்காய்புளி
  2. கருவேல்
  3. வெள்வேல்
  4. உடை (குடைவேல்)
  5. கிளுவை
கொடுக்காய்புளி மரப் பழங்களைப் பலர் விரும்பி உண்பார்கள். அதன் தழைகளில் முள் இருந்தாலும், வெள்ளாடுகள் விரும்பி, ஏன் முள்ளையும் சேர்த்தே உண்டுவிடும்.
கருவேல், வெள்வேல், குடைவேல் முதலான மரங்கள் விறகிற்காக வளர்க்கப்படுகின்றன. இதன் தழையையும், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். அத்துடன் இம்மர நெற்றுகள் ஆடுகளுக்குச் சிறந்த தீவனமாகும். பலர் இந்நெற்றுகளைச் சேமித்துத் தீவனப் பற்றாக்குறைக் காலங்களில், ஆடுகளுக்குக் கொடுப்பார்கள். இதில் புரதம் நிறைய உள்ளது. சீமைக் கருவேல் நெற்றுத் தீவனமாகும்.
மேலும் கிளுவை மரங்களை வேலிகளில் வளர்ப்பார்கள். இதன் தழையையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
வெள்ளாடுகள் அவை வளர்க்கப்படும் பகுதியில் உள்ள பல்வகைத் தழைகளை உண்ணப் பழகிக் கொள்ளும். உதாரணமாகச் சவுக்குப் பயிரிடப்படும் பகுதியில் சவுக்குத் தழையை உண்ணும். மைகொன்னை எனப்படும் மரத்தழையையும், சில வெள்ளாடுகள் உண்கின்றன.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

கருத்துகள் இல்லை: