யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 14 டிசம்பர், 2013

மாடுகளை சினைப்படுத்தும் வழிமுறைகள்

மாடுகளை சினைப்படுத்தும் வழிமுறைகள்

அனைத்து உயிர்களுக்கும் இனப்பெருக்கம் என்பது அவசியத்திலும் அவசியம். இந்த நடவடிக்கைக்கு, பெண் இனம் குறிப்பிட்ட நாள் இடைவெளியில், சினைப் பருவத்திற்கு தயாராகும். இதைச் சினைப்பருவச் சுழற்சி என்பர். மாடு, எருமைகளில் இச்சுழற்சி 18 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை நடக்கிறது. இச்சுழற்சி 10 நாட்களுக்குள் அல்லது 30 நாட்களுக்கு மேல் இருந்தால் சூலகத்தில் பிரச்னை உள்ளது எனலாம். 

கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் பலர், அமாவாசை, பவுர்ணமியில்தான் மாடுகள் சினைக்கு வருமென தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர். கடைசியாக மாடுகள் சினைக்கு வந்த தேதியில் இருந்து, 18 முதல் 21 நாட்களுக்குள் சினைப்பருவத்திற்கு வரும். அந்நாட்களில் தினமும், காலை, மாலையில் மாடுகளில் சினைப்பருவ அறிகுறி தெரிகிறதா என கவனிக்க வேண்டும்.

சினைப்பருவ அறிகுறிகள்: மாடு அமைதியின்றி காணப்படும். அடிக்கடி கத்தும். தீவனத்தில் நாட்டம் இராது. கறவை மாடுகளில் பால் அளவு குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். இனப்பெருக்க உறுப்பில் முட்டை வெள்ளைக் கரு போன்ற திரவம் வடியும். சினைப்பருவ மாடுகள்மீது, மற்ற மாடுகள் தாவும்போது, அவை அமைதியாக இருக்கும். சினைப் பருவ மாட்டின் "யோனி'யில் சுருக்கங்கள் இன்றி தடித்து இருக்கும். அதேசமயம் சில கலப்பின மாடுகளுக்கு, கத்துதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மற்ற மாடுகள் மீது தாவுதல் அறிகுறிகள் தென்படாது.

எருமை மாடுகளில் சினைப்பருவத்தை கண்டறிவது கடினம். அதன் இனப்பெருக்க உறுப்பில் திரவம் ஒழுகுவது தென்படாது. ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். நீண்ட உறுமல் சத்தத்துடன் கத்தும். அடிக்கடி பின்புறம் திரும்பி பார்க்கும். 90 சதவீத எருமை மாடுகள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் மட்டுமே சினைப்பருவத்திற்கு வருகின்றன. சிலமாடுகள் சினைப்பருவத்தில் இருந்தாலும், அறிகுறிகளை முழுமையாக வெளிப்படுத்தாது. இதனை ஊமைச் சினைப்பருவம் என்பர். இம்மாதிரி மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் முறை கையாளப்படுகிறது.

எப்போது சினைப்படுத்துவது: பருவத்தே பயிர் செய்வது போன்றதே, சினைப்படுத்துவதும். மாடுகள் 12 முதல் 24 மணி நேரமே சினைப்பருவத்தில் இருக்கும். சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12 மணி நேரத்திற்குள் கருவூட்டல் செய்ய வேண்டும். மாட்டில் இருந்து சினைமுட்டை வெளிப்படும் நேரத்தில், போதுமான எண்ணிக்கையில் உயிருள்ள ஆண் உயிரணுக்கள் இருக்க வேண்டும்.

கருமுட்டை வெளிப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ, மாடுகளுக்கு கருவூட்டல் செய்வதால் சினையாகும் வாய்ப்பு குறைவு. பெரும்பாலான மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை முதன்முதலில் வெளிப்படுத்தும்போது அறியப்படுவதில்லை. அதனால்தான் தோராயமாக காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தோன்றினால் அன்று மாலையிலும், மாலையில் தோன்றினால் அடுத்தநாள் காலையிலும் கருவூட்டல் செய்வது மாடுகள் சினையாக ஏதுவாகும். கருவூட்டல் செய்தபின், தேவையற்ற சில நடைமுறைகளை பலர் கடைபிடிக்கின்றனர்.
சினைப்படுத்திய மாடுகளை படுக்க விடாமல் கழுத்தை மேலே தூக்கி கட்டி விடுவது, கருவூட்டல் செய்தநாளில் தீவனம், தண்ணீர் தராமல் இருப்பது, சினை ஊசி போட்ட மாடுகளை காளைக்கும், காளையுடன் சேர்ந்த மாடுகளுக்கு உடனே சினை ஊசி போடுவதையும் செய்கின்றனர். 

சினைப்படுத்திய மாடுகளை படுக்கவிட்டால், கருப்பையில் செலுத்திய உயிரணுக்கள் வெளியேறிவிடும் என்பதும் தவறு. மாடுகளை, சினை ஊசி மூலம் சினைப்படுத்தும்போது, மிகக்குறைந்த அளவு (கால் மில்லி) விந்து மட்டுமே கருப்பையின் உட்பகுதியில் செலுத்தப்படும். மேலும் விந்தணுக்கள், கருப்பையில் செலுத்தியவுடன் வேகமாக முன்னோக்கி நகரும் தன்மை கொண்டவை. அவை கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுவதால், முழுவதும் வெளியேறாது. சில கலப்பின கிடேரி, மாடுகளில் சினைப்படுத்திய பின், ஓரிரு நாளில் ரத்தம் கலந்த வழு வடியும். இதனாலும் சினைப்பிடிப்பதில் பாதிப்பு ஏற்படாது. இது சினைப்பிடிக்காமைக்கான அறிகுறியும் இல்லை. எனவே தவறான கருத்துக்களை மாடுவளர்ப்போர் மாற்றிக் கொண்டு, தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.

-டாக்டர் த.ஆனந்த பிரகாஷ்சிங்,
ஒரத்தநாடு, தஞ்சாவூர்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

பால் தொழில்... பொங்கும் தருணம்!

'கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக...' என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்குக் கிராமப்புறங்களில் இருந்துகொண்டு வேலைதேடி நகரங்களை நோக்கி அலைந்துகொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்தப் பழமொழியைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. 'கையில் பாலை வைத்துக்கொண்டு வேலைக்கு அலைந்த கதையாக...' என்று! பால் விற்பனை என்பது அத்தனை லாபகரமான பிஸினஸ். ஆனால், அதில் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப் போகிறது என்று பலர் தயங்குகிறார்கள்.இந்தப் புள்ளிவிவரத்தைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள்... இந்தியாவில் தனி நபர் ஒருவர் பயன்படுத்தும் பாலின் அளவு 230 கிராம். அண்மைக்காலமாக பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ல் இந்தியாவில் 105 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டு பால் உற்பத்தி 2.5 மில்லியன் டன் அதிகரித்து வருகிறது. 2021-22-ல் நாட்டில் பால் தேவை ஆண்டுக்கு 180 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தேவையை ஈடுகட்ட தற்போதைய உற்பத்தியை இரு மடங்காக அதாவது ஆண்டுக்கு ஐந்து மில்லியன் டன்னாக அதிகரிக்கவேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.ஆக, தேவை இருக்கும் தொழிலில் இறங்குவதுதானே லாபம் தருவதாக இருக்கும்.பால் வியாபாரத்தில் இறங்குவது என்றால் கறவை மாடுகளில் பாலைக் கறந்து கேனில் வைத்து வீடு வீடாக விற்பனை செய்யச் சொல்கிறீர்களா..?அப்படிச் செய்யும் பால்காரர்கள் ஆயிரம் பேர் ஊர் ஊருக்கு இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் அடுத்தகட்டத்துக்குச் செல்லுங்கள். மொத்தமாக பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யுங்கள். ஒரு நாளுக்கு பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை என்று இலக்கு வைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய முடிந்தால் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய்வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அடடா... இத்தனை லாபம் கொட்டும் தொழிலா இது... இதற்கு மூலதனம் என்ன தேவைப்படும்...?முதலில் மனிதர்கள்தான் இதற்கு மிகப்பெரிய மூலதனம். ஏனென்றால், உங்களுக்கு பால் விற்பனை செய்யும் ஆட்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் உத்தரவாதம் பெறவேண்டும். காரணம், அவர்கள் எங்காவது அதை விற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களை உங்கள் பக்கம் திருப்புவதுதான் முதல் வேலை. அதற்கு நாலு மாடுகள் வைத்திருப்பவரை ஐந்தாவதாக ஒரு மாடு வாங்க வைத்து, 'அந்த மாட்டுப் பாலை எனக்குக் கொடுங்கள்' என்று வளைக்கவேண்டும். அதன்பிறகு நம்முடைய அணுகுமுறையை வைத்து எல்லா பாலையும் நமக்கே விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்.அவர்கள் மாடு வாங்குவதற்கான கடனுக்கு வங்கியில் ஏற்பாடு செய்துகொடுப்பது... நீங்களே சிலரைத் திரட்டி குழுவாக வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து ஊருக்குள் சிறு பண்ணை அமைத்துக் கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்தால் உங்கள் பால் கொள்முதலுக்கு பக்காவான ஏற்பாடாக அமைந்துவிடும்.சரி, கொள்முதலுக்கு பால் ரெடி... அதை எப்படி விற்பனை செய்வது? அதற்கான மார்க்கெட்டிங் ஏரியா எங்கே இருக்கிறது?இந்த இடத்தில்தான் நீங்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்த வேண்டும். கும்பகோணம், விருத்தாசலம், நாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு தினசரி 50 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யும் 'ஜி.கே.டெய்ரி'யின் நிர்வாக இயக்குநர் ஜி.கண்ணனிடம், இதுகுறித்து பேசும்போது, ''பாலைக் கொள்முதல் செய்து அப்படியே வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது பால் சப்ளை செய்பவர்கள் நுரை அடிக்க வைத்து அளவை வித்தியாசப்படுத்துவது, பாலில் தண்ணீர் சேர்ப்பது போன்ற தவறுகளைச் செய்து நம் கம்பெனியின் பெயரைக் கெடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால், பாக்கெட்டில் அடைத்து பாலை சப்ளை செய்தால் இந்தப் பிரச்னை இருக்காது'' என்றார்.பாக்கெட் பால் என்றால், கறந்த பாலை வாங்கும் கிராமங்களில்கூட விற்பனை செய்யமுடியும். ஏனென்றால், கறந்த பால் என்றால் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரத்தில்தான் கிடைக்கும். அதுவே பாக்கெட் பால் என்றால் கடைகளில் எப்போதும் கிடைக்கும் என்பதால் மக்கள் தேவைப்படும்போது இதைத் தேடிவந்து வாங்க வாய்ப்பு இருக்கிறது.அப்படிப் பார்த்தால் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதற்கான இயந்திரங்கள் வாங்கவேண்டுமே...?உண்மைதான்... தொழிலைக் கொஞ்சம் பெரிய அளவில் செய்யத் திட்டமிடும்போது அதற்கான முதலீடும் கொஞ்சம் அதிகமாகத்தான் செய்யும். கம்பெனியை உருவாக்க ஏற்ற இடம், பாலைப் பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள், அதைக் கொண்டு வருவதற்கும் கொண்டுபோய் கடைகளில் விற்பனைக்குக் கொடுப்பதற்கும் ஏற்ற வாகனங்கள் என்று சில அடிப்படையான தேவைகளைச் செய்துதான் ஆகவேண்டும்.


அலுவலகம், தொழிற்சாலை அமைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் இடம் தேவைப்படும். நீங்கள் எந்தப் பகுதியில் பாலைக் கொள்முதல் செய்யப்போகிறீர்களோ அந்தப் பகுதியிலேயே தொழிற்சாலையை அமைப்பது நல்லது. ஏனென்றால், பாலைக் கறந்து மூன்று மணிநேரத்துக்குள் அதைப் பதப்படுத்தும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், அந்தப் பால் பயன்படுத்த முடியாததாகிவிடும். இயந்திரங்கள், வாகனங்கள் எல்லாம் வாங்க குறைந்தபட்ச முதலீடு என்றால் இரண்டரையிலிருந்து மூன்று கோடி ரூபாய் தேவைப்படும்.அவ்வளவு பெரிய முதலீட்டுக்கு எங்கே செல்வது..?இதற்கான முழுத் தொகையையும் நீங்கள் ரெடி செய்யத் தேவையில்லை. இந்தத் தொழிலைத் தொடங்கும் முன் மாவட்ட தொழில் மையத்தில் பதிவுசெய்து உரிமம் வாங்கிக்கொள்ளவேண்டும். அவர்களிடம் கேட்டால், கடன் வாங்குவதற்கான வழிமுறைகள், பிராஜெக்ட் அறிக்கை தயார் செய்வது போன்ற விஷயங்களில் உதவி செய்வார்கள். வங்கிகள் திட்ட அறிக்கையின் அடிப்படையில் கடன் அளிக்கின்றன. உங்கள் கையிலிருந்து 25% பணம் போட்டால் போதும். இந்தக் கடனுக்கான வட்டி 12-15% என்பது போல் கடன் தொகையைப் பொறுத்து அமையும். கடனை சுமார் 10-15 ஆண்டுகள் வரை கட்ட அனுமதிக்கிறார்கள்.கடன் வசதி கிடைக்குமானால், முதலீட்டுக்குப் பிரச்னையில்லை. சரி, இந்த பாலைப் பதப்படுத்தி விற்பதற்கான வழிமுறைகள் என்ன?இந்த டெக்னிக்கல் விஷயங்களை பிராக்டிகலாகத்தான் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அனுபவம் பெற்ற கண்ணன் அதுபற்றிச் சொன்னபோது, ''கறந்த பாலை பிளாஸ்டிக் அல்லது அலுமினியம் கேன்களில் நிரப்பி தொழிற்சாலைக்குக் கொண்டு வரவேண்டும். அதை முதலில் குளிரூட்டவேண்டும். அடுத்து கருவிகளின் உதவியோடு பாலைச் சமச்சீர்படுத்தி (Pasteurization), நிலைப்படுத்தி (Homogenization) பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.200, 250, 500, 1,000 மில்லி என தேவைக்கு ஏற்ப அளவை செட் செய்துகொண்டு பாக்கெட் போட்டுக்கொள்ளலாம். எந்த அளவு உள்ள பால் அதிகமாக விற்கிறது என்பதை அறிந்து அந்த அளவு பாக்கெட்டை அதிகமாகத் தயாரியுங்கள். பால் பாக்கெட் கருவி ஒரு மணி நேரத்தில் 5,000 லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்துக் கொடுத்துவிடும் அளவுக்கு வேகமானதாக இருக்கும். இந்தக் கருவிகளை வாங்கத்தான் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு தேவைப்படும்.பாலை நான்கு டிகிரி செல்ஷியஸில் கடைகளுக்கு அனுப்பவேண்டும். கெட்டுப் போகாமல் இருக்க பெரிய ஃபிளாஸ்க் போல் இருக்கும் இன்ஸூலேஷன் செய்யப்பட்ட வண்டியைப் பயன்படுத்தவேண்டும். இவற்றின் மூலம் டீலர்களுக்கு பால் பாக்கெட்களை சப்ளை செய்யவேண்டும். இதனை டீலர்கள் தங்கள் வசம் கடையில் அல்லது வீட்டில் உள்ள ஃப்ரீஸரில் பாதுகாப்பாக வைத்து, மறுநாள் அதிகாலை 4 மணி முதல் கடைகளுக்கு சப்ளை செய்யச் சொல்லவேண்டும். கடைக்காரர்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யவேண்டும்'' என்றார்.கண்ணனின் மகன் ஜி.கே.தியாகராஜன் 'ஜி.கே. டெய்ரி' நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார். அவர், ''கோடைக்காலத்தில் இன்ஸூலேடட் வண்டியில் டிரே மூலம் ஏற்றும்போது சில ஐஸ் கட்டிகளைப் போட்டு அனுப்பினால் சீக்கிரம் கெட்டுப்போகாது'' என்று கூடுதல் தகவலைச் சொன்னார்.கோடைக்காலத்தில் தயிர், மோர் போன்றவற்றையும் பாக்கெட்டில் அடைத்து விற்கலாம்.டெக்னிக் ஓகே... லாபக் கணக்குப் போடுவது எப்படி?வாங்கும் பாலுக்கு விலை நிர்ணயம் செய்வதில்தான் லாபம் இருக்கிறது. பாலின் தரத்துக்கு ஏற்பதான் விலை கொடுத்து வாங்கவேண்டும். இந்தத் தரத்தை கெமிக்கல் உதவியோடு ஆய்வகத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 'பால்மானி' என்ற 'லேக்டோ மீட்ட'ரும் உதவியாக இருக்கும். பாலில் அதிகக் கொழுப்புத் தன்மை மற்றும் கூடுதல் அடர்த்தி இருந்தால் அதிக விலை கொடுக்கலாம். இந்த வகையில் எருமைப் பாலுக்கு எப்போதும் நல்ல விலை உண்டு.விற்பனை என்று வரும்போது சில அடிப்படையான விஷயங்களைக் கவனிக்கவேண்டும்.பாலைப் பொறுத்தவரை நிலைப்படுத்திய பால் -(Standardisation Milk) ஒரு தரம். இதில் கொழுப்புச் சத்து (Fat) 4.5%. இதர சத்துக்கள் எஸ்.என்.எஃப். (S.N. F. - Solids Non - Fat) 8.5%. அடுத்து, சமச்சீர் பால் (Toned Milk) இதில் கொழுப்புச் சத்து (Fat) 3%. இதர சத்துக்கள் எஸ்.என்.எஃப். (S.N.F.-Solids Non-Fat) 8.5% அதிகக் கொழுப்புச் சத்து உள்ள பாலுக்குக் கூடுதலாகவும், கொழுப்புச் சத்து குறைந்த பாலுக்கு குறைவாகவும் விலை வைக்கவேண்டும். இதுதான் அடிப்படையான கணக்கு. மற்றபடி உங்கள் பகுதியில் விற்பனையாகும் பாக்கெட் பாலின் தரம் மற்றும் விலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்கள் பாலுக்கு விலையை நிர்ணயம் செய்யுங்கள்! வர்த்தகப் பயன்பாடு, ஓட்டல் பயன்பாடு போன்றவற்றுக்கான சப்ளை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.கேட்கும்போது எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறதே... நடைமுறையில் சிக்கல் ஏதாவது வர வாய்ப்பு இருக்கிறதா..?சிக்கல் இல்லாத தொழில் ஏது? இதைப்பற்றி தென் மற்றும் கிழக்கு தமிழகத்தில் பால் விநியோகத் தொழிலில் இருக்கும். 'விஜய் பால்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.மதன் மோகன் கொஞ்சம் விரிவாகவே சொன்னார்.''புதிதாக மார்க்கெட் பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். இது நீண்டகால அடிப்படையில் லாபகரமானதாக இருக்காது. தற்போது பால் கொள்முதலில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், பால் உற்பத்தியாளர்களுக்குக் கடன் உதவி, முன் பணம் போன்ற சலுகைகளைச் செய்யவேண்டி இருக்கிறது.இந்தத் தொழிலில் 24 மணி நேரமும் இயங்கவேண்டி இருக்கும். இரவு நேரத்தில்தான் பேக்கிங், டீலர் சப்ளை போன்ற பணிகள் இருக்கின்றன. அதனால், கண்விழித்துச் சரியாக வேலை செய்யும் ஆட்களைத் தேடி அமர்த்தவேண்டும்.அரசு அதிகாரிகள் பாலின் தரத்தை அடிக்கடி பரிசோதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் இல்லை என்றால் சிக்கல்தான். கிரிமினல் நடவடிக்கை இருக்கும். அதனால், கவனமாக இருக்கவேண்டும்'' என்றார்.அனைத்தையுமே தெளிவாக எடுத்துச் சொல்லியாச்சு! இனி களத்தில் சந்திப்போம்..!