யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஹலாலான உழைப்பின் சிறப்பு



இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி 
உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, 
முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது 
எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். 
பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு 
நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை 
வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் 
உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு 
தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் 
வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். 
நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு 
அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் 
தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற 
பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், 
நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் 
வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது 
எனப்பாராட்டினார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் 
இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் – விவசாயம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்
நபி லூத்(அலை) அவர்கள் – விவசாயம்
நபி யஸஃ (அலை) அவர்கள் – விவசாயம்
நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்
நபி ஹாரூன்(அலை)அவர்கள் – வியாபாரம்
நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்
நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் – வேட்டையாடுதல்
நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்
நபி ஷுஐப்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்
நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல
நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்
நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
செல்வத்தில் பரக்கத் இருக்காது.
கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.
எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. 

“பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)

M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை. மனாருல்ஹுதா – ஜூலை 2007 – ரீட்இஸ்லாம்.நெட்.


Source: http://chittarkottai.com/wp/?p=3319

ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்!


நீங்களும் ஒரு தொழிலதிபர் ஆகலாம். ஆடுவளர்ப்பின் மூலம் ஆயிரம் ஆயிரமாய் அள்ளலாம்..!



talaseri goat
தலசேரி இன பெட்டை ஆடு-குட்டியுடன்
 வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.

ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.

goat business
ஆடுகள் தீவனமெடுக்கும் காட்சி

அடுத்து… விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து பலரும் லாபம் பார்க்கிறார்கள்.

பிறக்கும் போதே அதிக எடை சாதாரணமாக கொடி ஆட்டுக்குட்டி பிறக்குற போது ஒன்றரைக் கிலோ தான் எடை இருக்கும். எட்டு மாசத்துல தான் பதினைஞ்சு கிலோ எடைக்கு வரும். இதுவே கலப்புக் குட்டிகள்னா… பிறக்குறப்பவே ரெண்டரை கிலோ இருக்கும். நாலு மாசத்துலயே பத்து கிலோவுக்கு மேல எடை வந்துடும். எட்டு மாசத்துல முப்பது கிலோ வரைக்கும் கூட வந்துடும்.
goat growing
சினைஆடு-தீவனம் எடுத்துக்கொள்ளும் காட்சி

பொதுவா பத்து பன்னெண்டு கிலோ இருக்கிற ஆட்டுக்கு 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபா வரைக்கும் விலை கிடைக்கும். கொறஞ்சது ஆறு மாசமாவது கொடி ஆட்டை வளர்த்தாதான் அந்த விலை கிடைக்கும். ஆனா, கலப்பின ஆட்டுக்கு நாலு மாசத்திலேயே இந்த விலை கிடைக்கும்’ என்று ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

1 ஆட்டுக்கு 15 சதுரடி!

வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும்.

பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.
jamunapari_pettai_goat
இனம்: ஜமுனாபாரி (பெட்டைஆடு)

தண்ணீர் கவனம்!

காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்

வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு வேலிமசால், முயல் மசால், கோ-4, மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப் போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு  ஐந்தரை மணிவரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.

இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்குத் தயாராகிவிடும்.

எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டுக் குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.
sirohi Male goat
சிரோஹி இன கிடாய்

Jamunaparipettaiaadu
ஜமுனாபாரி இன பெட்டை ஆடு

thalaiseri pettai aadu
தலசேரி இன பெட்டை ஆடு


கீழே காணப்படுபவை ஆடுகளுக்காக வளர்க்கப்படும் தீவன வகைகள்: தீவனசோளம், மக்காச்சோளம், வேலிமசால், சீமைபுல் போன்றவை.




நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு இடவும்..