யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

செம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்!


விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தமிழ்நாட்டு விவசாயிகள் மழை பொய்த்து தங்கள் தொழில் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் மாற்றுத் தொழிலின்றி அண்டை மாவட்டங்களுக்கு தஞ்சம் பிழைக்கச் செல்லும் நிலைக்கு தீர்வு தருகிது கொடைக்கானலில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம்!

கொடைக்கானலில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள மன்னவனூர் என்ற இடத்தில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம் செம்மறியாடு, முயல் மற்றும் உரோம ஆராய்ச்சி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தில் 1965 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்ட மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையத்தின் தென் மண்டல கிளையான இந்த ஆராய்ச்சி மையம் 1970-ல் அமைக்கப்பட்டது. 

செம்மறியாடு வளர்ப்பிலும், இறைச்சி இன முயல் வளர்ப்பிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டிடவும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிடவும் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. 

பாரத் மெரீனோ என்றழைக்கப்படும் பொலி கிடாக்களை உருவாக்கிய மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி மையம், இங்கு பல்வேறு இன முயல்களை வளர்த்து, ஆய்வு செய்து அதனை எவ்வாறு வளர்த்து பயன் பெறலாம் என்கின்ற ஆலோசனைகளையும், அதற்குரிய அத்தியாவசியப் பொருட்களையும் அளிக்கின்றது. (பார்க்க இறைச்சி இன முயல் வளர்ப்பு)

இங்கு பாரத் மெரீனோ என்கின்ற நல்ல வளர்ச்சியைத் தரும், நிறைய உரோமத்தைத் தரும் செம்மறியாட்டு வகையை வளர்ப்பது மட்டுமின்றி, இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல்கள் பற்றியும், உரோமத்தை மட்டுமே தந்து நல்ல வருவாயைத் தரக்கூடிய ஜெர்மன் அங்கோரா வகை முயல்களையும் வளர்த்து ஆய்வு செய்து வருகின்றனர். 

ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட விரும்புவோருக்கு இம்மையத்தில் கட்டணத்துடன் 5 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மிகக் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாயை ஈட்டக்கூடிய பண்ணைத் தொழில்களுக்கு இந்த மையம் ஆலோசனை தருகிறது. 

பாரத் மெரீனோ - இரு பயன்கள் கொண்ட செம்மறியாடு
இறைச்சி இன முயல் வளர்ப்பு 
செம்மறியாடு, முயல்களுக்கு புல் மற்றும் தீவனப் பயிர்கள் 
தென் மண்டல ஆராய்ச்சி மையம் - ஒர் அறிமுகம் 

தொடர்புகொள்ள : 

பொறுப்பு அலுவலர், 
தென் மண்டல ஆராய்ச்சி மையம், 
மன்னவனூர் அஞ்சல்
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம். 
செம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்

தென் மண்டல ஆராய்ச்சி மையம், தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு உயர் ரக ஆடுகளை வளர்த்து அவற்றின் மூலம் தரமான செம்மறி ஆடுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இங்குள்ள மேய்ச்சல் நிலங்களில் முயல் மற்றும் ஆடுகளுக்கு தேவையான உயர் ரக புற்களையும் உயர் ரக தீவனப் பயிர்களையும் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதன்முதலாக 1973 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 56 ஹெக்டேர் நிலங்களில் களைச் செடிகள், புதர்கள் மற்றும் தடிமனான புல் புதர்கள் எரிக்கப்பட்டு நிலம் தயார் செய்யப்பட்டது. இந்நிலத்தில் சீமைக்கரையான் (Kikiyu), சிவப்பு குளோவர், குதிரை மசால் மற்றும் காக்ஸ்புட் என்னும் புற்களும், தீவனப்பயிற்சிகளும் பயிரிடப்பட்டன. இத்துடன், காய்கறி வகைகளான காரட், முட்டைகோஸ் மற்றும் பீட்ரூட் ஆகிய பயிர்கள் வளர்க்கப்பட்டன. இப்பயிருக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தேவையான உழவியல் செயல்கள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் மன்னவனூர் ஒரு வளமான பூமி என அறியப்படுகிறது. இதில் சிறந்த முறையில் குறைந்த செலவுகளுடன் கீழ்க்காண்கின்ற பல்வகையான புல் மற்றும் இதர தீவனப் பயிர்களை விளைவித்து அதன் மூலம் லாபகரமான ஆடு மற்றும் முயல் வளர்ப்பை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.

பயிர்களின் வளர்ச்சித் தன்மைகள் : பங்கோலா புல் (படர்புல்) (Pangola grass) :

இது படர்ந்து வளரக்கூடிய குறைந்த இலைகளையுடைய மற்றும் பனியினால் தாக்கப்படக்கூடிய புல்வகை என அறியப்பட்டது.

பாஸ்பேலம் டைலேட்டேட்டம் (அகன்ற இலைப்புல்) (Paspalum dilatatum) :

இது நல்ல இலை வளர்ச்சியும், தரையோடு தொட்டுக்கொண்டு வளரும் தன்மையும் கூடியது. இதன் இலை அகன்றும், மிருதுவாகவும், பனி எதிர்ப்பு சக்தியுடையதாகவும், எப்போதும் பசுமையுடனும் இருப்பதால் இது மன்னவனூர் நிலத்தில் ஓர் உபயோகமான புல் என அறியப்படுகிறது.

கினியா புல் (Guinea grass) :

இந்த மேல்நாட்டு புல் வகை மிவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஸ்டைலோசான்தஸிஸ் கிராசில்லிஸ் (Stylosanthesis gracilis) :

இத்தீவனப் பயிர் வளர்ச்சி குறைவாக இருந்த போதும் வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும்.

செடோரியா புல் (Setaria Sp.) :

இப்புல்லின் இலைகள் நீண்டும், அகன்றும், இளமையாகவும், மிருதுவாகவும், வளர்ந்த தன்மையுடையதாகவும், அதிக விதைகளை உருவாக்கும் தன்மையுடையதாகவும், பனி எதிர்ப்பு தன்மையும் இருப்பதால் இது மிகவும் பொருத்தமான புல் வகை என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

சில்வர் வெள்ளி இலை டெஸ்மோடியம் (Silverleaf desmodium) :

இந்த தீவனப்பயிர், மழைக்காலத்தில் மிக அதிக அளவில் வளர்ந்து அதிகமான இலைகளுடன் எளிதில் மேய்ப்பு நிலத்தில் பரவக்கூடியது. ஆடுகள் இதை மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. ஆயினும், இது பனி எதிர்ப்பு தன்மையற்ற தீவனப்பயிர்.

டாலிகாஸ் ஆக்சில்லரீஸ் (Dolichos axilaries) :

இத்தீவனப்பயிர் மிக அதிக அளவில் வளர்ந்து, அகலமான மற்றும் மிருதுவான இலைகொண்டது. மேய்ச்சல் நிலத்தில் இவை நன்கு வளரும். ஆயினும், பனி எதிர்ப்பு திறன் குறைவு.

ஓட்ஸ் (Oats) :

இத்தீவனப் பயிர் அகன்ற மிருதுவான இலைகளைக் கொண்டதாகவும், நல்ல உயரத்துடன் வளர்கிறது. ஒரு முறை பயிரிட்டால் 3 அல்லது 4 முறை இவற்றிலிருந்து இலைகளை அறுவடை செய்து ஆடு மற்றும் முயல்களுக்கு கொடுக்கலாம். அவைகள் இத்தீவனத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அவற்றின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது பனி எதிர்ப்பு திறன் உடையது.

குதிரை மசால் (Lucerne / Alfalfa) : 

பனி எதிர்ப்புத் தன்மை உடையது. நாடு முழுவதும் அதிக புரதசத்து வாய்ந்த தீவனப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு முறை பயிரிட்டால் தொடர்ந்து அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். இது அடர் தீவனத்திற்கு சமமான உணவாகும்.

அடைலோசியா (Atylosia) : 

இத்தீவனப் பயிர் பனி எதிர்ப்பு தன்மையுடையதாகவும், அதிகமான மற்றும் மிருதுவான இலைகளையுடையதாகவும் அறியப்படுகிறது. இவற்றின் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. அதிக விதைகள் கிடைப்பதால் இவற்றை மிக சுலபமாக இனவிருத்தி செய்யலாம்.

மல்பரி (Mulberry) :

பட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு பயன்படும் இச்செடிகளின் இலைகள் முயலிற்கும், ஆட்டிற்கும் மிக பயனுள்ள உணவாகும். மல்பரி மர வகையாக இருந்தபோதிலும், அவ்வப்போது அதிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பறித்து ஒரு புதர் போல் வளர்க்க முடியும். இதுவும் பனி எதிர்ப்பு திறன் கொண்ட அகன்ற மற்றும் மிருதுவான இலை கொண்ட தீவனப் பயிராகும்.

நேப்பியர் புல் (Napier grass) :

இத்தீவனப் பயிர் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவலாகப் பயிர்செய்யப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது. இது ஓர் அடர்த்தியான புதராக நீண்ட மிருதுவான இலைகளை உடையதாக உள்ளது. ஒரு முறை பயிரிட்டால் 4 முதல் 5 வருடங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். மன்னவனூரில் முதன்முறையாக பயிரிடப்பட்டதில் இதன் பனி எதிர்ப்பு தன்மை சிறிது குறைவாக உள்ளதென அறியப்பட்டுள்ளது. இதன் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன.

குதிரை மசால் மரம் (Tree Lucerne) :

இந்த மரக்கன்றுகள் ஊட்டியிலிருந்து எடுத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இது நன்கு உயரமாகவும், அதிகமான கிளைகளையும் கொண்டதாக உள்ளது. இதன் இலைகள் சிறியதாகவும், மிருதுவாகவும் உள்ளதால் முயல் இதை விரும்பி உட்கொள்கிறது. இதில் அதிக விதைகள் உற்பத்தியாவதால் இப்பயிரை எளிதில் இனி விருத்தி செய்யலாம்.

தொடர்பு கொள்ள :

பொறுப்பு அலுவலர்
தென் மண்டல ஆராய்ச்சி மையம்
மன்னவனூர் (அஞ்சல்)
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம்.