மரத்தில் அமர்ந்து குழல் ஊதும் மேய்ப்பன், சுற்றிலும் மேய்ச்சல் மாடுகள்... இப்படித்தான் இருந்தது கிராம வாழ்க்கை. இப்போதோ எல்லாமே தலைகீழ்.
மேய்ச்சலுக்கு இடமில்லை; மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது நிரந்தர புலம்பலாக மாறிவிட்டது. விளைவு? கிராமங்களிலும் பால் பாக்கெட் வாங்குவதும், இயற்கை உரத்துக்குப் பதிலாக யூரியாவை வாங்கி வயலுக்குப் போடுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
விவசாயிகளின் இந்தப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு புதுச்சேரியில் புதிய பண்ணை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் இளைஞர் பி.தாமோதரன். விஞ்ஞான முறையிலான அவருடைய பண்ணை முறையைப் பற்றிக் கேட்டோம்.
கால்நடை வளர்ப்பு பற்றிய இந்த திட்டத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற காரணத்தினால் மக்கள் தங்கள் தேவைக்கான பாலையும் இறைச்சியையும் கடையில் வாங்கிக் கொள்வதற்குத் தயாராகிவிடுகிறார்கள். கால்நடைகளைப் பராமரிக்க நிறைய நேரமும் உழைப்பும் செலவாகிறது என்பது கிராம மக்களின் கருத்தாக இருக்கிறது.
மேய்க்க வேண்டியில்லாத, விஞ்ஞான பூர்வமான வளர்ப்பு திட்டத்தினால் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று தோன்றியது. கால்நடைகளை ஒரே இடத்தில் வைத்து வளர்ப்பதும் அவற்றுக்கான உணவைப் பக்கத்திலேயே பயிர் செய்து கொள்வதும் போதுமானதாகத் தோன்றவே பரீட்சார்த்த முறையில் இதைத் தொடங்கினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து இதற்கு வழிகாட்டி வருகிறோம்.
வழிகாட்டுதல் என்றால் எந்தவிதத்தில்?
கால்நடைகளுக்கான கூடாரம் எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் அதை அமைத்துக் கொடுப்பதற்கும் உதவுகிறோம். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க மாதந்தோறும் சென்று மருத்துவ பரிசோதனை செய்கிறோம். நான் அடிப்படையில் பி.பார்ம் படித்தவன்.
ஆதலால் அதற்கான மருத்துவக் குழுவையும் ஏற்படுத்தினேன். இதற்காக நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. கூடாரம் அமைத்து கறவை பசுக்களையும் ஆடுகளையும் வாங்கித் தந்து அவற்றுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் செய்வதற்கு ஈடாக அவர்கள் வளர்க்கும் கால் நடைகளின் பால், இறைச்சி ஆகியவற்றின் விற்பனையில் இரண்டு சதவீதத்தை மட்டும் பெற்றுக் கொள்கிறோம்.
இந்த ஆறு ஆண்டுகளில் புதுவை, விழுப்புரம், கடலூர், ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த முறையில் கால்நடைகளை வளர்த்துப் பயன் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை 2500 பேர் பண்ணை அமைக்க மனு செய்திருக்கிறார்கள்.
ஏழை விவசாயிகள் முதலீடு செய்வதற்கு உதவுகிறீர்களா?
நிச்சயமாக. தொடர்ச்சியான என் ஈடுபாட்டின் விளைவாக பல்வேறு வங்கிகளில் கடனுடதவி பெற்றுத் தர ஒப்பந்தங்கள் ஏற்படுத்தினோம். விவசாயி, வங்கி, எங்களுடைய அமைப்பான பெஸ்ட் பவுண்டேஷன் மூன்றும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஏழை தலித் மக்கள், மிகக் குறைந்த நிலம் வைத்திருப்போர்தான் இதில் மிகுதியாக ஆர்வம்காட்டி வருகிறார்கள்.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கடனாக வங்கிகள் வழங்குகின்றன. அதை ஆறு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதும். மேலும் இதில் முதல் ஆண்டு கால்நடை வளர்ப்புக் காலமாகக் கருத்தில் கொண்டு அந்த ஆண்டில் கடனை திருப்பி அடைக்க வேண்டியதில்லை என்றும் இந்த ஒப்பந்தத்தில் அறிவித்திருக்கிறோம்.
உங்கள் பெஸ்ட் பவுண்டேஷன் அமைப்பைப் பற்றி?
இது ஒரு சேவை அமைப்பு. விவசாயிகளின் கால்நடை உற்பத்தியில் இருந்து நாங்கள் பெறும் இரண்டு சதவீத கட்டணம்கூட விவசாயிகளுக்கு உதவுவதற்காகத்தான். சில தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு கால்நடை மருத்துவத்துக்கான மருந்துகளைத் தருகின்றன. இதில் ட்ரஸ்டியாக செயல்படும் ஃபிலிப்ஸ், ஷீலா ரஞ்சனி ஆகியோரும் வேறுபணிகளில் இருப்பவர்கள்தான். இதைச் சேவையாகத்தான் செய்துவருகிறோம்.
எந்த மாதிரியான தீவனங்களைக் கால்நடைகளுக்குக் கொடுக்கிறீர்கள்?
குதிரை மசால், முயல் மசால், கோ -4, அகத்திக் கீரை போன்ற இயற்கைத் தீவனங்களை, நாம் பண்ணை அமைத்திருக்கும் இடத்தைச் சுற்றி பயிர் செய்து கொண்டால் போதும்.
அவற்றைப் பறித்துவந்து தினமும் காலையில் ஓர் அரை மணி நேரமும் மாலையில் ஓர் அரை மணிநேரமும் இதற்குச் செலவிட வேண்டியிருக்கும். காலை முதல் மாலை வரை வெயிலில் கால் நடைகளைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இந்த முறையின் மூலம் அவற்றுக்குத் தேவையான தரமான தீவனம் கிடைப்பதும் சுகாதாரமான முறையில் வளர்க்க முடிவும் சாத்தியமாகிறது.
இயற்கைச் சீற்றங்களால் கால்நடைகளுக்கோ, கூடாரங்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால்..?
வங்கியின் மூலம் பண உதவி பெறும்போதே கால்நடை, கூடாரம், அதை வளர்க்கும் விவசாயி மூவருக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. இதனால் இது நூறு சதவீதம் பாதுகாப்பான பண்ணை முறையாகும்.
பெரிய அளவில் இந்தப் பண்ணையை உருவாக்க நினைப்பவர்களுக்கு?
சொந்தப் பணத்தில் செய்பவர்களுக்கும் நாங்கள் பண்ணை அமைக்க உதவுகிறோம். ஐந்து ஏக்கர் வரை செய்பவர்களுக்கு வங்கி மூலமாக பணம் வாங்கித் தருகிறோம்.
படித்த, வேலையற்ற கிராமத்து இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிலம் இருக்கும் விவசாயிகளும்கூட விவசாயத்துறையில் போதிய விஞ்ஞான முன்னேற்றங்களைக் கொண்டுவராததால் பல நூறு ஆண்டுகளாக செய்துவரும் அதே முறையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு போராடி, சோர்ந்து வேறு வேலைகளுக்குப் போக எண்ணுகிறார்கள்.
இந்தப் பண்ணைமுறை அத்தகைய எண்ணத்தை மாற்றுகிறது. அரசு வேலைதான் வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு சுயத் தொழிலில் கவனம் செலுத்துவதைக் காண்கிறோம்.
ஒரு ஏக்கரில் எத்தனை பசுக்களும் ஆடுகளும் வளர்க்கலாம்?
இருபது ஆடுகளும் இரண்டு பசுக்களும் வளர்ப்பது ஏற்றது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். இவற்றை வளர்ப்பதற்கு ஒரு மனிதர் மட்டும் பகுதி நேரம் உழைத்தாலே போதும் என்பதால் மனித உழைப்பு மிகவும் குறைவு.
இந்த முறையில் கால்நடைகளை வளர்ப்பதால் வேறு நன்மைகள் ஏதேனும் உண்டா?
வேலை நேரம் மிச்சம் என்பதோடு, சுகாதாரமான இறைச்சியும் பாலும் கிடைக்கிறது. இவற்றையெல்லாம்விட முக்கியமாக இயற்கை உரம் கிடைக்கிறது.
விவசாயிகளிடம் இருந்து இதற்குக் கிடைக்கும் வரவேற்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் விவசாய நிலங்களில் ஆடுகளை மந்தை மடக்கி வைத்து இதனால் கிடைக்கும் கழிவுகளில் விவசாயம் செய்யும்போது அமோக விளைச்சலும் பயிருக்குப் போதிய நோய் தாங்கும் சக்தியும் கிடைத்தது. இந்தப் பண்ணை திட்டத்தின் மூலம் அதை மீண்டும் பெறுவதாகக் கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக