யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

காவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை

காவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை!

மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முப்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர். பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, கடற்கரை செல்லும் வழியில் சிறிது தூரம் சென்றால், பனை ஓலையால் வேலியமைக்கப்பட்ட இளங்கோவனின் பண்ணை வரவேற்கிறது.
''எனக்கு பூர்விகம், கடலூர் மாவட்டம், புதுப்பாளையம். எங்கப்பா வேளாண்மை துறையில அதிகாரியா இருந்தவரு. வீட்லயும் விவசாயம் செஞ்சுட்டு இருந்ததால... சின்ன வயசிலிருந்தே விவசாயத்து மேல அதிக ஆர்வம். காவல் துறையில வேல கிடைச்சாலும், விவசாய ஆர்வம்  குறையல. அந்த ஆர்வத்துக்கு, நண்பர் ராஜாமணியோட தொடர்பால, சமீபத்துல விடிவு பொறந்திருக்கு. முதல்ல சின்ன அளவுல செஞ்சு பார்க்கலாம். பிறகு, பெரிய அளவுல இறங்கலாம்னுதான் இந்த 25 சென்ட்ல விவசாயத்தை ஆரம்பிச்சுருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த இளங்கோவன், தொடர்ந்தார்.
பலவிதப் பயிர்கள்!
''படிப்பு முடிச்சதும், உரக்கடையில கொஞ்ச நாள் வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான், ரசாயன உரங்களால வர்ற தீமைகளையும் தெரிஞ்சுகிட்டேன். அதனால ஆரம்பத்துல இருந்தே, இயற்கை விவசாயம் பத்தின தேடல் இருந்துச்சு. ராஜாமணி மூலமாதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, விவசாயத்து மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. இனியும் தயங்கிகிட்டே இருக்கக்கூடாதுனு சோதனை முயற்சியில இறங்கியாச்சு. இந்த 25 சென்ட்ல சவுக்கு, குமிழ், மா, வாழை, காய்கறிகள், தர்பூசணினு விதவிதமான செடிகளைப் பாக்கும்போது சந்தோஷமா இருக்கு. இது மணற்பாங்கான இடம்கிறதால கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, இந்த மூணு மாசத்துலயே செடிகள்ல நல்லா வேர் புடிச்சிருச்சு. இதுவே பாதி வெற்றிதான். இன்னும் கொஞ்ச நாள்லயே பசுமைக் கட்டிடும்'' என்ற இளங்கோவன், பண்ணையைப் பராமரித்து வரும் ராஜாமணியை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
நான்கு வரிசையில் பயிர்கள்!
''மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள்னு அடுக்கு வரிசையில போட்டிருக்கோம். நடுவுல தர்பூசணி இருக்கு. மதுராந்தகம் பக்கத்துல இருக்குற பொலம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியவர் முத்துமல்லா ரெட்டியாரிடம் இருந்துதான் இந்த தொழில்நுட்பத்தைக் கத்துகிட்டோம். ஒரு சென்ட்ல ரோஜா, முல்லை, திசுவாழைனு இருக்கு. இங்கயே ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். நாங்க தங்குறதுக்கான ஒரு ஷெட்டும் இருக்கு. தோட்டத்தை சுத்தி பனை ஓலைகளை வெச்சு வேலி அமைச்சு... பக்கத்துல உயிர்வேலியாக நெய்வேலி காட்டாமணக்கை நட்டுட்டோம்.
முதல் வரிசையில ஓரடி அடி இடைவெளியில 150 சவுக்கு இருக்கு. அதுக்கு இடையில பாவக்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரி, தக்காளி இருக்கு. எதிர் பக்கத்துல 150 சவுக்கும், பத்தடி இடைவெளியில 15 சந்தன கன்னுகளும் நட்டிருக்கோம். சவுக்கு வளந்த பிறகு, நிலத்த சுத்தி வேலி மாதிரி ஆகிடும். ரெண்டாவது வரிசையில மூணடி இடைவெளியில 32 குமிழ் கன்னுகள் இருக்கு. அதுக்கு எதிர் பக்கத்துல பத்து அடி இடைவெளியில நாலு செஞ்சந்தனம் இருக்கு. இதுக்கான இடைவெளியில நாலு தென்னை, வாழை இருக்கு. மூணாவது வரிசையில பத்து அடி இடைவெளியில நாலு மாங்கன்னுகளும், 25 அடி இடைவெளியில 5 தென்னையும்,
5 வாழையும் கலந்து நட்டிருக்கோம். அதுக்கு எதிர்பக்கத்துல 5 அடி இடைவெளியில 22 சந்தனமும், ஒட்டுண்ணிச் செடியா மாதுளையும் நட்டிருக்கோம். நாலாவது வரிசையில 15 அடி இடைவெளியில பலாவும், அதுக்கு இடையில கொய்யாவும் நட்டிருக்கோம். எதிர் பக்கத்துல 8 அடி இடைவெளியில் 15 ரோஸ்வுட்டும், 15 சந்தனம் என 300 மரக்கன்றுகள் இருக்கு. சுத்தியும் மரப்பயிர்கள் போட்டதுக்கு பிறகு, ஒரு அடி இடைவெளியில 260 குழிகள் எடுத்து தர்பூசணி போட்டிருக்கோம்'' என்ற ராஜாமணி பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
''ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... வேப்ப மரத்தூள் (மரம் அறுக்கும் ஆலைகளில் கிடைக்கும்), குப்பை உரம் (திடக் கழிவு), எரு இது மூணையும் சம அளவில் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு, ஒவ்வொரு குழியிலயும் போட்டு கன்னுகளை நட்டிருக்கோம். சரியா வேர் பிடிக்காத செடிகளைப் பக்கவாட்டுல தோண்டி, வேரோடு எடுத்து வேறொரு இடத்துல வெச்சுடுவோம். அஞ்சு நாளைக்கு ஒரு தடவை, அமுதக் கரைசலையும், 11 நாட்களுக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தையும் கொடுக்கிறோம். அமுதக் கரைசலை செடிகள்ல தெளிக்கிறப்போ, இனிப்புச் சுவைக்கு எறும்புகள் வருது. அந்த எறும்புகள் இலைகளைத் தாக்குற பூச்சிகளோட முட்டைகளை சாப்பிட்டுடுது. தவிர, 15 நாளைக்கு ஒரு தடவை வேப்பங் கொட்டைக் கரைசலையும் தெளிக்கிறோம்'' என்றார்.
பணம் தேவையில்லை...மனம் இருந்தால் போதும்!
மீண்டும் நம் முன் வந்த இளங்கோவன், ''சலுகை விலையிலதான் கன்னுகளை வாங்கினோம். தேங்காய் ஓலையிலயே ஷெட் போட்டுட்டோம். இப்படி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுட்டோம். 2 மாசத்துல தர்பூசணி மூலமாவும், 3 மாசத்துல பூக்கள் மூலமாவும் வருமானம் கிடைக்கலாம். வருமானத்தைவிட, மனசுல ஆர்வம் இருந்தா... சின்ன இடத்துலகூட விவசாயம் செய்ய முடியுங்கிறதுக்கு உதாரணமா ஒரு மாதிரிப் பண்ணையா ஆக்கணும்ங்கிறதுதான் எங்களோட முக்கிய நோக்கம். இதன் மூலமா சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்க முடியும்... சுற்றுச்சூழலையும் காப் பாத்த முடியும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!
 தொடர்புக்கு,
வேணு. ராஜாமணி,
செல்போன்: 97904-25912

சனி, 1 பிப்ரவரி, 2014

ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

செய்முறை

மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை, கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.

ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.

அளவு - 1 மீ x 1மீ x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.

குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.

தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).

பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.

பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.

ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.

மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்

நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.

இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.

2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.

ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.