கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் அமைக்க விரும்பும் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: அரசு கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 50 பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கறிக்கோழி பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு பண்ணை கொட்டகை அமைக்கும் செலவில் 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும். இது தவிர நபார்டு வங்கியின் சார்பில் கோழி துணிகர முதலீட்டு நிதியிலிருந்தும் 25 சதவீதம் பின் மானியமாகவும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், வங்கிகள் மூலம் கடன் பெற்றோ அல்லது சொந்த செலவிலோ அமைத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் 5 ஆயிரம் கோழிகள் கொண்ட பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் வசிக்கும் விவசாயிகள், தனி நபர் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் இதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். இவர்களிடம் பண்ணை அமைக்க போதுமான இடம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருக்க வேண்டும். எனவே இத்தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும், பண்ணையை விரிவாக்கம் செய்வதற்கு ஆர்வமுள்ளோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். இத்திட்டத்தில் கடந்த ஆண்டு பயன் அடைந்தவர்கள் நிகழாண்டில் பயன் பெற முடியாது.
இதில், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் முறையாக பயிற்சி அளிக்கப்படும். அதேபோல், தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டாயம் 60 நாள்களுக்குள் கொட்டகை அமைக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட தகுதியும் ஆர்வமும் உள்ளளோர் மாவட்ட ஆட்சியரால் அங்கீகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளரின் திட்ட மதிப்பீட்டு கடிதம், தேர்வு செய்யப்பட்ட வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுகள் ஆகியவைகளுடன் விண்ணப்பங்களை விருதுநகர் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் டி.என். ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக