யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 19 மே, 2014

ஆடுகளுக்கு தாதுக்கலவை.,!

தாதுக்கலவை

தாதுக்கள் உடற்செயல் இயக்கம், எலும்புக்கூடு, பால் உற்பத்தி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதால் சரியான அளவு தாதுக்கள் அளிக்கவேண்டியது, அவசியம். இதில் மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். 50 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு கால்சியம் 6.5 கி, பாஸ்பரஸ் 3.5 கி தேவைப்படுகிறது. அடர் தீவனத்தில் 0.2 சதவிகிதம் என்ற அளவில் தாதுக்களைக் கலந்தும் அளிக்கலாம்.


சாதாரண உப்பு

சாதாரண உப்பு பாலில் சோடியம், குளோரைடு மற்றும் இரும்புச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே ஆடுகளுக்கு சாதாரண உப்பு தருவது மிகவும் முக்கியம். ஒரு கட்டி உப்பை ஆடுகள் நாக்கில் நக்குமாறு தருவது மிகுந்த நன்மை பயக்கும் அல்லது தீவனத்துடன் 2 சதவிகிதம் உப்பை கலந்துக் கொடுக்கலாம்.

விட்டமின் மற்றும் தடுப்பு மருந்துகள்

விட்டமின், ஏ, ஈ மற்றும் டி போன்றவை ஆடுகளுக்கு அத்தியாவசியமானவை. வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் தேவையான விட்டமின்களைத் தயாரித்துக் கொள்ளும். அது போக பசும்புற்களில் விட்டமின் ஏ நிறைந்திருக்கும் மக்காச் சோளம், சதையுள்ள பசுந்தீவனம் பிற விட்டமின்களைத் தரும். வளரும் கன்றுகளுக்கு விட்டமின்கள் மிகவும் அவசியம்.

ஏரோமைசின், டெராமைசின் வளரும் குட்டிகளுக்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு, நோய்த் தாக்குதலைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்கிவிக்கும்.



ஊட்டச்சத்து

சினை ஆடுகளுக்கு கடைசி இரு மாதத்தில் தான் குட்டிகள் 70 சதவிகிதம் எடை பெறுகின்றன. எனவே இந்த சமயத்தில் முறையான தீவன கவனிப்பு அவசியம். இல்லையெனில் குட்டிகள் குறைந்த எடையுடனோ அல்லது இறந்தோ பிறக்க வாய்ப்புள்ளது. எனவே இச்சமயத்தில் நன்கு அடர் தீவனம் அளிக்கவேண்டும். மேலும் கருப்பை விரிந்து வயிறு முழுவதும் அடைத்துக் கொள்வதால் நிறையத் தீவனமும் ஆட்டினால் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே சரியாக கவனித்து நன்றாக தீவனம் அளிக்கவேண்டும்.

சினையாக இருக்கும் போது ஆடுகள் உள்ளே சேகரித்து வைத்துள்ள கொழுப்பு, கார்போஹைட்ரேட் முழுவதும் குட்டிகளுக்கு கொடுத்து விடும். எனவே அதற்குத் தேவையான அளவு உணவைக் குறிப்பாக நல்ல தரமுள்ள உலர் தீவனம் அளித்தல் அவசியம். சினைக்காலத்தில் நல்ல உலர் தீவனம் அளித்தால் தான் குட்டி ஈன்றபின் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

அதே போல், புரதம் கலந்த அடர் தீவனம் கொடுக்கவேண்டும். அடர் தீவனம் அதிகமாகக் கொடுத்தாலும் கன்று ஈனுதல் மெதுவாகவும், செரிப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கும். எனவே 16-17 சதவிகிதம் புரதம், சிறிது உப்பு மற்றும் தாதுக்கள் கலந்த கலப்பு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
(ஆதாரம்: Handbook of Animal Husbandry Dr. Achariya)

மழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா?

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் தளிர் இலைகளையும், புற்களையும் ஆடுகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறு ஏற்படும். இது தவிர மிகவும் அரைத்து வைத்த தானியங்களை சாப்பிட கொடுக்கும் போதும், விரயமான காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் செரிமான கோளாறு ஏற்படும். வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது இவ்வாறு நேர்வதுண்டு.



பாதிக்கப்பட்ட அறிகுறிகள்
வயிறு உப்புசம் ஏற்படும். ஆடுகள் உறக்கமின்றி காணப்படும். பல்லை அடிக்கடி கடித்துக் கொள்ளும். பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை மாறி மாறி வைத்துக் கொள்ளும். இடது பக்க வயிறு, வலது பக்கத்தை விட பெருத்து இருக்கும். உப்புசத்தால் மூச்சு திணறும். வாயினால் மூச்சு விடும். நாக்கை வெளியில் தள்ளும். தலையையும், கழுத்தையும் முன்னோக்கி வைத்துக் கொள்ளும்.

வயிறு உப்புசத்தை சமாளிக்கும் முறைகள்
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை மேற்கொள்ளவும். இல்லாது போனால் நீங்களே முதல் உதவியாக 50 முதல் 100 மிலி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை வாய் வழியாக கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது புரை ஏறாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மேலும் கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

தடுப்பு முறைகள்:
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் அதிக நேரம் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவனத்துடன் நொதிக்க கூடிய மாவுப்பொருட்களை சேர்க்க கூடாது. போதுமான அளவு காய்ந்த புல் தர வேண்டும்.
தகவல்; டாக்டர் பூவராஜன்.