திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகள் மூலம் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் வீடுகளில் சுமார் 3¼ லட்சம் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், இறைச்சி கோழி பண்ணைகளும் பெருமளவில் செயல்பட்டு உள்ளன. இந்த பண்ணைகளில் மட்டும் 25 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 28¼ லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கழிச்சல் நோய்
இதர வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் கோழிகளுக்கு நோயை தாங்கும் சக்தி மிகவும் குறைவு ஆகும். எனவே, நோய் தாக்கினால் கோழிகள் எளிதில் இறந்து விடும் வாய்ப்பு உண்டு. இதில் கழிச்சல் நோய் கோழிகளை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாகும்.
ஒருவித வைரஸ் மூலம் பரவும் இந்த நோய் தாக்கும் கோழிகள் இறந்து விடுவதும் உண்டு. ஆனால், தடுப்பூசி போடுவதன் மூலம் கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை காப்பாற்ற முடியும். எனவே, மாவட்டம் முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் 3¼ கோழிகளுக்காக அரசு கால்நடை மருத்துவமனைகளில் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
இதற்காக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அனைத்து கால்நடை ஆஸ்பத்திரிகள், கிளை நிலையங்களில் கழிச்சல் நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கால்நடை ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு வாரமும், கிளை நிலையங்களில் 2 வாரத்திற்கு ஒருமுறையும் சனிக்கிழமை தினத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
கோழிகளுக்கு ஒரு முறை தடுப்பூசி போடும்பட்சத்தில் அடுத்த ஓராண்டுக்கு நோய் தாக்குதல் இருக்காது. எனவே, கோழி வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று உதவி இயக்குனர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.