யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 7 மே, 2014

கால்நடை மருத்துவப் படிப்பு

கால்நடை மருத்துவப் படிப்பு: மே 12 முதல் விண்ணப்பம் விநியோகம்
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 2014-15-ஆம் ஆண்டு அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான இளநிலைப் பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல்லில் திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வருகிற 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.600. தலித், பழங்குடியின மாணவர்கள் ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். இந்தக் கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் செலுத்தி ரசீது பெற்று, அதனுடன் விண்ணப்பக் கடித்தை இணைத்து அளித்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பெற்று, ஜூன் 2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் குறித்த வழிமுறைகள், இதர விவரங்களையும் www.tanuvas.ac.inugadmission என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286- 266491, 220650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுக் கோழிகள்

காட்டுக் கோழிகள்
மனம் ஒன்றி அன்போடு வாழும் தம்பதிகளை, மனமொத்த காதலர்களை இணைபிரியாத ஜோடிப் புறாக்களோடு ஒப்புமைப்படுத்திப் பலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். வனப் பகுதிக்குள்ளும் எப்போதும் இணை பிரியாமல் இருக்கும் ஒரு ஜோடி உண்டு. அதுதான் "ஜங்கிள் பவுல்' எனப்படும் காட்டுக் கோழியாகும்.
இந்தியாவில் இரண்டு வகை காட்டுக் கோழிகள் உள்ளன. தென்னிந்தியாவில் காணப்படுவது சாம்பல் காட்டுக் கோழிகள் எனப்படும் "கிரே ஜங்கிள் பவுல்' இனமாகும். வடகிழக்கு இந்தியாவில் சிவப்பு காட்டுக் கோழிகள் எனப்படும் "ரெட் ஜங்கிள் பவுல்'கள் காணப்படுகின்றன. இத்தகைய காட்டுக் கோழிகளைக் குறித்து பறவை ஆராய்ச்சியாளரான கார்த்திகேயன் மற்றும் அவைநாயகம் ஆகியோர் கூறியது:
""மற்ற பறவை இனங்களைப் போல் இல்லாமல் காட்டுக் கோழிகள் எப்போதுமே தனது ஜோடியுடனேயே காணப்படும். அத்துடன் தனது இணையைத் தேடி அது போடும் சப்தம் தனித்தன்மையுடன் இருக்கும். அதனால், எந்த இடத்தில் காட்டுக் கோழிகள் உள்ளன என்பதை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
வனப்பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்கும் போதும், மூங்கில்களில் அரிசி வரும்போதும் இவை அப்பகுதிகளில் கூட்டமாக காணப்படும். மூங்கிலில் அரிசி 60 ஆண்டுக்கொரு முறையும், குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுக்கொரு முறையும் மலரும் என்பது நமக்கு தெரியுமோ இல்லையோ காட்டுக்கோழிக்குத் தெரிந்துவிடும். அதனால் காட்டுக்கோழியைக் குறித்த ஆராய்ச்சியாளர்களும் இத்தகைய பருவங்களிலேயே தங்களது ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.
காட்டுக் கோழிகளுக்கு ஓர் இயல்பு உண்டு. ஒரு கூட்டத்தில் ஓர் ஆண் சேவல் மட்டுமே இருக்கும். இந்த கூட்டத்திற்குள் மற்ற சேவல் ஏதேனும் நுழைந்துவிட்டால் அவை சண்டையிட்டு இரண்டில் ஒன்று கொல்லப்படும்வரை இந்த சண்டை ஓயாது. அதேபோல, பெண் காட்டுக் கோழிகள் அதிகபட்சமாக 4 முதல் 7 முட்டைகள் வரையே இடும். இவை இரவு நேரங்களில் மரக்கிளைகளில்தான் தங்கும். பகல் நேரங்களில் தரைப் பகுதியிலும், புதர்களில் இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவை மரக் கிளைகளையே நாடுகின்றன. பிப்ரவரி முதல் மே மாதங்கள் வரையே இவை முட்டையிடும் பருவமாகும்.
காடை, கெüதாரி போன்றவையும் இத்தகைய கோழி இனத்தில் வந்தாலும் காட்டுக்கோழிகள் மட்டும் தனித்தன்மை வாய்ந்தவை. கம்பீரமாகக் காணப்படும் இவற்றின் கொண்டைப் பகுதியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தங்க நிறத்தில் காணப்படும். அதேபோல, ஆண் சேவலின் வால் பகுதி வளைந்த அரிவாள் போல இருக்கும். இதுவும் ஒளிரும் தன்மை கொண்டது.
காட்டுக் கோழிகளைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலும் காணக் கிடைக்கிறது. வாரணம் என அழைக்கப்பட்டுள்ளன. வாரணம் என்றால் யானைகளையும் குறிக்கும். காட்டுக் கோழிகளையும் குறிக்கும்.
இந்தியாவில் மவுண்ட் அபு, கோதாவரி நதிக்கரை தொடங்கி, குமரி முனைவரை சாம்பல் காட்டுக் கோழிகளே காணப்படுகின்றன. இலையுதிர் காடுகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் அதிகளவில் காணப்படும் இந்தக் காட்டுக்கோழிகள் லெண்டானா எனப்படும் உண்ணிச் செடிகளின் பழங்களைச் சாப்பிடுவதால் அவற்றின் கொட்டைகள் அதிக அளவில் பரவி களைகள் அதிகரிப்பிற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.
ஆனால், மரங்களில் இவை வசிப்பதால் அந்த மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு மரங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மறைமுகமாகவும் உதவுகின்றன. பொதுவாக பறவைகள் ஆகாயத்தில் பறப்பவை, மரங்களில் கூடு கட்டி வாழ்பவை, தரைவாழ் பறவைகள் எனப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் காட்டுக் கோழிகள் தரைவாழ் பறவையாகும்.
பிராய்லர் கோழிகள், நாட்டுக் கோழிகள் என மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு காட்டுக்கோழி இனத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. நாம் பார்த்த கோழிகளை விட உருவத்தில் சிறியவையாக இவை இருந்தாலும் வனப்பகுதிகளில் உள்ள பறவையினங்களில் இவை விசேஷமானவை என்பதே இவற்றின் தனிச்சிறப்பாகும்.
இவற்றின் இறைச்சிக்கு மருத்துவக் குணம் உள்ளது என்ற தகவலால் இவை அதிக அளவில் கொல்லப்படுகின்றன. நமக்கு பிராய்லர்களும், நாட்டுக் கோழிகளும் வர்த்தக ரீதியாகவே கிடைப்பதால், காட்டுக் கோழி இனத்தையாவது அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.