மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.
வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும்.
இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.
வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும்.
பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 – 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
இலவச மின்சாரம்:
பரண் மேல் ஆடு வளர்க்கும் போது அதற்கு தேவையான தண்ணீரினை இலவச மின்சாரத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஆடு வளர்ப்பு மட்டும் அல்ல… வேளாண்மை சார்ந்த அனைத்து பண்ணைத் தொழில்களுக்குமே .. விவசாய கிணறுகளில் இருந்து இலவச மின்சாரம் மூலம் எடுக்கப்படும் நீரினை பயன்படுத்திடலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு மார்ச் 30 – 2012 இல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
எனவே எந்த வித பயமும் இன்றி விவசாயிகள் இலவச மின்சாரம் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கும் நீரினை பட்டு வளர்ப்பு , கோழி பண்ணை , ஆடு மற்றும் மாட்டுப் பண்ணை உட்பட அனைத்து விதமான வேளாண் பண்ணைத் தொழில்களுக்கும் பயன்படுத்திடலாம்.