யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 31 மார்ச், 2014

இயற்கைவழி கோழி பண்ணை

 இன்று கோழி பண்ணை என்றவுடன் நம் எண்ண கண்களில் தோன்றுவது, நாலு சென்டில் கம்பி வலைகளால் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளே சில ஆயிரம் கோழி குஞ்சுகள், அதற்கு உணவாக பரிமாற ரசாயன உணவுகள் மேலும் அதனுடைய வளர்ச்சியை இயற்கைக்கு மாறாக ஊக்குவிக்க சில ரசாயன மருந்துகள், மேலும் செயற்கையாக குஞ்சு பொரிக்க வைக்கவும் கோழி குஞ்சுகளுக்கு இதமான சூட்டினை கொடுத்து கொண்டிருக்கவும் சில மின் இயந்திரங்கள். இப்படி ஒரு கோழி பண்ணை அமைப்பதற்கு எப்படியும் சில இலட்சங்களை செலவு செய்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அப்படி செயல் படுத்தினாலும் இதிலிருந்து வளரும் கோழிகள் ரசாயன தீவனம் கொடுத்து வளர்க்கபட்டதால், கோழியின் மாமிசத்தை உண்ணும் பொழுது எதோ ஒரு பக்கவிளைவினை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. மேலும் நாட்டு கோழிகளை ஒப்பிடும் பொழுது இவ்வாறு வளர்க்கப்படும் பிராயிளர் கோழிகளிடம் ருசியும் இருப்பதில்லை, சத்தும் இருப்பதில்லை. கோழி வளர்ப்பு என்ற பெயரில் இங்கு கோழி உற்பத்தி மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை விவசாயம் என்பது விளைவிக்கும் உணவில் மட்டுமே முடிந்து விடக்கூடிய ஒன்றாக இல்லாமல் வளர்க்கக்கூடிய கால்நடைகளிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

வளர்ப்பு செலவு குறைய வேண்டும், வளர்க்கப்படும் கோழி உண்பவனுக்கு எந்த ஒரு பக்கவிளைவினையும் கொடுக்க கூடாது, மேலும் உண்பவர்க்கு நல்ல சத்துள்ள உணவாக அது இருக்க வேண்டும். இந்த மூன்று இலக்கையும் அடைய வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கையில், நான் அறிந்த இயற்கையினை கொண்டு வகுத்து வைத்துள்ள திட்டம் இது. இதனை செயல்முறை படுத்த தற்போது எனக்கு நேரமில்லை. இருந்தாலும் இதை படித்துவிட்டு முயன்று பாருங்கள் நண்பர்களே. திட்டத்திற்குள் செல்வதற்கு முன்பு இயற்கையின் உயிர் சுழற்சி, உணவு சங்கிலி, நீர் சுழற்சி என மூன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

  •   இயற்கையின் உணவு சங்கிலியை நன்கு உற்று நோக்கினால் உங்களுக்கு ஒன்று நன்றாக புரியும், அதாவது இந்த மண்ணில் வாழும் அணைத்து உயிரும் இன்னொரு உயிரை தான் தன்னுடைய உணவிற்காக சார்ந்து இருக்கும் அவை தாவரங்களாக இருக்கலாம், அல்லது வேறு உயிர்களாக இருக்கலாம்.
  •   இந்த பூமியில் மழை பெய்வதற்கான காரணம், அதாவது நீர் இந்த மண்ணில் விழுவதற்கான காரணம் இந்த மண்ணில் உயிர் பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இயற்கையின் ஆற்றல். நன்கு கவனித்து பாருங்கள், மழை காலங்களில் பூச்சிக்களையும், பறவைகளையும், கண்ணுக்கு தெரியாத மண்ணில் வாழும் நுண்ணுயிர்களையும் அதிக எண்ணிக்கையில் காண முடியும். இந்த மண்ணில் நீர் விழுந்தால், அது ஈரம் அடைந்தால் அங்கு நுன்னியிர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்படி அதிகமாகும் பொழுது அதனை சார்ந்திருக்கும் மற்ற உயிர்களான பூச்சி, புழு, சிறு தாவரங்கள், கரையான் என பல்லுயிர் பெருக்கம் அங்கு நடக்கும். இதன் மூலம் உணவு பொருட்களின் விளைச்சலும் அதிகம் ஆகும். தாவர உணவை சார்ந்திருக்கும் மற்ற பெருயிர்களும் வாழும், அதன் வழியே அதனுடைய எண்ணிகையும் பெருகும்.

இந்த இரண்டு புரிதலை கொண்டு பார்க்கும் பொழுது அறிந்தது, ஒரு உயிருள்ள கோழி வளர்வதற்கு தேவையானது ரசாயன உரங்கள், குடில்களும், மின் இயந்திரங்களும் இல்லை. ஒரு உயிர் வளர்வதற்கு தேவை மற்றொரு உயிர் தான். வயலில் மேயும் கோழிகளை நீங்கள் பார்த்திருக்கலாம், அது உணவாக எடுத்து கொள்வது அங்குள்ள சிறு செடிகளையும், பூச்சி புழுக்களை தான். ஆகவே சிறு செடிகள், பூச்சி, புழு, கரையான் ஆகிய உயிர்களின் எண்ணிக்கையினை அதிகபடுத்திவிட்டால் கோழிக்காண உணவு கிடைத்து விடும். கோழியின் இந்த நேரடி உணவுகள் சார்ந்திருப்பது மண்ணில் வாழும் நுன்னுயிரையும், மண்ணில் உள்ள ஈரப்பதத்தையும் தான். ஆக நீர் தான் அணைத்து உயிர் வளர்ச்சிக்கும் ஒரே தேவை.

இங்கு சொல்ல போகிற இயற்கை வழி கோழி பண்ணைக்கு ஒரே ஒரு தேவை நீர் மட்டுமே, அதை தவிர வேற எந்த ஒரு ரூபாய் செலவும் இருக்க கூடாது. ஒரே ஒரு ஏக்கர் நிலம் எடுத்து கொள்ளுங்கள், பின்பு பின்னப்பட்ட தென்னை ஓலை இரண்டு அடுக்கு கட்டி பன்னிரண்டு அடி உயரத்தில் அதன் சுற்றியும் வேலி அமைத்து கொள்ளவும். பின்பு நிலம் முழுவதும் இயற்கையிடமிருந்து பெற்றது மற்றும் உங்களுக்கு தேவை இல்லை இது குப்பை முடிவு செய்தது அனைத்தையும் முடாக்காக போடவும் (நெல் புல், காய் கழிவுகள், இலைகள், தேங்காய் நார், தலைகள் என கால் அடி உயரத்திற்கு). ஒரு ஏக்கரில் அங்கங்கு நீர் தெளிப்பு இயந்திரம்(Sprinklers) வைத்து  விடுங்கள். இனி நீங்கள் செய்ய வேண்டியது வாரத்திற்கு மூன்று முறை இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம் என Sprinklers-யை போட்டு விட்டால் போதும்.

மேலே கூறப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு ஒரு இரண்டு வாரம் கழித்து ஒரு 200 நாட்டு கோழிகளை விட்டு விடுங்கள். இந்த இரண்டு வாரங்களில், மூடாக்கு அமைத்துள்ளதனால் மண்ணில் எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும், அதனால் அதிகமான நீர் தேவையும் இருக்காது. அதே வேளையில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமடைந்து கொண்டே இருக்கும். நுண்ணுயிர்கள் அதிகம் ஆகும் பொழுது மண்ணுக்கு மேலே இருக்கும் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மட்க ஆரம்பிக்கும். அப்பொழுது அதில் பூச்சி, கரையான், புழு ஆகியவை உயிர் பெரும், அதே கணம் மண்ணில் ஈரம் உள்ளதனால் சிறு செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும். கோழிக்கு தேவையான உணவு அத்தனையும் இதிலுருந்து கிடைத்து விடும். மேலும் கோழியின் கழிவுகளும் மண்ணுக்கு செலுத்தப்பட்டு கொண்டே இருக்கும். இதன் வழி இயற்கையின் உயிர் சுழற்சி ஒன்றை இங்கு உருவாக்கி அதன் மூலம் விஷமற்ற உணவையும், நட்டமில்லா வருமானமும் பெற முடியும். கோழிகளை விட்ட பிறகும் வாரத்திற்கு மூன்று முறை இரவு நேரங்களில் நிலம் முழுவதும் நீர் தெளிக்க வேண்டும். இது மழையை செயற்கையாக பெய்ய வைப்பது. இந்த சுழற்சியினை மீண்டும் மீண்டும் நடந்தே கொண்டே இருக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு பின்பு மாதம் தலா 50 கோழிகள் என்ற வீதம் விற்பனை செய்தால் கூட மாதத்திற்கு பத்தாயிரம் எடுத்து விட முடியும்.

ஆண்டுக்கு மூன்று முறை குப்பைகளை அதிகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு எந்த செலவும் ஆகாது, மாறாக சில விவசாயிகள் சேர்ந்து கிடக்கும் இலை கழிவுகளை அகற்ற இயலாமல் எரித்து விடுகின்றனர். அது போன்ற விவசாயிகளிடமிருந்து தலை, இலைகளை கொண்டு வந்து வயல் முழுதும் பரப்பி விடலாம். இங்கு ஆகும் செலவு வேலி அமைப்பதற்கும், Sprinklers அமைப்பதற்கு மட்டுமே அதுவும் ஒரு முறை செலவு தான். தீவன செலவு எதுவும் இல்லை, மின் இயந்திரங்கள் தேவை இல்லை, இயற்கையால் வளர்க்க பட்ட எந்த ஒரு நஞ்சுமில்லாத கோழிகள் கிடைத்து விடுகிறது. நீர் மட்டுமே இங்கு முதலீடு. கோழிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகம் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அணைத்து கோழிகளுக்கும் சரியான அளவு உணவு கிடைத்து கொண்டிருக்கும்.

இது மசானபு புகாகாவின் புத்தகங்களான "ஒற்றை வைக்கோல் புரட்சி" மற்றும் "இயற்கைக்கு திரும்பும் பாதை" படித்து கொண்டிருக்கும் பொழுது தோன்றிய யோசனை. முடிந்தால் முயற்சித்து பாருங்கள். நண்பர்களே, இயற்கையிடமிருந்து எடுத்து கொள்வதற்காக மட்டுமே இங்கு உயிர்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த இயற்கைக்கு அதனிடமிருந்து பெற்றதை தவிர வேறு எதையும் நாம் கொடுக்க தேவை இல்லை.

புதன், 26 மார்ச், 2014

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்… ரெட்லேடி பப்பாளி


கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.
தினமும் வருமானம்!
எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும். இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது  கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.
ஏழு அடி இடைவெளி!
ரெட் லேடி ரகத்தின் வயது 22 மாதங்கள். ஆடி, ஆவணி மாதங்கள் நடவுக்கு உகந்தவை. இது, நல்ல சிவப்பு நிறமும், சுவையும் கொண்ட ரகம். ஒரு ஏக்கர் நிலத்தில்  இருந்து 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை இரு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10 டன் தொழுவுரம் என்ற கணக்கில் கொட்டி இறைத்து, நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 900 நாற்றுக்கள் தேவைப்படும். தரமான நாற்றுகளை நர்சரிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாற்று 13 ரூபாய்  விலையில் கிடைக்கிறது. 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழியெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும், ஒரு கிலோ நுண்ணுயிர் உரக்கலவையை இட்டு நிரப்பி, நாற்றுகளை நட்டு மண் அணைத்து தேவையான அளவு வட்டப்பாத்திகள் அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடிப் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
எட்டாம் மாதம் அறுவடை!
நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை (ஒரு ஏக்கருக்கு ) கொடுக்க வேண்டும். 7-ம் மாதம் வரை பெரிதாக பராமரிப்புத் தேவையில்லை. 8-ம் மாதம் காய் அறுவடைக்கு வந்துவிடும். தொடர்ந்து 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும்.
இந்தக் காலத்தில் மாதம் தோறும் ஏக்கருக்கு 150 கிலோ அளவுக்கு பயோ மற்றும் ஆர்கானிக் கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். வளா்ந்த செடிகளில் இருந்து பழுத்த இலைகள் விழுந்து கொண்டே இருக்கும். மரங்களின் அடியில் விழும் இலைகள் மட்கி, அந்த மரத்துக்கே உரமாகி விடும்.
பூச்சிகள்.. கவனம்!
பப்பாளியை அதிகம் தாக்கி சேதப்படுத்துவது மாவுப்பூச்சிகள்தான். ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
இலைச்சுருட்டுப் புழு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதலும் பழ அழுகல் நோயும் அதிகமாக வரும். இவற்றைக் கட்டுப்படுத்த, 15 மில்லி பயோ – ஆன்டி வைரஸ் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் தாக்கும் போது, மட்டும் தெளித்தால் போதுமானது. தலா 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை, செடிக்குச் செடி தூரில் வைத்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.
மழைநீர் தேங்கி நிற்காதபடி, வடிகால் வசதி செய்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு செடிக்கு 100 லிட்டர் நீர் கிடைக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். மரத்தில் உள்ள காய்களின் முகம் பழுக்கும் தருணத்தில், பறிக்கத் தொடங்க வேண்டும்.
விற்பனைக்கு பிரச்னை இல்லை!
திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை  எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள்.
இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும். நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண்  பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும் அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நம் மூலமாக அரசுக்கு வைத்து, விடை கொடுத்தார்.
தொடர்புக்கு
பாலதண்டாயுதபாணி, செல்போன் : 98946 99975