யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 22 மார்ச், 2014

தோட்டக் கோழிப் பண்ணையம்

கோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல்.
கோழிப் பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தேவையற்ற குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அருகில் புதர்கள் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள்.
தினமும் காலையிலேயே கோழிப் பிளுக்கைகளைப் பெறுக்கி அவற்றைப் பண்ணையை விட்டு அப்பால் ஒரு தனி இடத்தில் கொட்டி மண்ணால் மூடுங்கள்-இதனால் அது நன்கு மட்கி நல்ல உரமாக மாறிவிடும்.
பிளுக்கைகள் குவித்து வைக்கப்பட்டால் அவை காற்றில் மட்கும்போது வெளிவரும் குளோரின், மீதேன் முதலிய நச்சு வாயுக்களின் வாசம் பாம்பு, உடும்பு, பூனை, கீரி, நரி, காட்டுப் பூனை முதலிய பிராணிகளை ஈர்க்கக் கூடியது.
காலையும் மாலையும் பண்ணைக்குள் வெயில் படும்படியாக சற்று உயரமாகக் கூரையை அமையுங்கள்.
இதனால் பண்ணைக்குள் ஈரம் கோர்ப்பது குறையும்.
ஈரமிக்க பண்ணைத் தரை அதில் ஒட்டியுள்ள கோழி எச்சங்களிலிருந்து நச்சு வாயுக்களை வெளிவிடும்.
இதனால் கோழிகளுக்குச்சளித் தொல்லைகள் வரும்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பண்ணை முழுவதும் 5 சதவீத வேம்புக் கரைசலைப் பரவலாக பண்ணைத் தரை நன்றாக நனையும்படித் தெளியுங்கள்.
இதனால் உண்ணிகள், பேன்கள், தத்துப் பூச்சிகள், தெள்ளுப் பூச்சிகள் ஆகிய கோழி ஒட்டுண்ணிகள் அனைத்தும் பண்ணைக்குள் இராது.
மேற்கூறிய ஒட்டுண்ணிகள் அதிகமாக இருந்தால் பலமுறை இந்த வேம்புக் கரைசலைத்தெளிப்பதன் மூலமாகவே நன்றாகக் கட்டுப் படுத்தலாம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் கடுமையான இரசாயன நஞ்சுகளாகிய ப்யூடாக்ஸ், போரான், நுவக்ரான், செல்ஃபாஸ் எதனையும் பண்னைக்குள் தெளிக்காதீர்கள்.
இவை நீண்ட காலத்திற்கு "நின்று செயலாற்றும் திறன்" மிக்கவை! அவ்வாறு இவை "நின்று செயலாற்றி" உங்கள் இளம் குஞ்சுகளை எந்தக் காரணமும் இன்றிக் கொல்லக் கூடியவை! புழு பூச்சிகளுக்காக மண்ணை எப்போதும் கொத்தியும் கால்களால் பறித்தும் கிளறும் குணம் உள்ள தோட்டக் கோழிகளுக்கு இவை பரம எதிரி ஆகும் என்பதை நினைவில் வையுங்கள்.
பண்ணைக்கு அருகில் பண்ணையை நன்கு பார்க்கும் படியாக ஒரு சுறுசுறுப்பான நாயை எப்போதும் கட்டி வையுங்கள்.
அதற்கு மறவாமல் நன்றாகச் சோறு கொடுங்கள்! இல்லாவிட்டால் அது அருகில் வரும் கோழிக் குஞ்சுகளை அவ்வப் போது சாப்பிட்டுப் பசியாறிக் கொள்ளும்!
அப்போது தொட்டுக் கொள்வதற்குக் கொழிப் பிளுக்கைகளை வைத்துக் கொள்ளும்!
நாய்க் காவலின் கீழ் இருக்கும் பண்ணைகளில் பாம்புகளும் மற்ற பிராணிகளும் வருவது இல்லை. அப்படி வந்தாலும் நாய் அவற்றை முன்னதாகவே மோப்பத்த்தின் மூலம் கண்டு கொண்டு குரைக்கும். உங்கள் கோழிகளைத் தின்னாதவாறு பழக்கப் பட்ட நாயாக இருந்தால் அதை உங்கள் பண்ணைக்குள் கட்டிவைக்காமல் விட்டு விடலாம். அப்போது அது பண்ணைக்குள் வரும் மற்ற பிராணிகளி விரட்டி விடும். பாம்புகளையும் கீரிகளையும் நாய் திறமையாகத் தடுத்து நிறுத்தும்.
பருந்து, காக்கை மற்றும் கழுகு ஆகியவை, குஞ்சுகளை அடையிலிருந்து இறக்கி விட்டதும் அடிக்கடி வரும். இதற்கு இளம் குஞ்சுக் கோழிகளை பத்து நாட்கள் வரை கம்பி வலைக் கூண்டுக்குள் அல்லது பந்தல் கம்பி வேய்ந்த இடத்தில் விட வேண்டும்.
அத்துடன் பண்ணை திறந்த வெளியில் அமைந்திருந்தால் ஆங்காங்கே தென்னை மட்டைகளைச் சிறு சிறு கூடாரங்களைப் போலப் பின்னி நிறுத்தி வையுங்கள்.
பிற பறவைகள் விரட்டினால் குஞ்சுகளும் தாய்க் கோழியும் இவற்றிற்குல் ஓடிப் புகுந்து கொள்ளும்.
கோழிகள் உங்களிடம் வந்து தீனியை உங்கள் கையிலிருந்து தின்னப் பழக்கவே பழக்காதீர்கள். இது மற்றவர்கள் நீங்கள் இல்லாத போதுகோழிகளைப் பிடிப்பதற்கு வழி வைக்கும்.

வெள்ளி, 21 மார்ச், 2014

மாட்டுப் பண்ணை

மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை -- புதிதாக இந்தத் தறைக்கு வருபவர்களுக்கான தகவல்கள்.
"நகரங்களில் பால் ஒரு லிட்டர் நாற்பது முதல் அறுபது ரூபாய்கள் என்று விற்கப் படுகிறது!"
"ஒரு நல்ல கறவை மாடு சுமாராக 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரையும் வீரியக் கலப்பினப் பால் மாடுகள் சுமார் 25 லிட்டர் வரையும் கன்று ஈன்றதிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பால் தரும்!"
"உயர் உற்பத்தித் திறனுள்ள வீரியக் கலப்பின மாடுகள் கன்று ஈன்றதிலிருந்து எட்டு மாதங்கள் வரை அதாவது அது அடுத்தகன்று ஈனுவதற்கு 50 நாட்கள் உள்ள காலம் வரை கூட
நமக்குக் குறையாமல் பால் தரும் திறன் உள்ளவை!"
"மிகவும் செறிவு மிக்கதும் ஒரு உயர் உற்பத்தித் திறனுள்ள வீரியக் கலப்பினப் பால் மாட்டின் அன்றாடத் தேவைக்கும் மேல் சக்தி தருவதுமான மிகச்சிறந்த கலப்புத் தீவனங்கள் இன்று எளிதாகக் கடைகளில் கிடைக்கின்றன!"
"இன்றுள்ள அதி நவீனத் தீவன உற்பத்தித் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி நாம் மிக எளிதாக மிகக் குறைந்த நிலப்பரப்பில் வழக்கமான முறையை விடப் பத்து மடங்கு அதிகப் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம்!"
"சினைப் பிடிக்காத மாடுகளைக் கூட இன்று கரு மாற்று முறையில் கன்று ஈன வைக்கலாம்!"
"மூலைக்கு மூலை அரசினர் கால்நடை மருத்துவ மையங்களும் தனியார் கால்நடை மருத்துவ மையங்களும் நிறைந்துள்ளன. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; வெட் பைக்கில் ஓடோடி வந்து கவனிப்பார்! கால்நடைக்கு நோய் வந்தாலும் கவலைப் படத் தேவை இல்லை!"
"கொட்டில் முறைப் பண்ணையில் ஒரு கணவன் மனைவி இருவரே சுமார் 30 மாடுகளைப் பராமரிக்கலாம்!"
"பெண்கள் கூடக் கையாளும் விதமாக எளிய பால் கறவை இயந்திரங்கள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன!"
"ஒரு ஆள் ஒரு மணி நேரத்தில் இரண்டு டன் பசுந்தீனியைப் பொடியாக வெட்டும் அளவில் இயந்திரங்கள் கிடைக்கின்றன!"
"பாலை நாம் பண்ணையிலிருந்து நேரடியாக நுகர்வோருக்கு விற்கலாம்!"
"பண்ணையின் முழுமையான பாலை விட நிலைப் படுத்தப் பட்ட பாலும் பதப்படுத்தப் பட்ட பாலும் பண்ணையாளருக்கு அதிக லாபம் தரக் கூடியவை!"
"பண்ணையிலிருந்து பாலை முழுமையாக அப்படியே விற்பதை விட அதை முழுவதுமாக "மதிப்பூட்டப் பட்ட பால் பொருட்களாக மாற்றி " விற்பதால் பண்ணையாளருக்கு ஏழு மடங்கு லாபம் கிடைக்கும்!"
"நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே உள்ளதாலும் பால் உற்பத்தியாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாலும் பாலின் உற்பத்தி : தேவை விகிதம் மிகவும் அதிகம்! அது 28 : 72 என்ற் அளவில் உள்ளது!"
"ஒரு நடுத்தர அளவிலான 30 மாடுகளைக் கொண்ட மாட்டுப் பண்ணையில் இருந்து எட்டு மாத காலத்தில் 2 வேளை x 20 லிட்டர் x 30 மாடுகள் x 45 ரூபாய் ஒரு லிட்டர் x 240 நாட்கள் கறவை ====1,29,60,000 - 00 ரூபாய்கள் மொத்த வுருமானம் கிடைக்கும்!"
------------------ இவை எல்லாம் என்ன?
"வேளாண்மைக்கு நாம் திரும்பச் செல்லலாம்; தரமான பாலே கிடைக்காமல் நாம் நகரத்தில் எவ்வளவு கஷ்டப் பட்டோம்! நுகர்வோருக்குத் தரமான பால் தவறாமல் கிடைப்பதற்காக நாமும் ஏதாவது செய்யலாம். இந்த வேலையை விட்டு விட்டு, இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து ஒரு பால் பண்ணை ஆரம்பிக்கலாம்! எட்டு மாதங்களில் ஒன்றே கால் கோடியா! ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிப் பண்ணையைத் துவக்கினால் கூட லாபம் தான்!"
--------- என்ற சாதனை வெறியுடன் வரும் புதிய இளைய தலை முறை விவசாயிகளின் கண்களில் படும் (பட வைக்கப் படும்!) வெற்றிக் கதைத் தகவல்கள்தான் இவை அனைத்தும்!
அப்படியா?
இவ்வளவு சுலபமானதுதானா ஒரு மாட்டுப் பண்ணை நடத்துவது?
நம் அப்பா என்னவோ "மகனே! காட்டில் இருக்காதே! நகரத்தில் ஏதாவது வேலை வாங்கித் தருகிறேன்; இப்போதே புறப்படு; பால் பண்ணையாவது; மாட்டுப் பண்ணையாவது; அதெல்லாம் உன்னைப் பிழைக்க வைக்காது; நான் காட்டில் இருந்து பட்ட கஷ்டம் போதும்; ஓடிவிடு!" என்று பயமுறுத்தினாரே!
--------- என்ற குழப்பத்தில் இருக்கும் பணம் வைத்திருக்கும் புதிய இளம் விவசாயிகளின் கண்களில் படும் (பட வைக்கப் படும்!) வெற்றிக் கதைத் தகவல்கள்தான் இவை அனைத்தும்!
இதில் எந்தத் தகவலும் பொய் இல்லவே இல்லை!
பிறகு என்ன?
இந்தத் தகவல்கள் அனைத்தும் மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை பற்றிய ஒரு பக்கத்தை மட்டும் பற்றிய தகவல்கள்!
இவற்றின் மறுபக்கத் தகவல்கள் இந்தப் பண்ணையத்தின் யதார்த்த நிலையைக்காட்டும் தகவல்கள்!
அவை பெரும்பாலும் யாராலும் சொல்லப் படுவதில்லை!
ஏன் இப்படி?
ஏனென்றால், மேற்குறித்த எல்லாத் தகவ்கல்களையும் ஆராய்ந்து அவற்றின் மறுபக்கத்தைப் பார்க்கும் பொறுமை புதியவர்களுக்கு இல்லை!
"கையில் உள்ள பணம் கரைவதற்குள் நாம் நிலைப் பட்டு விட வேண்டும்!"
"வேளாண்மைத் துறையில் ஒரு மறுமலர்ச்சி தெரிகிறது; நாம் முந்திக் கொள்ள வேண்டும்!"
"நம் பரம்பரைத் தொழிலில் நம் தாத்தாவைப் போல நம் முப்பாட்டனைப் போல நாமும் "ஏதாவது" சாதிக்க வேண்டும்!" -
---------என்ற சாதனை வெறி இவர்களுக்குள் பொங்கிப் பிரவகிக்கிறது!
அத்துடன் இவர்கள் இருந்து இருபது ஆண்டுக் காலம் அனுபவப்பட்ட துறையில்
"எதைச் செய்தாலும் அதன் விளைவும் முடிவும் "உடனடியாக"த் தெரிந்து விடும்;
ஒன்றைத் தீர்மானித்து அதை ஒரு "பிட்" கூடத் தவறில்லாமல் செயல் படுத்த முடியும்;
அதில் வரக் கூடிய தவறுகளை முன் கூட்டியே கணித்து ஒரு தவறில்லாத திட்டத்தை "வடிவமைக்க" முடியும்;
அப்படி "வடிவமைத்த" அந்தத் திட்டம் மிகத் துல்லியமாக இயங்கும்!"
-------------- இப்படியேதான் இவர்களுக்குள் ஒரு செயல் முறை பதிவாகி உள்ளது!
வேளாண்மை என்பதும் அதிலும் உயிரின வேளாணமை என்பதும் பஞ்ச பூதங்களின் முழு ஆளுமைக்கு அடிமை என்பதும்;
அதில் நமது திட்ட வடிவமைப்புப் படி பெரும்பாலும் நடக்காது என்பதும்;
அனைத்தும் ஒன்றை ஒன்று பிணைந்து சார்ந்த "ஃபஸ்ஸி லாஜிக்" போன்றது என்பதும்;
உற்பத்தியைத் தவிர மற்ற வேலைகளான இருப்பு வைத்தல், விலை நிர்ணயம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, நேரடி விற்பனை ஆகிய எதுவும் நம் கட்டுப் பாட்டில் இல்லை என்பதும் இவர்களுக்குச் சொல்லப் படுவது இல்லை!
அத்துடன் மேற்குறித்த தகவல்களைப் புதியவர்களுக்குத் தருபவர்கள், பெரும்பாலும் இந்த ஒவ்வொரு தகவலுக்கும் தொடர்புடைய ஒரு வியாபாரத்தைச் செய்து கொண்டிருப்பார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை!
இப்பொழுது மறுபடியும் ஒவ்வொன்றாகப் படித்துப் பாருங்கள்!
அந்தந்த வியாபாரிகளின் உருவம் உங்களுடைய கண்களுக்குத் தெரியும்!
*********************************************************************************************
"ஆக நீங்கள் சொல்வது என்ன?
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை. இவற்றில் எதையும் செய்யாதீர்கள் என்னும் தகவலா?"----- இவை உங்கள் கேள்விகள் அல்லவா?
இல்லவே இல்லை!
செய்யாதீர்கள் என்று சொல்லவில்லை. பண்ணையைத்துவக்கும் "முன்னதாக" - கவனியுங்கள் "முன்னதாக" - தயவு செய்து மூன்று நாங்கு மாதங்களுகு உங்களது பணத்தை ஒரு நல்ல வங்கியில் இருப்பு வைத்து விடுங்கள்.
நீங்கள் இறங்க முடிவு செய்த பண்ணை முறையில் நேரடி அனுபவம் பெறுங்கள்;
எல்லாவற்றிற்கும் முன்னதாக அந்தப் பண்ணையில் வரக் கூடிய நஷ்டங்கள் எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்;
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை மூன்றுமே நீண்ட காலப் பண்ணைகள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்;
பாதியில் விட்டுச்செல்ல் நேர்ந்தால் நீங்கள் செய்த முதலீட்டில் கால்வாசி கூடத் திரும்ப வராது என்பதை உணருங்கள்;
உள்ளூர்ச் சந்தைக்கு அடிக்கடி சென்று வாராவரம் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்யுங்கள்;
உள்ளூர் "சின்ன ஏவாரி"யிடமிருந்து அயல் மாநிலப் "பெரிய முதலாளி" வரை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்;
உள்ளூர் கால்நடை உதவியாளர் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் வரை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்;
உங்களுடைய மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை எதிலும் நேரம் காலம் பார்க்காது வேலை செய்ய வேண்டிய உங்கள் குடும்பத்தை முழுவதுமாக ஈடுபடுத்துங்கள்;
இவை எல்லாவற்றிற்கும் மிக மிக முன்னதாகக் கால்நடை மருத்துவத்தின் அடிப்படை முறைகளையும் சிறு சிறு சிகிச்சை முறைகளையும் இள்ம கன்றுகள் வளர்ப்பு முறைகளையும் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த மூன்று நான்கு மாத காலத்தில் இன்னொரு முக்கியமான வேலையை நீங்கள் செய்து முடித்திருக்க வேண்டும்.
அது ஆண்டு முழுவதும் 50 கால்நடைகளுக்குத் தேவையான பாதுகாப்பான குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி இருக்க வேண்டும்!
ஆண்டு முழுவதும் 50 கால்நடைகளுக்குத் தேவையான பலவகைப் பசுந்தீனிகளை வளர்த்திருக்க வேண்டும்! அதே அளவில் உலர் தீனியும் கையிருப்பில் இருக்க வேண்டும்!
இவற்றை எல்லாம் நீங்கள் முடித்த "பிறகும்" உங்களுக்கு "இந்தப் பண்ணையைத் தொடங்கலாம்; தொடர்ந்து நடத்தலாம்;
இதில் நமக்குத் தேவையான முன்னறிவு வந்துள்ளது; இதில் வரும் எதிர்பாராத விளைவுகளை நம்மால் எதிர் கொள்ள முடியும்!"
என்று உண்மையாகவே (உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும்) தீர்மானமாகத் தெரிந்தது என்று வையுங்கள்;
நீங்கள் நிச்சயமாக மாட்டுப் பண்ணையையோ பால் பண்ணையையோ பால் மற்றும் மாட்டுப் பண்ணையையோ ஐந்தாவது மாதத் துவக்கத்தில் துவக்கி இருப்பீர்கள்!
அதை நல்ல முறையில் உங்களால் நிச்சயமாக நடத்த முடியும்!