யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 3 மார்ச், 2014

வான் கோழி வளர்ப்புப் பற்றி

வான் கோழி வளர்ப்புப் பற்றி கூறும் ராஜாமணி: வான் கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை. ஆர்வமும், உழைப்பும் இருந்தால் போதும். நெளிவு சுளிவுகள் தெரிந்தால், வான் கோழி வளர்ப்பது சுலபம். புதிதாக வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், 200 முதல் 250 சதுர அடி இடத்தில், 100 குஞ்சுகளுடன் வளர்க்கத் துவங்கலாம். ஒரு மாதத்திற்குள்ளான குஞ்சுகளில், அதிக அளவில் இறப்பு இருக்கும் என்பதால், கொஞ்சம் வளர்ந்த குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது நல்லது.

வான் கோழிகளுக்கு, கடைகளில் விற்கும் கோழித் தீவனங்களை வாங்கிப் போட்டால், கட்டுப்படியாகாது. எனவே, பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக் கோழித் தீவனம் என்ற விகிதத்தில் கொடுத்தால், தீவனச் செலவை அதிக அளவில் குறைக்கலாம். மனிதர்களுக்கு கீரை உண்பது எவ்வளவு ஆரோக்கியமானதோ, அதே போல், பச்சை புற்கள், கீரைகள் வான்கோழிகளுக்கு நல்லது.வான்கோழி வளர்ப்பில் சந்தை வாய்ப்பு இல்லை என்ற தவறான எண்ணத்தால், பலரும் இந்தத் தொழிலை செய்யத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் நாளுக்கு நாள் தேவைகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. இறைச்சி தேவைக்கு இணையாக, இதன் முட்டைக்கும் நல்ல கிராக்கி உள்ளது.
நாம் வளர்க்கும், 100 கோழிகளில், 50 தான் பெட்டை என்றாலும், இதன் மூலம், தினமும், 25 முட்டைகள் கிடைக்கும். ஒரு வான்கோழி முட்டையின் விலை, 20 ரூபாய். வான்கோழி, தினமும் முட்டை வைக்காது. 36 மணி நேரத்திற்கு ஒரு முறை தான், முட்டை வைக்கும். எனவே, 50 கோழிகள் மூலம், ஒரு நாளைக்கு, 25 முட்டைகள் கிடைத்தாலும், 500 ரூபாய் வருமானம் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை இந்த கோழி, முட்டையிடும். அதற்கு மேல், அதை கறிக்கு விற்றுவிடலாம்.வான்கோழி வளர்ப்பதைத் துவங்கும் முன், கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டால், இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

மழைக் காலங்களில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பு முறைகள்

மழைக் காலங்களில் மனிதர்களைப் போன்று கால்நடைகளுக்கும் பல்வேறு விதமான நோய்கள் பரவும் சூழல் உள்ளதால் அத்தகைய நோய்களிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.
இது குறித்து திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சே. பிரதாபன் கூறியது:
மழைக்காலங்களில் இளங்கன்றுகள், ஆட்டுக் குட்டிகள், பன்றிக் குட்டிகள், முயல் குட்டிகளை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்புகளை அமைக்க வேண்டும்.
கால்நடைகள் வளர்க்கும் இடத்துக்கு தகுந்தபடி, இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த காற்று கால்நடைகளைத் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும். மழையில் கால்நடைகள் நனைவதைத் தவிர்க்க வேண்டும்.
கால்நடை வளர்ப்புக் கொட்டகைகளை நல்ல காற்றோட்டமாகவும், தரையில் தண்ணீர் தேங்காத வகையில் உலர்ந்த நிலையிலும் வைத்திருக்க வேண்டும்.
ஆடுகளுக்கு போதுமான இட வசதி அளிக்க வேண்டும். சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த பண்ணைகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டும்.
கொட்டகை மற்றும் பண்ணைக் கருவிகள் அனைத்தையும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைடு, 2 சதவீதம் பார்மால்டிஹைடு கரைசல், 4 சதவீதம் சோடியம் கார்பனேட், 5 சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு, 10 சதவீத திரவ அமோனியா, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி மருந்துகளை தகுந்த காலங்களில் கால்நடைகளுக்கு வழங்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக 6 மாத வயதுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகள், மாடுகளுக்கு சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட வேண்டும்.
மூன்று வயதுள்ள வெள்ளாடு, செம்மறியாட்டுக் குட்டிகளுக்கும், பெரிய ஆடுகளுக்கும் தொண்டை அடைப்பான், துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும்.
ஆடுகளுக்கு குடற்புழுக்களை நீக்க மருந்துகளை வழங்க வேண்டும். கால்நடைகளை ஒரே இடத்தில் மேயவிடாமல் சுழற்சி முறையில் மேய்க்க செய்வதன் மூலம் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
நோய் வந்த கால்நடைகளை இதர கால்நடைகளுடன் சேரமால் பிரித்து முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார் அவர்.