யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

தமிழக பட்ஜெட்: வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், நீர்பாசனம்


வேளாண்மை

மொத்த வேளாண் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்து, மாநிலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்கிட வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்களின் உன்னதக் குறிக்கோளை எட்டிட, இந்த அரசு எடுத்துவரும் முயற்சிகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற முக்கியப் பயிர்களின் உற்பத்தித் திறன் உயர்ந்து வருகிறது. பண்ணை அளவிலான உற்பத்தியையும், விவசாயிகளின் வருவாயையும் உயர்த்துவதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்துடன், 2014-2015 ஆம் ஆண்டில், தேசிய வேளாங்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 323 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2014-2015 ஆம் ஆண்டில், திருந்திய நெல் சாகுபடி முறை, மேலும் மூன்று இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். வரும் நிதியாண்டில், நவீன கரும்பு சாகுபடி முறை மேலும் 12,500 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும்.

சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து கரும்பு விவசாயிகளிடையே இந்த சாகுபடி முறையையும், சொட்டுநீர்ப் பாசன முறையையும் பிரபலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசின் முயற்சிகளால், நாற்று நடவு துவரை சாகுபடியின் பரப்பளவு 97,813 ஏக்கராக உயர்ந்துள்ளது. இது வரும் நிதியாண்டில் 1.3 இலட்சம் ஏக்கராக உயர்த்தப்படும். இதுபோன்றே, 2013-2014 ஆம் ஆண்டில் 9,905 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட துல்லியப் பண்ணை சாகுபடி, 2014-2015 ஆம் ஆண்டில் மேலும் 11,000 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். உற்பத்தித் திறனை உயர்த்தி விவசாயிகளுக்குக் கூடுதல் பயன் கிடைக்க இந்த முயற்சிகள் பெரிதும் உதவும்.

நீர்ப் பயன்பாட்டுத் திறனை உயர்த்துவதற்காக, நீர்ச் சேமிப்பிற்கும், நுண்ணீர்ப் பாசனத்திற்கும் இந்த அரசு பெரும் ஊக்கம் அளித்து வருகிறது. நீர்வள நிலவளத் திட்டம், தேசிய நுண்ணீர்ப் பாசன இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றுடன் மாநில அரசு நிதியையும் ஒருங்கிணைத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் பரப்பு நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2014-2015 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து 400 கோடி ரூபாய் செலவில் 1.30 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேளாண் பணிகளுக்கான செலவினத்தைக் குறைக்கவும் `வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம்' முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டில், இதனை மேலுண் ஊக்குவிப்பதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படும்.

விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கத்துடன் 22 மாவட்டங்களில் தேசியத் தோட்டக்கலை இயக்கத்தில், அதிக வருவாய் தரக்கூடிய தோட்டப் பயிர்களைப் பயிர் செய்தல் மற்றும் பயிர் பன்முனையாக்கல் (crop diversification) ஆகியன ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட மற்ற திட்டங்களில் உள்ள நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி இந்த நோக்கம் எழுதப்பட்டு வருகின்றது. வரும் நிதியாண்டில், 115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசியத் தோட்டக்கலை இயக்கம் மேற்கூறிய 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

எஞ்சியுள்ள மாவட்டங்களில், தேசிய வேளாங்மை வளர்ச்சித் திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி, தோட்டப்பயிர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர் அடர்த்தி சாகுபடி, பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறை (protected cultivation), மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி சாகுபடித் தொகுப்புகளை அமைத்தல், இத்தொகுப்புகளை பண்ணைப் பசுமை காய்கறிக் கடைகளோடு, குறிப்பாக, கூட்டுறவு அமைப்புகள் மூலமாக ஒருங்கிணைத்தல் ஆகியன இத்திட்டத்தின் முக்கியக் கூறுகளாக இருக்கும்.

இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தையோ அல்லது பருவ நிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையோ செயல்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள ஒருதலைப்பட்சமான முடிவால், விவசாயிகள் அதிக காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகி, பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். விவசாயிகளின் இந்தக் கூடுதல் சுமையைக் குறைத்திடும் வகையில், கூடுதல் காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு, மாநில அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென இந்த அரசு வலியுறுத்தி வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், பயிர்க் காப்பீட்டிற்காக 242.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் 3.34 இலட்சம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, சுமார் நான்கு இலட்சம் பருத்தி பேல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது மாநிலத்தில் உள்ள 1,948 நூற்பாலைகளுக்கு ஆண்டுதோறும் 110 இலட்சம் பருத்தி பேல்கள் தேவைப்படுகின்றன. நமது மாநிலத்தில் பருத்தி உற்பத்தி போதிய அளவில் இல்லாத காரணத்தால், 50 கோடி ரூபாய் தொடக்க துக்கீட்டுடன் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் என்ற ஒரு பெருந்திட்டம் தொடங்கப்படும். பருத்தி உற்பத்தித் திறனையும் மொத்த உற்பத்தியையும் உயர்த்துவதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும். மத்திய அரசின் பருத்தி தொழில்நுட்ப இயக்கத்தில் உள்ள நிதியும் இந்த மாநில இயக்கத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த இயக்கத்தின் மூலம், 2014-2015 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 3.70 இலட்சம் ஏக்கர் பரப்பை பருத்திப் பயிர் சாகுபடியின் கீழ் கொண்டு வரவும், வரும் ஐந்து ஆண்டுகளில் இதை ஆறு இலட்சம் ஏக்கராக உயர்த்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2013-2014 ஆம் ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பயிர்க் கடன் வழங்குவதற்கான இலக்கு 4,500 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3,948 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 8.9 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2014-2015 ஆம் ஆண்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கான பயிர்க் கடன் இலக்கு முன் எப்போதும் இருந்திராத அளவாக 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். பயிர்க் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டியில்லாக் கடன் வழங்குவதற்கான முழு வட்டிச் சலுகையை இந்த அரசு அளித்து வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இந்த வட்டிச் சலுகைக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு

விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயை அளிக்கும் முக்கிய வேளாண் சார்ந்த துறையாக கால்நடை வளர்ப்பு உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு விலையில்லாக் கறவை பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் புதுமையான திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருவதன் மூலம், புறக்கணிக்கப்பட்ட இத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை இந்த அரசு அளித்துள்ளது. வரும் நிதியாண்டில் 43.65 கோடி ரூபாய் செலவில் மேலும் 12,000 பயனாளிகளுக்கு விலையில்லாக் கறவை பசுக்கள் வழங்கப்படும். அதேபோல், 1.5 இலட்சம் பயனாளிகளுக்கு விலையில்லாச் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்கப்படும். இதற்கென, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 198.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைப் பராமரிப்புத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. வரும் நிதியாண்டில் 100 கால்நடை துணை மையங்கள், குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில், கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்படுண். நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 80.05 கோடி ரூபாய் செலவில் 227 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

கால்நடைத் தீவன உற்பத்திக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் நோக்குடன், கடந்த மூன்று ஆண்டுகளில் 65 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மாநிலத் தீவன உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசின் தீவிர முயற்சியால், 63,542 ஏக்கர் அளவிலான விவசாயிகளின் சொந்த நிலம் தீவனப் பயிர் சாகுபடிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம், வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்கென இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கோழி வளர்ப்புத் தொழிலில் வளர்ச்சி பெறாத பின்தங்கிய பகுதிகளில், இத்தொழிலை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் 25 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், தலா 1,000-லிருந்து 5,000 பறவைகள் கொண்ட 514 கறிக்கோழிப் பண்ணைகளும், தலா 250-லிருந்து 500 பறவைகள் கொண்ட 730 நாட்டுக்கோழிப் பண்ணைகளும் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. 2014-2015 ஆம் ஆண்டிலும் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் 15 மாவட்டங்களில் கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடை இறப்பின்போது விவசாயிகளுக்கு ஏற்படுண் இழப்பை ஈடுசெய்ய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், எஞ்சியுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வருண் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் செலவில் கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இந்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், தமிழ்நாட்டில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் கனவு நனவாகியுள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பால் கொள்முதல் அளவு உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆவின் நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு பால் பண்ணைகளின் பால் பதப்படுத்தும் கட்டமைப்புகள் 258.61 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூரில் 36.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பால் பண்ணை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டில் நபார்டு மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள நிதியைப் பயன்படுத்தி பல்வேறு பால் பண்ணைகளின் திறனை உயர்த்த 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தித் துறைக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 70.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன் வளம்

இந்த அரசு மீனவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண உதவி இந்த அரசால் ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 47.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மீன்பிடிப்பு தடை செய்யப்படும் காலங்களில் வழங்கப்படும் நிவாரணத்திற்காக 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 184.72 கோடி ரூபாய் செலவில், மானிய விலையில் மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணையை இந்த அரசு வழங்கி வருகிறது. இத்திட்டம் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஐந்து கோடி ரூபாய் மானிய ஒதுக்கீட்டுடன் ஆடிர்கடலில் சூரை மீன் பிடிப்பதற்காக மீன்பிடிப் படகுகளை நவீனப்படுத்த மீனவர்களுக்கு உதவும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள மீன்பிடிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், பழையாறு, நாகப்பட்டினம், தூத்துக்குடி, சின்னமுட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடித் துறைமுகங்கள், மொத்தம் 264.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. பூம்புகாரில் 78.50 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடித் துறைமுகமும், 152 கோடி ரூபாய் மொத்த செலவில் பல்வேறு இடங்களில் 23 மீன் இறங்கு தளங்களும் கட்டப்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் 60 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அத்துடன், தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரண் 18 கோடி ரூபாய் செலவில் நிலைப்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்

பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்

அந்தியூர் அசத்தல்
காய்கறிச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தைபோல வருஷம் ஒரு முறை ஈரோடு மாவட்டம், அந்தியூரில் களைகட்டுகிறது குதிரைச் சந்தை. பரந்து விரிந்த மைதானம் எங்கும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் கம்பீரமாய் நிற்கின்றன. குதிரைகளின் வாயைப் பிளந்து, அதன் பல்லைப் பார்த்தும் அதன் குளம்புகளைத் தட்டிப் பார்த்தும் விலை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் குதிரை வியாபாரிகள்.
    அந்தியூர் குருநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் பொங்கல் விழா புகழ்பெற்றது. அந்த விழாவுடன்  சேர்ந்துகொள்கிறது குதிரைச் சந்தையும். கோலாகலமாக நடக்கும் இந்தக் குதிரைச் சந்தைக்கு தமிழகம்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து விதவிதமான குதிரைகளை ஓட்டி வருகிறார்கள் வியாபாரிகள்.
மன்னர்கள் காலத்தில், படை வீரர்களுக்கான குதிரையை வாங்கவும் விற்கவும் இந்தச் சந்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் மாறாமல்  இங்கு இப்போதும் நடந்துவருகிறது  குதிரைச் சந்தை. சந்தையில் பல வகையான குதிரைகள் இருந்தாலும் கீழ்க்கண்டவைதான் ஸ்பெஷல். அவைகளைப் பற்றிய  சிறு குறிப்புகள்...
கட்டியவார் குதிரை:

உயர் ரகக் குதிரை வகை. 'கட்டியவார்’ என்பது வட மாநிலத்தில் புழங்கும் வார்த்தையாகும். இந்த வகைக் குதிரைகள் அழகாகவும் உயரமாகவும் இருக்கும். விலையும் அதிகம். ஒரு குதிரையின் விலை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை நீள்கிறது. இந்தக் குதிரைகள் ஜவான்கள் செல்லவும் ஆடம்பரத் திருமணங்களில் சாரட் வண்டிகளை இழுத்துச்  செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டியவார் குதிரைகளைக் கட்டி மேய்த்துக்கொண்டு இருந்தார் கோவை மாவட்டம், சரவணம்பட்டியைச்சேர்ந்த தம்பி என்பவர்.
''எனக்கு 30 வருஷமா குதிரைங்களோட பரிச்சயமுங்க. ஒரு குதிரை கனைக்கிறச் சத்தத்தை வெச்சே அதோட சாதி, குணம், ஆரோக்கியம் எல்லாத்தையும் சொல்லிப்போடுவேனுங்க. குதிரைங்க எல்லாம் குழந்தைங்க மாதிரி.  நாலைஞ்சு தடவை அதுங்களுக்கு ஒரு விஷயத்தை புரியுற மாதிரி அதோட பாஷையில சொல்லித் தந்துட்டோம்னா சாகிற வரைக்கும் சரியாச் செய்யுமுங்க. என்ன... அதுங்களை தினமும் அக்கறையா பார்த்துக்கோணும். தினமும் குளிப்பாட்டி உடம்பு எல்லாம் தட்டிவிட்டு, நீவிவிடணும். ரெண்டு வேளையும் புல்லுக்கட்டு,  கோதுமைத் தவிடு, கொண்டக்கடலை கொடுக்கோணும். இந்தாப் பாருங்க...  பானு. 68 அங்குலம் உசரத்துக்கு சும்மா நெலுநெலுனு அம்சமா வளர்ந்து நிக்கிறா. இந்தச் சந்தையில இருக்கிற அத்தனை பசங்களுக்கும் (குதிரைகள்தான்) இவ மேலதான் கண்ணு.  ரெண்டரை வயசு பொம்பளைப் புள்ளையைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியதா இருக்கு. இவளோட பல், குளம்பு, காது, கண்ணுனு எல்லா அங்க லட்சணமும் ரொம்ப நல்லா இருக்குது. அதனால, இவளோட விலை 10 லட்சம் ரூபா. ஒரு ரூபா குறைவாக் கொடுத்தாலும் பானு கிடைக்க மாட்டா'' என்கிறார் பெருமிதத்துடன்.
மார்வான் குதிரை:
மார்வான் இனக் குதிரைகள், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்டவை. கம்பீரம்  இதன் சிறப்பு. மன்னர்கள் காலத்தில், போர்க்களத்தில்  பயன்படுத்தப்பட்டவை இந்தக் குதிரைகள். இன்றும் இந்திய ராணுவத்தின் குதிரைப் படை மற்றும் காவல் துறையில் மார்வான்களின் பங்கு மிக மிக அதிகம். இந்த வகைக் குதிரையின் விலை 50ஆயிரம் ரூபாய் தொடங்கி மூன்று லட்சம் வரை போகும். இந்தக் குதிரையும்  தம்பியின் பராமரிப்பிலுள்ளது.  'தமிழகத்துல இந்தக் குதிரைங்க குறைவாத்தான் இருக்குது. இதோட பின்னங்காலு வளைஞ்சி இருக்கும்.  அதனால, இந்தக் குதிரைங்க மேல சவாரி செய்றது ரொம்ப வசதியா இருக்கும். இந்தக் குதிரையோட எடை, தலைச்சுழி, மினுமினுப்பு இதை எல்லாம் வெச்சுத்தான் விலையை நிர்ணயிக்கிறோம்'' என்றார்.
ரேஸ் குதிரை:
ரேஸ் குதிரைகள் 'இங்கிலீஷ் பினாட்’ வகையைச் சேர்ந்தவை. இவை ஆங்கிலேயர்களால் நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை. இதில் அரேபியன் குதிரை, ஓல்டன் பர்க், தரோவ்பின்ட் என்று மூன்று வகைகள் உள்ளன. இந்தக்குதிரைகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரைக்கும் விற்கப்படுகின்றன.  குதிரையின் உரிமையாளர் சிவக்குமார், 'இந்த வகைக் குதிரைகளைத்தான் பந்தயங்களுக்குப் பயன்படுத்துவாங்க. உண்மையில் பல நேரங்களில் இந்தக் குதிரைகள் ஓடுவது இல்லை. வேகமாக நடக்கின்றன. அவ்வளவுதான்.  மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் நடக்கும். அதுதான் நமக்கு ஓடுவதுபோலத் தெரிகிற்து. இவை ஓட ஆரம்பித்தால் மணிக்கு 130 கி.மீ. வேகம்தான்... ''  ஆச்சர்யத் தகவல் சொன்னார்.
மட்டக் குதிரை:
   இந்த வகைக் குதிரைகளுக்கு நாட்டுக் குதிரை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. உயரம் குறைவாக இருக்கும். கழுதையைப் போன்ற தோற்றம் கொண்டவை. பொதி சுமக்கவும்  வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.  இதன் விலை 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையாகும். கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்தக் குதிரைகள்  இந்தச் சந்தைக்கு வருகின்றன.
நாட்டியக் குதிரை:
    
இந்த வகைக் குதிரைகள்  விற்பனைக்கு இல்லை.  கண்காட்சிக்கு மட்டும் வைத்துள்ளார்கள். நான்கு கால்களிலும் சலங்கையைக் கட்டிவிட்டால்  'ஜல்ஜல்'  என்று ஜோராக நடனம் ஆடுகின்றன. இதன் உரிமையாளர் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தேசக்குமார். 'என்கிட்டே ராஜு, சுவான்னு ரெண்டு நாட்டியக் குதிரைங்க வளருது. குதிரை குட்டியாக இருக்கிறப்பவே ஆறு மாச காலத்துக்கு நடனப் பயிற்சிக் கொடுப்போம். குதிரைக்கு முன்னாடி நின்னு எங்க கால்ல சலங்கையைக் கட்டிட்டுக் கையைக் காலைத் தூக்கிட்டு ஆடுவோம். அதைப் பார்த்துப் பார்த்துக் குதிரையும் நாட்டியம் ஆடக் கத்துக்கும். கோயில் விசேஷம், கல்யாணங்களுக்கு இந்தக் குதிரைங்களை ஆடவைப்போம்'' என்றார்.
அந்தியூர் சந்தையில் இப்படிக் குதிரைகள் மட்டும் அல்ல; அரிய வகை மலை மாடுகள், நாட்டு மாடுகள், நீண்ட காதுகளைக்கொண்ட ஜமுனாபாரி ஆடுகள், குறும்பாடுகள் எனப் பலவகையான கால் நடைகளும் அணிவகுக்கின்றன!
- மு.கார்த்திகேயன்