யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்

பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்

அந்தியூர் அசத்தல்
காய்கறிச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தைபோல வருஷம் ஒரு முறை ஈரோடு மாவட்டம், அந்தியூரில் களைகட்டுகிறது குதிரைச் சந்தை. பரந்து விரிந்த மைதானம் எங்கும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் கம்பீரமாய் நிற்கின்றன. குதிரைகளின் வாயைப் பிளந்து, அதன் பல்லைப் பார்த்தும் அதன் குளம்புகளைத் தட்டிப் பார்த்தும் விலை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் குதிரை வியாபாரிகள்.
    அந்தியூர் குருநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் பொங்கல் விழா புகழ்பெற்றது. அந்த விழாவுடன்  சேர்ந்துகொள்கிறது குதிரைச் சந்தையும். கோலாகலமாக நடக்கும் இந்தக் குதிரைச் சந்தைக்கு தமிழகம்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து விதவிதமான குதிரைகளை ஓட்டி வருகிறார்கள் வியாபாரிகள்.
மன்னர்கள் காலத்தில், படை வீரர்களுக்கான குதிரையை வாங்கவும் விற்கவும் இந்தச் சந்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் மாறாமல்  இங்கு இப்போதும் நடந்துவருகிறது  குதிரைச் சந்தை. சந்தையில் பல வகையான குதிரைகள் இருந்தாலும் கீழ்க்கண்டவைதான் ஸ்பெஷல். அவைகளைப் பற்றிய  சிறு குறிப்புகள்...
கட்டியவார் குதிரை:

உயர் ரகக் குதிரை வகை. 'கட்டியவார்’ என்பது வட மாநிலத்தில் புழங்கும் வார்த்தையாகும். இந்த வகைக் குதிரைகள் அழகாகவும் உயரமாகவும் இருக்கும். விலையும் அதிகம். ஒரு குதிரையின் விலை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை நீள்கிறது. இந்தக் குதிரைகள் ஜவான்கள் செல்லவும் ஆடம்பரத் திருமணங்களில் சாரட் வண்டிகளை இழுத்துச்  செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டியவார் குதிரைகளைக் கட்டி மேய்த்துக்கொண்டு இருந்தார் கோவை மாவட்டம், சரவணம்பட்டியைச்சேர்ந்த தம்பி என்பவர்.
''எனக்கு 30 வருஷமா குதிரைங்களோட பரிச்சயமுங்க. ஒரு குதிரை கனைக்கிறச் சத்தத்தை வெச்சே அதோட சாதி, குணம், ஆரோக்கியம் எல்லாத்தையும் சொல்லிப்போடுவேனுங்க. குதிரைங்க எல்லாம் குழந்தைங்க மாதிரி.  நாலைஞ்சு தடவை அதுங்களுக்கு ஒரு விஷயத்தை புரியுற மாதிரி அதோட பாஷையில சொல்லித் தந்துட்டோம்னா சாகிற வரைக்கும் சரியாச் செய்யுமுங்க. என்ன... அதுங்களை தினமும் அக்கறையா பார்த்துக்கோணும். தினமும் குளிப்பாட்டி உடம்பு எல்லாம் தட்டிவிட்டு, நீவிவிடணும். ரெண்டு வேளையும் புல்லுக்கட்டு,  கோதுமைத் தவிடு, கொண்டக்கடலை கொடுக்கோணும். இந்தாப் பாருங்க...  பானு. 68 அங்குலம் உசரத்துக்கு சும்மா நெலுநெலுனு அம்சமா வளர்ந்து நிக்கிறா. இந்தச் சந்தையில இருக்கிற அத்தனை பசங்களுக்கும் (குதிரைகள்தான்) இவ மேலதான் கண்ணு.  ரெண்டரை வயசு பொம்பளைப் புள்ளையைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியதா இருக்கு. இவளோட பல், குளம்பு, காது, கண்ணுனு எல்லா அங்க லட்சணமும் ரொம்ப நல்லா இருக்குது. அதனால, இவளோட விலை 10 லட்சம் ரூபா. ஒரு ரூபா குறைவாக் கொடுத்தாலும் பானு கிடைக்க மாட்டா'' என்கிறார் பெருமிதத்துடன்.
மார்வான் குதிரை:
மார்வான் இனக் குதிரைகள், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்டவை. கம்பீரம்  இதன் சிறப்பு. மன்னர்கள் காலத்தில், போர்க்களத்தில்  பயன்படுத்தப்பட்டவை இந்தக் குதிரைகள். இன்றும் இந்திய ராணுவத்தின் குதிரைப் படை மற்றும் காவல் துறையில் மார்வான்களின் பங்கு மிக மிக அதிகம். இந்த வகைக் குதிரையின் விலை 50ஆயிரம் ரூபாய் தொடங்கி மூன்று லட்சம் வரை போகும். இந்தக் குதிரையும்  தம்பியின் பராமரிப்பிலுள்ளது.  'தமிழகத்துல இந்தக் குதிரைங்க குறைவாத்தான் இருக்குது. இதோட பின்னங்காலு வளைஞ்சி இருக்கும்.  அதனால, இந்தக் குதிரைங்க மேல சவாரி செய்றது ரொம்ப வசதியா இருக்கும். இந்தக் குதிரையோட எடை, தலைச்சுழி, மினுமினுப்பு இதை எல்லாம் வெச்சுத்தான் விலையை நிர்ணயிக்கிறோம்'' என்றார்.
ரேஸ் குதிரை:
ரேஸ் குதிரைகள் 'இங்கிலீஷ் பினாட்’ வகையைச் சேர்ந்தவை. இவை ஆங்கிலேயர்களால் நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை. இதில் அரேபியன் குதிரை, ஓல்டன் பர்க், தரோவ்பின்ட் என்று மூன்று வகைகள் உள்ளன. இந்தக்குதிரைகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரைக்கும் விற்கப்படுகின்றன.  குதிரையின் உரிமையாளர் சிவக்குமார், 'இந்த வகைக் குதிரைகளைத்தான் பந்தயங்களுக்குப் பயன்படுத்துவாங்க. உண்மையில் பல நேரங்களில் இந்தக் குதிரைகள் ஓடுவது இல்லை. வேகமாக நடக்கின்றன. அவ்வளவுதான்.  மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் நடக்கும். அதுதான் நமக்கு ஓடுவதுபோலத் தெரிகிற்து. இவை ஓட ஆரம்பித்தால் மணிக்கு 130 கி.மீ. வேகம்தான்... ''  ஆச்சர்யத் தகவல் சொன்னார்.
மட்டக் குதிரை:
   இந்த வகைக் குதிரைகளுக்கு நாட்டுக் குதிரை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. உயரம் குறைவாக இருக்கும். கழுதையைப் போன்ற தோற்றம் கொண்டவை. பொதி சுமக்கவும்  வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.  இதன் விலை 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையாகும். கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்தக் குதிரைகள்  இந்தச் சந்தைக்கு வருகின்றன.
நாட்டியக் குதிரை:
    
இந்த வகைக் குதிரைகள்  விற்பனைக்கு இல்லை.  கண்காட்சிக்கு மட்டும் வைத்துள்ளார்கள். நான்கு கால்களிலும் சலங்கையைக் கட்டிவிட்டால்  'ஜல்ஜல்'  என்று ஜோராக நடனம் ஆடுகின்றன. இதன் உரிமையாளர் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தேசக்குமார். 'என்கிட்டே ராஜு, சுவான்னு ரெண்டு நாட்டியக் குதிரைங்க வளருது. குதிரை குட்டியாக இருக்கிறப்பவே ஆறு மாச காலத்துக்கு நடனப் பயிற்சிக் கொடுப்போம். குதிரைக்கு முன்னாடி நின்னு எங்க கால்ல சலங்கையைக் கட்டிட்டுக் கையைக் காலைத் தூக்கிட்டு ஆடுவோம். அதைப் பார்த்துப் பார்த்துக் குதிரையும் நாட்டியம் ஆடக் கத்துக்கும். கோயில் விசேஷம், கல்யாணங்களுக்கு இந்தக் குதிரைங்களை ஆடவைப்போம்'' என்றார்.
அந்தியூர் சந்தையில் இப்படிக் குதிரைகள் மட்டும் அல்ல; அரிய வகை மலை மாடுகள், நாட்டு மாடுகள், நீண்ட காதுகளைக்கொண்ட ஜமுனாபாரி ஆடுகள், குறும்பாடுகள் எனப் பலவகையான கால் நடைகளும் அணிவகுக்கின்றன!
- மு.கார்த்திகேயன்

இன்றைய பதிவில் தமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களின் தொலைபேசி எண்களை பதிவு செய்துள்ளேன்

இன்றைய பதிவில் தமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களின் தொலைபேசி எண்களை பதிவு செய்துள்ளேன்..இவற்றை தாங்கள் தொடர்பு கொண்டு கால்நடைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்று பயன் அடையுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்..வாழ்த்துக்கள்...
1)கோவை-0422-2669965
2)தருமபுரி-04342-292525
3)திண்டுக்கல்-0451-2423147
4)ஈரோடு-0424-2291482
5)வேலூர்-0416-2225935
6)கடலூர்-04142-220049
7)திருச்சி-0431-2770715
8)கரூர்-04324-294335
9)மேல்மருவத்தூர்-044-27529548
10)மதுரை-0452-2483903
11)புதுக்கோட்டை-04322-271443
12)சேலம்-0427-2440408
13)திருப்பூர்-0421-2248524
14)தஞ்சாவூர்-04362-255462
15)ராஜபாளையம்-04563-220244
16)திருநெல்வேலி-0462-2337309
17)நாகர்கோவில்-04652-286843
நன்றி.........