பதிவு செய்த நாள்
21 ஜன2014
00:25
கடும் வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு தீவனங்களை வியாபாரிகள் விற்கின்றனர். அதிக விலைக்கு தீவனங்களை வாங்க முடியாத பலர் வேறு தொழிலுக்கு மாறுகின்றனர். மாடு எண்ணிக்கை குறைவதால், பால் கொள்முதல் குறைகிறது; விலையும் அதிகரிக்கிறது. அத்தியாவசிய பொருளில் முக்கியமானது பால் என்பதால், அதன் விலையை கட்டுப்படுத்த, மாடுகளுக்கான தீவனத்தை அரசே குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் தீவன கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை இணை இயக்குனர் ஒருவர் கூறியதாவது: மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு தீவன கிடங்குகள் அமைக்கப்படும். மாடு வளர்ப்பாளர், விவசாயி, தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து, எத்தனை மாடு என்பதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தபின், ஒவ்வொரு மாட்டுக்கும் தனி கார்டு வழங்கப்படும். மாடுகளுக்கு தேவையான தீவனத்தை, கார்டை காண்பித்து, தீவன கிடங்கில் பெறலாம். வெளிமார்க்கெட்டில் வைக்கோல் ஒரு கிலோ, எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மொத்தமாக கொள்முதல் செய்து கிலோ இரண்டு ரூபாய்க்கு அரசு விற்க உள்ளது. மாடு ஒன்றுக்கு மூன்று கிலோ வைக்கோல் வழங்கப்படும். எத்தனை மாடு வைத்திருந்தாலும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 21 கிலோ மட்டுமே கொடுக்கப்படும்,' என்றார்.
128 தீவன மையங்கள்:
32 மாவட்டங்களில் தலா நான்கு தீவன கிடங்குகள் விதம் மொத்தம் 128 தீவன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், கொங்கணாபுரம், மேச்சேரி, நங்கனவள்ளி; கோவையில் கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், சுல்தான்பேட்டை; திருப்பூரில் செங்கப்பள்ளி, காங்கயம், மூலனூர், வாளவாடி பகுதியில் தீவன கிடங்குகள் அமைகின்றன.
கலெக்டரே பொறுப்பு:
அந்தந்த மாவட்ட கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் தீவன கிடங்கு கொண்டு வரப்படுகிறது. கலெக்டர், கால்நடைத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகிய மூவர், வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை அதிகாரி ஒருவர் உள்ளிட்டோர் இணைந்த குழு ஏற்படுத்தப்படும். வைக்கோல் கொள்முதல் செய்வது, உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பணி, அக்குழுவின் மேற்பார்வையில் நடக்கும். இம்மாத இறுதியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இக்குழு தனது செயல்பாட்டை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.