யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 13 ஜனவரி, 2014

Vaccination schedule


வேலி மசால்

வேலி மசால்

ஒரு ஏக்கரிலிருந்து 50 டன் தீவனம்....500 கிலோ விதை..

வேதனையைக் குறைக்கும் வேலிமசால் !

முன்பு போல் மேய்ச்சல் நிலங்கள் இல்லை; காசு கொடுத்து தீனி வாங்கிப் போட்டு, ஆடுமாடு வளர்க்கும் அளவுக்கு அதில் வருமானமும் இல்லை; காய்ந்து போன வைக்கோலின் விலை, கட்டுப்படியாகவே இல்லை.

ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இப்படிப்பட்ட 'இல்லை'கள்தான்... தீராதத் தொல்லை.

''அதுக்காக இதைச் சொல்லி புலம்பிக்கிட்டே இருக்குறதால தீர்வு வந்துடுமா... என்ன?'' என்று கேட்கும் நாமக்கல் மாவட்டம், ஊஞ்சப்பாளையம் முத்துசாமி,

''நம்ம வயல்ல கொஞ்ச இடத்துல பசுந்தீவனத்தைப் பயிர் செஞ்சிட்டா... பிரச்னை தீர்ந்துச்சி. அதுலயும் ஒரு தடவை விதைச்சி ஆண்டு கணக்கா அறுவடை செய்ற வேலிமசாலைப் பயிர் செஞ்சிட்டா ஆயுசுக்கும் கவலைப்பட வேண்டியதிருக்காதே...'' என்று ஆக்கப்பூர்வமாக பேசுகிறார், அதை சாதித்துக் கொண்டிருக்கும் தெம்பில்!

பசுந்தீவனத்துக்குப் பஞ்சமே இல்ல!

''நாலு வருஷத்துக்கு முன்ன, தீவனச் செலவை சமாளிக்க முடியாம, மாடு வளர்க்கறதை விட்டுடலாமானு யோசிச்சவன்தான் நான். அப்பத்தான் நாமக்கல் கே.வி.கே. (வேளாண்மை அறிவியல் நிலையம்) அதிகாரிங்க, வேலிமசால் பத்தி எடுத்து சொன்னதோட, விதையையும் கொடுத்தாங்க. அதை வாங்கிட்டு வந்து விதைச்ச மொத அறுவடையிலயே, நல்ல மகசூல் கிடைச்சிது. இப்ப நான் ஏகப்பட்ட விவசாயிகளுக்கு இந்த விதையைக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

என்னோட பண்ணையில மூணு கறவை மாடும், நூறு ஆடும் இருக்குது. அதுக்கு ஒரு ஏக்கர்ல வேலிமசாலும், இன்னும் ஒரு ஏக்கர்ல கோ4 மாதிரியான மத்த பசுந்தீவனங்களையும் சாகுபடி செஞ்சிருக்கேன். மாடுகளுக்கு ஒரே தீவனமா கொடுக்காம, எல்லா தீவனங்களையும் கலந்து கொடுக்கறதால என் வயல்ல எப்பவுமே பசுந்தீவனத்துக்குப் பஞ்சம் வர்றதில்ல’’ என்றவர், வேலிமசால் சாகுபடி செய்யும் முறையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

ஏக்கருக்கு 8 கிலோ விதை!

வேலிமசால், அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய பல்லாண்டு பயிர். ஏக்கருக்கு

10 டன் தொழுவுரம் போட்டு, நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். ஒன்றரை அடிக்கு நீள, நீளமான பார் பிடித்துக் கொள்ள வேண்டும். சாகுபடி நிலத்தின் அமைப்புக்கு பாத்தியின் நீள, அகலத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். விதைகளை, நமது கை தாங்கக் கூடிய அளவில் மிதமான சுடுதண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, பின்புதான் விதைக்க வேண்டும். இதன் மூலம் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.

விதையை ஒன்றரை அடி இடைவெளியில் ஊன்றலாம். சிலர் வயலில் அப்படியே விதைத்தும் விடுகிறார்கள். இப்படி இரண்டு முறையிலும் இதைப் பயிர் செய்யலாம். நேப்பியர் புல்லுக்கு இடையில் ஊடுபயிராகவும் விதைக்கலாம். இப்படி விதைப்பவர்கள், மூன்று வரிசை நேப்பியர் புல், நாலாவது வரிசை வேலிமசால் என்ற ரீதியில் விதைக்க வேண்டும்.

ஏக்கருக்கு 50 டன் மகசூல்!

வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர, வேறெந்த பராமரிப்பும் இல்லை. விதைத்ததிலிருந்து 80-ம் நாள் முதல் அறுவடையைத் தொடங்கலாம். பயிரின் அடிப்பகுதியிலிருந்து அரையடி விட்டு அறுவடை செய்ய வேண்டும். பிறகு, 45 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடையை செய்யலாம். இதேபோல செய்தால், ஆண்டுக்கு 7 அல்லது 8 அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 40 முதல் 50 டன் மகசூல் கிடைக்கும். ஏக்கர் முழுவதும் ஒரே நாளில் அறுவடை செய்யாமல், ஒரு ஓரத்திலிருந்து தினசரி தேவைக்காக கொஞ்சம்கொஞ்சமாக அறுவடை செய்யும்போது... சுழற்சி முறையில் வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 45 நாட்களுக்கு ஒரு அறுவடை செய்வதைக் கணக்கிட்டு, அறுவடை செய்யும் பகுதிகளில் மட்டும் ஒவ்வொரு அறுவடை முடிந்தவுடன் ஆட்டுஎரு, மட்கிய தொழுவுரம் இதையெல்லாம் தேவைக்குத் தகுந்தபடி இடவேண்டும்.

500 கிலோ விதை!

வேலிமசாலின் இலைகள் மிகவும் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருப்பதால், கால்நடைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகிறது. கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோவும், ஆடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் தீவனம் அளிக்கலாம். தீவனத் தேவையைவிட கூடுதலாக மகசூல் கிடைக்கும் போது, தேவைக்கு மட்டும் அறுவடை செய்யலாம். மீதியை விதைகளுக்காக விட்டுவிடலாம். விதைத்ததிலிருந்து 100 நாட்களுக்குப் பிறகுதான் விதைகள் கிடைக்கும். விதைக்காக மட்டும் வளர்த்தால், ஒரு ஏக்கரிலிருந்து ஓராண்டில் தோராயமாக 500 கிலோ விதைகள் கிடைக்கும். கிலோ 300 முதல் 400 ரூபாய் வரை விலை போகும்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

தொழில்நுட்பப் பாடத்தைச் சொல்லி முடித்த முத்துசாமி, ''பசுந்தீவனங்களுக்கு ரசாயன உரமெல்லாம் பெருசா போடத் தேவையிருக்காது. அது வேண்டாம்னுதான் அதிகாரிகளும் சொல்றாங்க. இருந்தாலும், மனசு கேட்காம அப்பப்ப குறைஞ்ச அளவு ரசாயன உரத்தை, தொழுவுரத்தோட சேர்த்து பயன்படுத்தறேன்.

ஒரு ஏக்கர்ல வேலி மசால் பயிரிட, ஆரம்பக்கட்ட செலவு அதிகபட்சமா 15 ஆயிரமும், ஒவ்வொரு வருஷ பராமரிப்புக்கும் ரூ.5 ஆயிரமும் செலவாகும். ஆனா, தீவனச் செலவு பெரும்பாலும் குறையறதோட, விதை விற்பனை மூலமா ஒரு வருமானமும் கிடைச்சுடும். இந்த நாலு வருஷத்துல கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரை விதைகளை விற்பனை செய்திருக்கேன். அதாவது, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

"அளவோடு கொடுக்க வேண்டும்!"

கால்நடைகளுக்கு வேலிமசால் கொடுப்பதைப் பற்றி தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர், டாக்டர் பீர்முகமதுவிடம் கேட்டபோது, "கடைகளில் விற்கும் அடர் தீவனங்களை வாங்கி மாடுகளுக்குக் கொடுக்கும்போது, பால் உற்பத்திக்காக நாம் செய்யும் செலவு கூடும். ஆனால், புரதச் சத்து நிறைந்த பசுந்தீவனங்களை மிகக்குறைந்த செலவில் நாமே விளைவித்து கொடுக்கும்போது, பால் உற்பத்திக்காக நாம் செலவிடும் தொகை குறையும். அதேசமயம், பால் உற்பத்தி அதிகரித்து, நம்முடைய லாபம் அதிகரிக்கும்.

வேலிமசால், லெகூமீனியஸ் (leguminous crops) பயிர் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில், எளிதாக செரிமானம் ஆகக்கூடிய சபோனின் (saponin என்ற புரதச்சத்து அதிகம் உள்ளது. வழக்கமாக கறவை மாடுகளுக்கு 20 கிலோ முதல் 30 கிலோ வரை தினமும் பசுந்தீவனம் கொடுக்கலாம். அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலிமசால் கொடுக்க வேண்டும். இதைத் தனியாக கால்நடைகளுக்குக் கொடுக்காமல், உலர்தீவனம் அல்லது பசுந்தீவனம் என ஏதாவது ஒன்றுடன் சேர்த்து நான்கில் ஒரு பங்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுத்தால், குளோரோபில் என்ற பச்சையம் சுரந்து, கால்நடைகளின் வயிற்றில் நுரையுடன் கூடிய ஒருவகை வாயுவை உண்டாக்கும். இதனால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படும். கறவை மாட்டுக்கு தினமும் 3 முதல் 5 கிலோவும், ஆடுகளுக்கு ஒன்றரை கிலோவும் கொடுப்பது நல்லது" என்று சொன்னார்.

----நன்றி விகடன்