மாற்றுப் பயிராக மக்காச்சோளம்!
விற்பனைக்குக் கைகொடுக்கும் கால்நடைப் பல்கலைக்கழகம்!
த. ஜெயகுமார் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், எஸ். நாகராஜ், தி.குமரகுருபரன்
இந்தியாவில் இறைச்சிக்கான தேவை பெருகிக்கொண்டே வருவதால், ஆடு, கோழி என கால்நடைப் பண்ணைகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. பெரும்பாலான பண்ணைகளில் கொட்டில் முறையில் கால்நடை வளர்ப்பு மேற்கொள்ளப்படுவதால், அடர்தீவனத்துக்கான தேவையும் பெருகிக்கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து கொண்டே வருவதும் அடர்தீவனத் தேவைக்கு ஒரு காரணம். இத்தகையச் சூழலில், அடர்தீவனத்துக்கான மூலப்பொருட்கள் சாகுபடி மற்றும் விற்பனை ஆகியவை... நல்ல வருமானம் தரும் தொழில்களாக மாறியுள்ளன. குறிப்பாக, மக்காச்சோளத்துக்கு நல்ல விற்பனை வாய்ப்புள்ளது. இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் மக்காச்சோள சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
பல மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளத்தை சாகுபடி செய்கிறார்கள். தற்போது, வேளாண் அறிவியல் மையங்களிலும் மக்காச்சோள சாகுபடி பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் மூலமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட பட்டுமுடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோள சாகுபடிக்கு மாறி, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சவீதா மருத்துவக் கல்லூரியைத் தாண்டியதும், வலதுபுறம் திரும்பினால்...
23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, பேரம்பாக்கம். அங்கிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால், பட்டுமுடையார்குப்பம். இந்த கிராமத்தில், நெல், காய்கறிகள், மலர்கள் என விவசாயம் செழிப்பாக நடக்கிறது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரைச் சந்தித்தோம். ''ரெண்டு வருஷத்துக்கு முன்ன காட்டுப்பாக்கம் கே.வி.கே. (வேளாண் அறிவியல் மையம்) நடத்தின மக்காச்சோள சாகுபடி பயிற்சியில கலந்துக்கிட்டேன். 'குறைஞ்ச தண்ணி, அளவான வேலையாள் இருந்தாலே மக்காச்சோளத்துக்கு போதுமானது’னு தெரிஞ்சுகிட்டேன். நெல் சாகுபடி அளவுக்கு வருமானம் கிடைக்கும்னு தெரிஞ்சதும் மக்காச்சோள சாகுபடி பண்ற ஆசை வந்துடுச்சு. கே.வி.கே. விஞ்ஞானிங்க, எங்க கிராமத்துல மக்காச்சோளத்துக்காக முகாம் நடத்தினாங்க. 50 பேர் கலந்துக்கிட்டோம். ஆனாலும், 4 பேர்தான் பயிர் பண்றதுக்கு ஒப்புக்கிட்டாங்க.
அதுல ஒருத்தனா மூணு ஏக்கர்ல மக்காச்சோளம் போட்டேன். 100 நாள்ல, 5 டன் மகசூல் எடுத்தேன். கிலோ
11 ரூபாய்னு கே.வி.கே. மூலமாவே எடுத்துக்கிட்டாங்க. எல்லா செலவும் போக, 30 ஆயிரம் ரூபா லாபமா நின்னுச்சு. அதுக்கப்பறம் கே.வி.கே. மூலமா 'மக்காச்சோளம் உற்பத்தியாளர் சங்கம்’ ஆரம்பிச்சாங்க. அதுக்கு நான்தான் தலைவர். சங்கம் மூலமா, காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க இருக்குற மக்காச்சோள விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், சந்தைபடுத்தறது பத்தி ஆலோசனைகளைக் கொடுத்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் மூணு முறை மக்காச்சோளம் சாகுபடி பண்ணியிருக்கேன். நெல்லைவிட, இதுல நல்ல லாபம் கிடைக்கிறது உண்மை'' என்று மக்காச்சோள பெருமை பேசினார். அங்கே கூடியிருந்த மற்ற விவசாயிகளும் அதை ஆமோதித்தனர்.
காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் குமரவேலுவிடம் பேசியபோது, ''மக்காச்சோளம், நடவு துவரை, வணிக ரீதியான மலர்கள், காளான், தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்தப் பண்ணையம்... என மாற்றுப் பயிர்கள், லாபம் ஈட்டக்கூடிய தொழில் வாய்ப்புகள் தரும் பயிற்சிகளை எங்கள் மையத்தில் நடத்தி வருகிறோம். மக்காச்சோளத்துக்கு அதிக தேவையும், விற்பனை வாய்ப்பும் இருப்பதால்... மாற்றுப் பயிர்கள் வரிசையில் இதை முன்னிலைப்படுத்தி வருகிறோம். தவிர, குறைந்த தண்ணீரில், குறைந்த வேலையாட்களைக் கொண்டே சாகுபடி செய்ய முடியும்.
தமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய தீவனத் தொழில்நுட்ப மையத்தின் தீவன அரவை ஆலை, காட்டுப்பாக்கம் வேளாண் நிலையத்தில்
அமைந்துள்ளது. இதற்கே, ஒரு நாளைக்கு 4 டன் மக்காச்சோளம் தேவை. பெரும்பாலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்துதான் கொள்முதல் செய்வோம். எங்கள் பகுதி விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில்தான், ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யச் சொல்லி வருகிறோம். புதிதாக பயிர் செய்பவர்களுக்கு பயிற்சியும், தொழில் நுட்ப ஆலோசனையும் வழங்குகிறோம்'' என்ற குமரவேலு,
''எங்களிடம் சேமிப்புக் கிடங்கு இருப்பதால், விவசாயிகள் கொடுக்கும் மக்காச்சோளத்தை உடனடியாகப் பெற்றுக் கொள்வோம். மற்ற மாவட்ட விவசாயிகளும் விற்பனைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளலாம். சந்தை விலையைவிட 1 ரூபாய், 2 ரூபாய் கூடுதலாகவே கொடுத்து எடுத்துக் கொள்வோம். மாதத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யப் படும்.
தற்போதைக்கு 1 கிலோ மக்காச் சோளம், 15.50 காசு விலையில் வாங்குகிறோம். மணிகளில் 10 சதவிகிதம் ஈரம் இருக்கு மாறும், பூஞ்சணத் தாக்கு தல் இல்லாமலும், காய வைத்து கொடுக்க வேண்டும் என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று சந்தைத் தகவல்களையும் தந்தார்.
தொடர்புக்கு,
வேளாண் அறிவியல் நிலையம் காட்டுப்பாக்கம்.
தொலைபேசி: 044-27452371,
செல்போன்: 98844-02613
மனோகரன், செல்போன்: 94446-60398
கோதண்டராமன், செல்போன் : 98405-40260
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படித்தான் சாகுபடி செய்யணும்...
மக்காச்சோளம் சாகுபடி பற்றி மனோகரன் சொல்லும் விஷயங்கள்
'நிலத்தை நன்றாக உழுது, 4 டன் தொழுவுரத்தைக் கொட்டி, பார் ஓட்டி, பாசனம் செய்ய வசதியாக வாய்க்கால்களை அமைக்க வேண்டும். மக்காச்சோள விதையை வரிசைக்கு வரிசை இரண்டடி இடைவெளி, செடிக்குச் செடிக்கு ஓரடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும் (ஏக்கருக்கு 7 கிலோ 200 கிராம் அளவுக்கு விதை தேவைப்படும்). விதைத்த 3ம் நாள் உயிர்தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு, வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். 15 முதல் 20 நாட்களுக்குள் களை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட உரங்களைக் கொடுக்க வேண்டும். 25 நாட்களுக்கு மேல் செடிகள் வேகமாக வளரும். களைகள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். விதைத்த 45ம் நாளுக்கு மேல் நுண்ணூட்டச் சத்துக்களை இட வேண்டும். 55ம் நாளுக்கு மேல், ஆண் பூவும் அடுத்து பெண் பூவும் பூக்கும். இது மணிகளில் பால் ஏறும் சமயம் என்பதால், தவறாமல் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். தண்ணீர் செழிம்பாகக் கொடுத்தால்... மணிகள் பெருக்கும். 60ம் நாளில் இருந்து 85ம் நாளுக்குள் கதிர்கள் முதிர்ச்சியடையும். முதிர்ந்த கதிர்களை ஒரு வாரம் வரை செடியிலேயே காயவிட்டு அறுவடை செய்து, இயந்திரத்தின் மூலம் அடித்து, மணிகளைப் பிரித்து 3 நாட்கள் காய வைத்து விற்பனை செய்யலாம்.'
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////