நீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர்.
'நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''
- தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.
உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள். ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.
தன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.
படுத்தி எடுத்த ஸ்பிரேயர்கள்!
''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.
'மாற்று வழியா என்ன செய்யலாம்?'னு யோசிச்சப்பதான், 'பேட்டரி ஸ்பிரேயர், மானிய விலையில் விவசாய ஆபீஸ்ல கிடைக்கும்'னு கேள்விப்பட்டு முறைப்படி பதிவு செய்து வாங்கினேன். சார்ஜர் பேட்டரியில இயங்குற அந்த ஸ்பிரேயர்,
10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தினா, ஒரு மணி நேரம் (100 லிட்டர்) தெளிக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தணும். கரன்ட் கட் பயங்கரமா இருக்கற நேரம்கிறதால... சார்ஜ் ஏத்த முடியாம போய், பாதி வெள்ளாமை காலி ஆயிடுச்சு.
நிம்மதி தந்த நிரந்தரத் தீர்வு!
'நிரந்தரத் தீர்வு வேணும்'னு தேடினப்போதான்... 'சோலார் பவரை பயன்படுத்தி வீட்டு லைட், விவசாய பம்ப்செட் எல்லாத்துக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும்ங்கிறப்ப... ஏன் சோலார் பவர் ஸ்பிரேயர் உருவாக்கக் கூடாது'னு தோணுச்சு. உடனே, புதுசா ஒரு பேட்டரி ஸ்பிரேயர் (7 ஏ.ஹெச். பேட்டரி உள்ளது), 10 வாட்ஸ் சோலார் பேனல் (பள்ளிக்கூட ஸ்லேட் அளவில் இருக்கும்) இதையெல்லாம் வாங்கினேன். அந்த பேனலை, ஸ்பிரேயர் டேங்க்ல பொருத்தினேன். சோலார் ஸ்பிரேயர் தயாராயிடுச்சு. இதுக்கு மொத்தமே. வெறும் 4,600 ரூபாய்தான் செலவு. ஆனா வரவு... பல ஆயிரங்கள்'' என்று குஷியோடு சொன்ன கார்த்திகேயன்,
''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 மணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.
டெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், நிறைவாக,
''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
நிஜம்தானே!
தொடர்புக்கு,
கார்த்திகேயன்,
செல்போன்: 93677-89456.
கார்த்திகேயன்,
செல்போன்: 93677-89456.