மாடுகளை சினைப்படுத்தும் வழிமுறைகள்
- Posted by Admin on December , 2013 at 6:36am
- Send Message
அனைத்து உயிர்களுக்கும் இனப்பெருக்கம் என்பது அவசியத்திலும் அவசியம். இந்த நடவடிக்கைக்கு, பெண் இனம் குறிப்பிட்ட நாள் இடைவெளியில், சினைப் பருவத்திற்கு தயாராகும். இதைச் சினைப்பருவச் சுழற்சி என்பர். மாடு, எருமைகளில் இச்சுழற்சி 18 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை நடக்கிறது. இச்சுழற்சி 10 நாட்களுக்குள் அல்லது 30 நாட்களுக்கு மேல் இருந்தால் சூலகத்தில் பிரச்னை உள்ளது எனலாம்.
கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் பலர், அமாவாசை, பவுர்ணமியில்தான் மாடுகள் சினைக்கு வருமென தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர். கடைசியாக மாடுகள் சினைக்கு வந்த தேதியில் இருந்து, 18 முதல் 21 நாட்களுக்குள் சினைப்பருவத்திற்கு வரும். அந்நாட்களில் தினமும், காலை, மாலையில் மாடுகளில் சினைப்பருவ அறிகுறி தெரிகிறதா என கவனிக்க வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள்: மாடு அமைதியின்றி காணப்படும். அடிக்கடி கத்தும். தீவனத்தில் நாட்டம் இராது. கறவை மாடுகளில் பால் அளவு குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். இனப்பெருக்க உறுப்பில் முட்டை வெள்ளைக் கரு போன்ற திரவம் வடியும். சினைப்பருவ மாடுகள்மீது, மற்ற மாடுகள் தாவும்போது, அவை அமைதியாக இருக்கும். சினைப் பருவ மாட்டின் "யோனி'யில் சுருக்கங்கள் இன்றி தடித்து இருக்கும். அதேசமயம் சில கலப்பின மாடுகளுக்கு, கத்துதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மற்ற மாடுகள் மீது தாவுதல் அறிகுறிகள் தென்படாது.
எருமை மாடுகளில் சினைப்பருவத்தை கண்டறிவது கடினம். அதன் இனப்பெருக்க உறுப்பில் திரவம் ஒழுகுவது தென்படாது. ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். நீண்ட உறுமல் சத்தத்துடன் கத்தும். அடிக்கடி பின்புறம் திரும்பி பார்க்கும். 90 சதவீத எருமை மாடுகள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் மட்டுமே சினைப்பருவத்திற்கு வருகின்றன. சிலமாடுகள் சினைப்பருவத்தில் இருந்தாலும், அறிகுறிகளை முழுமையாக வெளிப்படுத்தாது. இதனை ஊமைச் சினைப்பருவம் என்பர். இம்மாதிரி மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் முறை கையாளப்படுகிறது.
எப்போது சினைப்படுத்துவது: பருவத்தே பயிர் செய்வது போன்றதே, சினைப்படுத்துவதும். மாடுகள் 12 முதல் 24 மணி நேரமே சினைப்பருவத்தில் இருக்கும். சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12 மணி நேரத்திற்குள் கருவூட்டல் செய்ய வேண்டும். மாட்டில் இருந்து சினைமுட்டை வெளிப்படும் நேரத்தில், போதுமான எண்ணிக்கையில் உயிருள்ள ஆண் உயிரணுக்கள் இருக்க வேண்டும்.
கருமுட்டை வெளிப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ, மாடுகளுக்கு கருவூட்டல் செய்வதால் சினையாகும் வாய்ப்பு குறைவு. பெரும்பாலான மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை முதன்முதலில் வெளிப்படுத்தும்போது அறியப்படுவதில்லை. அதனால்தான் தோராயமாக காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தோன்றினால் அன்று மாலையிலும், மாலையில் தோன்றினால் அடுத்தநாள் காலையிலும் கருவூட்டல் செய்வது மாடுகள் சினையாக ஏதுவாகும். கருவூட்டல் செய்தபின், தேவையற்ற சில நடைமுறைகளை பலர் கடைபிடிக்கின்றனர்.
சினைப்படுத்திய மாடுகளை படுக்க விடாமல் கழுத்தை மேலே தூக்கி கட்டி விடுவது, கருவூட்டல் செய்தநாளில் தீவனம், தண்ணீர் தராமல் இருப்பது, சினை ஊசி போட்ட மாடுகளை காளைக்கும், காளையுடன் சேர்ந்த மாடுகளுக்கு உடனே சினை ஊசி போடுவதையும் செய்கின்றனர்.
சினைப்படுத்திய மாடுகளை படுக்கவிட்டால், கருப்பையில் செலுத்திய உயிரணுக்கள் வெளியேறிவிடும் என்பதும் தவறு. மாடுகளை, சினை ஊசி மூலம் சினைப்படுத்தும்போது, மிகக்குறைந்த அளவு (கால் மில்லி) விந்து மட்டுமே கருப்பையின் உட்பகுதியில் செலுத்தப்படும். மேலும் விந்தணுக்கள், கருப்பையில் செலுத்தியவுடன் வேகமாக முன்னோக்கி நகரும் தன்மை கொண்டவை. அவை கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுவதால், முழுவதும் வெளியேறாது. சில கலப்பின கிடேரி, மாடுகளில் சினைப்படுத்திய பின், ஓரிரு நாளில் ரத்தம் கலந்த வழு வடியும். இதனாலும் சினைப்பிடிப்பதில் பாதிப்பு ஏற்படாது. இது சினைப்பிடிக்காமைக்கான அறிகுறியும் இல்லை. எனவே தவறான கருத்துக்களை மாடுவளர்ப்போர் மாற்றிக் கொண்டு, தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.
-டாக்டர் த.ஆனந்த பிரகாஷ்சிங்,
ஒரத்தநாடு, தஞ்சாவூர்.