பால்பண்ணை தொழில்
வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் நண்பர்கள் தாய்நாட்டில் இருந்து சிறப்பாக உழைத்து முன்னேற விரும்புவதாகவும், அதற்கு என்ன மாதிரியான விவசாய தொழில்களை தொடங்கலாம் என்றும் கேட்பதுண்டு. வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் போது தான், இந்த நாட்டுக்கு வந்து உழைக்க கொடுத்த புரோக்கர் பணம்,டிக்கெட் , விசா பணம் அத்தனையும் சேர்த்து ஒரு தொழில் செய்திருந்தால் நன்றாக முன்னேறி இருக்கலாமே என்ற எண்ணம் வருவதுண்டு.
அதை நனவாக்க உங்களுக்கு தேவை ஒரு சிறப்பான லாபகரமான தொழில். குறிப்பாக பால்பண்ணை தொழில் என்றைக்கும் வலுவான லாபத்தை தரக்கூடியது. தற்போது மதுரை உள்பட தென்மாவட்டங்களில் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு. வரிசையில் நின்று பால் பாக்கெட்டுகளை வாங்கி போகிறார்கள். கலெக்டர் என்றாலும், கற்பூர வியாபாரி என்றாலும் பால் குடிக்காமல் பொழுது போவதில்லை.
ஆனால் இந்த பாலை சமுதாயத்திற்கு தரவேண்டிய பண்ணைகளோ குறைவாக இருக்கின்றன. மதுரையில் இருந்து தினமும் 50 ஆயிரம் லிட்டர் பாலை சென்னைக்கு அனுப்பியாக வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் மதுரையில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம், மதுரை ஆவின் நிறுவனத்திற்கு பால் பண்ணைகளிலிருந்து ( கால்நடை விவசாயிகளிடமிருந்து) போதிய பால் கிடைக்கவில்லை. இதனால் பால் தட்டுப்பாடு.
படிப்பு ஏறாதவர்களை 'நீ மாடு மேய்க்க தான் லாயக்கு' என்பார்கள். உண்மையை சொன்னால் மாடு மேய்க்க தான் நிறைய திறமை வேண்டும். காரணம் மாடுகள் வாய் திறப்பதில்லை. அவற்றுக்கு என்ன வேண்டும் என்பதை கண்டுபிடிக்க, அவற்றுடன் கலந்து பழகுவதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். வெளிநாடுகளில் போய் இரும்புக்கம்பி வளைப்பதை விட இங்கிருந்து கொண்டு நாலு மாடுகளை வாங்கி வளர்த்தால், அவை எட்டாக, பதினாராக, முப்பத்தி இரண்டாக மாறும். பிறகு....உங்களுக்கு நீங்களே எஜமானன். மாடு வளர்க்க மிக முக்கியம் தீவனம் தான்.
முன்பெல்லாம் வைக்கோல் எளிதாக கிடைக்கும். தற்போது எங்கு பார்த்தாலும் குறுகிய கால நெல்பயிர்களாக வந்து விட்டபடியால் ஒரு அடியில் நெல் விளைந்து மனிதனுக்கு அரிசியை தருகிறது. ஆனால் மாட்டுக்கு தருவதற்கான வைக்கோலை காணவில்லை. காரணம், நெல் பயிர் உயரமில்லை. அதனால் வைக்கோலும் இல்லை.
சைலேஜ் குவியல்
இப்படியாக ஆகி விட்ட நிலையில், மாடுகளுக்கு தேவையான தீவனங்களை எங்கிருந்து பெறலாம். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் மாடுகள் அவ்வளவாக மேயப்போவதில்லை. அப்படியே மேய்ச்சலுக்கு போனாலும் ஏதாவது ஒரு நோய் வந்து விடுவதுண்டு. அதாவது, மழைக்காலத்தில் விளையும் புற்களில் நச்சுமழைக்காலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் வளரும் புல்லில் நைட்ரஜன் சத்து அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் வளரும் புல்லை உண்ணும் கால்நடைகளுக்கு நச்சுத்தன்மை உண்டாகி வயிறு உப்புசம், திடீர் இறப்பு ஏற்படும்.
எனவே, மழையில் தேங்கிகிடக்கும் தண்ணீரில் வளரும் புற்களை, மேய்ச்சலில் உள்ள ஆடுகளும் மாடுகளும் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வளர்ந்து கிடக்கும் புற்களை அறுவடை செய்து பதனபசுந்தீவனமாக தயாரித்து சேமித்து வைத்து கொள்ளலாம். அதை மழைக்காலம் முடியும் வரை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். மேலும் இது பதப்படுத்தி வைக்கப்படுவதால் எதிர்வரும் கோடைகாலத்தில் கால்நடைகளின் பசுந்தீவன தட்டுப்பாட்டை சமாளித்து கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்கும்படியாக செய்யலாம்.
அதாவது, ஒரு உணவுப் பொருள் குறிப்பிட்ட சீசனில் அதிகமாக கிடைக்கும் போது நாம் அதைப் பதப்படுத்தி வைத்து கிடைக்காத காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம். உதாரணமாக மாங்காயை சீசனில் வாங்கி ஊறுகாய், வடு, ஜாம் என்று பல வகைகளில் தயாரிக்கிறோம். எலுமிச்சை, தக்காளி போன்றவற்றையும் இது போல் பயன்படுத்துகிறோம். அது போல் தான் இதுவும். பொதுவாக மழைக்காலத்தில் பசுந்தீவனம் அதிகமாக கிடைப்பதுண்டு. அபரிமிதமாக வளரும் இந்த பசுந்தீவனங்களை அறுவடை செய்து சைலேஜ் என்ற முறையில் பதப்படுத்தி ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்கும் வகையில் சேமிக்கலாம். மக்காச்சோளம் மற்றும் தீவனச்சோளம் போன்றவை தான் பசுந்தீவனங்கள். இவை அறுவடை செய்யப்படும் போது பசுமையாக காணப்படும். சோளத்தை அறுவடை செய்த பிறகு கிடைக்கும் தட்டைகளை எடுத்து நாம் ஊறுகாய் போடுவது போல் பதப்படுத்துவதற்கு பெயர் தான் சைலேஜ். இந்த முறையில் சோளம் மற்றும் பிற தீவன விவசாய கழிவுகளை பதப்படுத்தி வைத்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.
சைலேஜ் என்ற பதன பசுந்தீவனம்
தேவைக்கு அதிகமாக கிடைக்ககூடிய பசுந்தீவனத்தை பதமாக பக்குவம் செய்து அதில் உள்ள சத்து பொருட்கள் வீணாகாமல் சேமிக்கின்ற முறையே சைலேஜ் ஆகும். இந்த முறையில் பசுந்தீவனத்தை தரைக்கு கீழ் வட்டமான அல்லது சதுர குழிகள் வெட்டியோ, தரைமட்டத்திற்கு மேல் டவர்சைலோ ஆகவோ தயார் செய்யலாம். மண்ணின் தன்மையை பொறுத்து சுமார் 1.8 முதல் 2 மீ ஆழத்திற்கும், 3 முதல் 4.5 மீட்டர் அகலத்திற்கும் குழி தோண்ட வேண்டும். நன்கு காய்ந்த வைக்கோல் அல்லது காய்ந்த புல்லினை கொண்டு குழியின் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் நிரப்ப வேண்டும். கோ.3, மக்காச்சோளம் மற்றும் தீவனச்சோளம் ஆகிய
பசுந்தீவனங்கள் சைலேஜ் தயாரிக்க உகந்தவை.
இந்த தீவனங்களை 1 முதல் ஒன்றரை அடி அளவில் துண்டுகளாக நறுக்கி குழிகளில் காற்றில்லாமல் அடுக்கு முறையில் நிரப்ப வேண்டும். ஒரு அடுக்குக்கு 500 கிலோ அளவு துண்டுகளை நிரப்பி வைத்து, அந்த அடுக்கை நன்றாக மிதித்து அழுத்த வேண்டும். இந்த அடுக்கின் மீது வெல்லப்பாகு கழிவை தெளித்து விட வேண்டும். பின்னர் சாதாரண உப்பு ஒரு டன்னுக்கு 8 முதல் 10 கிலோ வீதும் கணக்கிட்டு தண்ணீருடன் கலந்து ஒவ்வொரு அடுக்கின் மீதும் தெளிக்க வேண்டும். இப்படி குழி முழுவதும் நிரப்பிய பின் மேல்மட்டத்தில் உலர்ந்த வைக்கோலை பரப்பி 10க்கு 1 என்ற அளவில் மண்சேறு மற்றும் சாணத்தை கலவையாக ஆக்கி அதனை கொண்டு பூசி முழுகி விட வேண்டும். இப்படி பதப்படுத்தப்பட்ட தீவனத்தை 3 மாதங்களுக்கு பின் எடுத்து கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம்.
நன்மைகள்
இந்த பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனத்தை எதிர்வரும் கோடையில் பசுந்தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க பயன்படுத்தலாம்.
மழைக்காலத்தில் அதிகமாக விளையும் பசுந்தீவனங்களை இப்படி பதப்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் தீவனம் வீணாவதை தடுக்கலாம்.
பதப்படுத்துவதன் மூலம் தீவனத்தில் புரதம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
உலர் தீவனம் சேமிப்பதற்கான இடத்தை காட்டிலும், சைலேஜ் குழிகள் குறைந்த இடஅளவில் தீவனக்கிடங்காக இருப்பதால் எந்த இடத்திலும் தீவனத்தை சேமிக்கலாம்.
மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கும் முறை
*கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான தீவனம் அளிப்பது முக்கியம். மழைக்காலத்தில் *பண்டிகைகளும் அதிகம் வருவதால், அப்போது வீடுகளில் மீதமாகும் சோறு, இனிப்புகளை கால்நடைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இத்துடன் தீவனம் அளிக்கும் போது சில நடைமுறைகளை கடைபிடித்தல் வேண்டும்.
*மழைக்காலத்தில் தீவனத் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
*தீவனத் தொட்டிகளில் மீதமாகும் தீவனத்தை கால்நடைகள் உண்ணாமல் தீவனத் தொட்டியில் விட்டு விட்டால் அந்த தீவனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
*பசுந்தீவனத்தை மழைக்காலத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*பசுந்தீவனத்தை நன்கு உதிர்த்து மண் மற்றும் புழுக்கள், பூச்சிகள் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
கொசுக்கள், உண்ணிகள் மற்றும் புழுக்கள் அதிகம் உற்பத்தியாவது மழைக்காலத்தில் தான். எனவே தீவன தொட்டியை சுற்றியும், கொட்டகையை சுற்றியும் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தல் மிகவும் அவசியம்.
*தண்ணீர் தொட்டியில் பாசி பிடிப்தை தவிர்க்க, வாரம் ஒரு முறை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்து விட வேண்டும்.
நன்றி :- பசுமை இந்தியா