யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 26 அக்டோபர், 2013

நான் கண்ட சேவல்கள்

நான் கண்ட சேவல்கள்!!!

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.

கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன. கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள்எனப்படுகின்றன. கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.

வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவைபேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம் என்பனவாகும். சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை, வீரத்துடன் வாழும் இச்சேவல்கள் தன்னை வளர்த்துப் பராமரிக்கும் பராமரிப்பாளனுக்கு விசுவாசமாகவும், குறிப்பறிந்து வாழக்கூடிய வகையிலும் இருப்பனவாகும்.

சேவல்களுக்குத் தடிமன்(சளி) வந்தால், அதன் குரலை வைத்து எளிதில் தெரிந்து கொள்வோம் என்கிறார் கிணத்துக்கடவு சேவல் பராமரிப்பாளர் முருகன். சளிப்பிடித்த சேவல்களுக்கு, குறுமிளகு, பூண்டு, சிறிதளவில் மிளகாய்த்தூள் அடங்கிய உருண்டைகளைக் கொடுப்பதன் மூலம் அவற்றைக் குணப்படுத்தலாம் என்கிறார் அவர்.

மேலும் வெள்ளைக் கழிச்சல் எனும் நோயைக் குணப்படுத்த இயலாது; வருமுன் காத்தலே மிக அவசியம் என்றும் கூறுகிறார். இந்நோய் தாக்குண்ட சேவல்கள், வெள்ளையாகக் கழிக்கும்; மேலும் உடன் இருக்கும் சேவல் மற்றும் கோழிகளுக்கும் தொற்றுவிடக் கூடிய அபாயமும் உண்டு. சேவல்கள் இருக்கும் இடத்தை, சுண்ணாம்பு கலந்த நீரால் தெளித்து, கட்டுத்தறி முழுதும் சுண்ணாம்புக் கலவையைப் பூசுவதுமூலம் இதைத் தடுத்து நிறுத்தலாம்.

கண்ணைச் சுற்றி பேன்கள் ஆக்கிரமிப்பதைத் தடுக்க, சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டு மற்றும் இஞ்சியை இட்டு, பிறகு அந்த எண்ணெயை கண்களில் இடுவதன் மூலம் பேன் தொல்லையில் இருந்து காப்பாற்ற முடியும்.

நாம் பார்த்த சில சேவல்களின் பெயர் கீழே வருமாறு:

கோழி வள்ளுவர்,
காக வள்ளுவர்,
கீரி வள்ளுவர்,
பூத வள்ளுவர்,
பொன்ற வள்ளுவர்,
பொன்றக் காகம்,
செங்காகம்,
கருங்காகம்,
வெண்காகம்,
செங்கீரி,
காகக் கீரி,
பொன்றக் கீரி,
வள்ளுவர்க் கீரி,
பூதிக் கீரி,
காக பூதி,
பொன்ற பூதி,
செம்பூதி,
பொன்ற வெள்ளை,
புள்ளி வெள்ளை,
காகக் கருப்பு,
பேய்க்கருப்பு,
சேவப்பேடு,
கோழிப்பேடு,
கரும்பேடு,
வெண்பேடு,
பொன்றப்பேடு,
பூதப்பேடு,
காகப்பேடு,
சித்திரப்புள்ளி,
நூலாவள்ளுவர்

கோழி வள்ளுவர்

சித்திரப்புள்ளி

பொன்றக்கீரி

பேய்க்கருப்பு

காகவள்ளுவர்

வள்ளுவர்

செங்காகம்

வெள்ளை வள்ளுவர்

பொன்ற வெள்ளை

பொன்றக்கால் காகச் சேவல்

காகச் சேவல்

காகக்கருப்பு

பொன்றக்கால் காகம்

வள்ளுவக்கீரி

பொன்றக்கால் செங்காகம்

நூலாவள்ளுவர்

பொன்றம்

சாணிப்பச்சக் காகம்

காகவள்ளுவர்

நூலாவள்ளுவர்

பொன்றக் காகம்

காகச் சேவல்

காகக்கருப்பு

சல்லிப்பொன்ற வள்ளுவர்

காகப் பேடு

பூதி வள்ளுவர்

பூதி வள்ளுவர்

பொன்றக் கீரி

பொன்றக் கீரி

காக வள்ளுவர்ப் பேடு

கொங்கு நாட்டின் மேற்குக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, கிராமியத்தைக் கண்ணுறச் செய்வதில் உதவிய வாகன ஓட்டுனர் வசந்த் அவர்களுக்கும், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள வெள்ளக்கிணறு சுப்பன் அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.


முன்னறிவிப்பு: கிட்டத்தட்ட முந்நூறு விதமான சேவல்களைப் படம் பிடிப்பதாக இருந்தோம். எதிர்பாராத காரணத்தால் அது தடைபட்டு விட்டது. எனினும் வரும்காலங்களில் நல்லதொரு வாய்ப்பு கிட்டும் என நம்புகிறோம். விரைவில், சுப்பன் மற்றும் வசந்த் அவர்களின் பேட்டி, எழிலாய்ப் பழமை பேசும் வலைப்பதிவில் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கோடை காலத்தில் கோழி பராமரிப்பு

கோடை காலத்தில் கோழி பராமரிப்பு

கோடை காலத்தில் கோழிகளை விரட்டிப் பிடித்தால், அவை பலவீனம் அடைகின்றன. கோடை என்றாலே கோழிகளுக்கு சோதனையான காலம்தான். சில பராமரிப்பு முறைகள் மூலம் நிவர்த்திக்கலாம். இறைச்சி கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, கோடை காலத்தில் வெப்ப அதிர்ச்சி நோய் தாக்கும். சுற்றுப்புற கூடுதல் வெப்பநிலை தான், இதற்கு காரணம். இவற்றுக்கு இயற்கையில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. இதனால் கூடுதல் வெப்பத்தை, உடலில் இருந்து வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. இறைச்சி கோழிகளில் உடல் கொழுப்பு அதிகமிருப்பதால், கோழிக் கூட்டில் காற்றோட்டமான வசதி இல்லாதது, சுற்றுப்புற வெப்பத்தால் வெப்ப அதிர்ச்சி (shock )ஏற்படும். நோய் தாக்கிய கோழிகளுக்கு மூச்சிரைப்பு, சோர்வு ஏற்படும். இவை நிறைய தண்ணீர் குடிக்கும். தீனி அதிகம் சாப்பிடாது. பண்ணையின் பக்கவாட்டுச் சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கும். பிற்பகலில் இறந்து விடும்.

பண்ணையில் தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் அதிகமாக வைக்க வேண்டும். தண்ணீரில் ஐஸ்கட்டிகள் சேர்க்கலாம். கூரையின் மேல் வைக்கோலை பரப்பி, தண்ணீர் தெளித்து வைத்து வெப்பத்தைக் குறைக்கலாம். பக்கவாட்டில் ஈரச்சாக்குகளை தொங்கவிடலாம். யாழ்ப்பாணம் என்றால் வாழை இலைகளையும் பாவிக்கலாம்.உலர் தீவனமாக கொடுக்காமல், தண்ணீர் சேர்த்து கொடுக்க வேண்டும். விடியும் முன், மின்விளக்குகளை ஒளிரவிடலாம் , அந்நேரத்தில் தீவனம் சாப்பிட ஏதுவாக இருக்கும். நேரமாகும் போது வெப்பம் அதிகமானால், தீவனம் எடுப்பது குறையும். நூறு கோழிகளுக்கு 500 மில்லி கிராம் வீதம், "விட்டமின் சி'(vitamins C ) சத்து கொடுக்கலாம். குளிர்ந்த மோர் குடிக்க தரலாம். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து தரலாம்.
பண்ணைக்குள் கோழியின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதிக எண்ணிக்கை இருந்தால் வெளி வெப்பநிலை கூடுதலாகும். ஒவ்வொரு கோழிக்கும் ஒன்றரை சதுர அடி இடம் தரவேண்டும். நோய் தாக்கினால், மருந்துகளின் மூலம் கட்டுப் படுத்தலாம்.
கறவை மாடுகளை வெப்பநோய் தாக்காமல் இருக்க, பசுந்தீவனங்களை தரவேண்டும். அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும். சோளம் போன்ற குளிர்ச்சியான தீவனங்களை அரைத்து தண்ணீரில் கலந்து தரலாம். பசுந்தீவனங்கள் இருந்தாலும் பால் உற்பத்தி அதிகரிக்கும்.