யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கோடை காலத்தில் கோழி பராமரிப்பு

கோடை காலத்தில் கோழி பராமரிப்பு

கோடை காலத்தில் கோழிகளை விரட்டிப் பிடித்தால், அவை பலவீனம் அடைகின்றன. கோடை என்றாலே கோழிகளுக்கு சோதனையான காலம்தான். சில பராமரிப்பு முறைகள் மூலம் நிவர்த்திக்கலாம். இறைச்சி கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, கோடை காலத்தில் வெப்ப அதிர்ச்சி நோய் தாக்கும். சுற்றுப்புற கூடுதல் வெப்பநிலை தான், இதற்கு காரணம். இவற்றுக்கு இயற்கையில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. இதனால் கூடுதல் வெப்பத்தை, உடலில் இருந்து வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. இறைச்சி கோழிகளில் உடல் கொழுப்பு அதிகமிருப்பதால், கோழிக் கூட்டில் காற்றோட்டமான வசதி இல்லாதது, சுற்றுப்புற வெப்பத்தால் வெப்ப அதிர்ச்சி (shock )ஏற்படும். நோய் தாக்கிய கோழிகளுக்கு மூச்சிரைப்பு, சோர்வு ஏற்படும். இவை நிறைய தண்ணீர் குடிக்கும். தீனி அதிகம் சாப்பிடாது. பண்ணையின் பக்கவாட்டுச் சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கும். பிற்பகலில் இறந்து விடும்.

பண்ணையில் தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் அதிகமாக வைக்க வேண்டும். தண்ணீரில் ஐஸ்கட்டிகள் சேர்க்கலாம். கூரையின் மேல் வைக்கோலை பரப்பி, தண்ணீர் தெளித்து வைத்து வெப்பத்தைக் குறைக்கலாம். பக்கவாட்டில் ஈரச்சாக்குகளை தொங்கவிடலாம். யாழ்ப்பாணம் என்றால் வாழை இலைகளையும் பாவிக்கலாம்.உலர் தீவனமாக கொடுக்காமல், தண்ணீர் சேர்த்து கொடுக்க வேண்டும். விடியும் முன், மின்விளக்குகளை ஒளிரவிடலாம் , அந்நேரத்தில் தீவனம் சாப்பிட ஏதுவாக இருக்கும். நேரமாகும் போது வெப்பம் அதிகமானால், தீவனம் எடுப்பது குறையும். நூறு கோழிகளுக்கு 500 மில்லி கிராம் வீதம், "விட்டமின் சி'(vitamins C ) சத்து கொடுக்கலாம். குளிர்ந்த மோர் குடிக்க தரலாம். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து தரலாம்.
பண்ணைக்குள் கோழியின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதிக எண்ணிக்கை இருந்தால் வெளி வெப்பநிலை கூடுதலாகும். ஒவ்வொரு கோழிக்கும் ஒன்றரை சதுர அடி இடம் தரவேண்டும். நோய் தாக்கினால், மருந்துகளின் மூலம் கட்டுப் படுத்தலாம்.
கறவை மாடுகளை வெப்பநோய் தாக்காமல் இருக்க, பசுந்தீவனங்களை தரவேண்டும். அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும். சோளம் போன்ற குளிர்ச்சியான தீவனங்களை அரைத்து தண்ணீரில் கலந்து தரலாம். பசுந்தீவனங்கள் இருந்தாலும் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

சினை பிடிக்காத கறவை மாடுகள்: தீர்வு என்ன?

சினை பிடிக்காத கறவை மாடுகள்: தீர்வு என்ன?

கறவை மாடுகள் சரியான காலத்தில் சினை பிடித்து ஆண்டுக்கு ஒரு கன்று ஈன வேண்டும். இல்லையேல், பால் உற்பத்தி குறைந்து, பராமரிப்புச் செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படும்.



மூன்று முறை சரியான பருவத்தில் கருவூட்டல் செய்த பின்னரும் சினை பிடிக்காமல் இருப்பது தாற்காலிக மலட்டுத் தன்மை எனப்படும். சரியான சினை தருணத்தைக் காணத் தவறுதல், சரியான பருவத்தில் சினைப்படுத்தத் தவறுதல், சினைப்படுத்தும் தருணத்தில் ஏற்படும் அயர்ச்சி, சாதகமற்ற தட்ப வெப்பநிலை போன்ற பராமரிப்பின்மைக் குறைபாடுகளாலும், தீவனம், சத்துப் பற்றாக்குறை, இனப் பெருக்க உறுப்புகளைத் தாக்கும் நோய்கள், கனநீர் பற்றாக்குறை, மரபியல், உடற்கூறு பிரச்னைகள், சினைப் பருவத்துக்கு வந்தும் சினை தங்காமை, கிடேரிகளை சினைப்படுத்துதல் ஆகிய காரணங்களாலும் இந்தத் தாற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

இத்தகை பாதிப்புகளைத் தவிர்க்க கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தக்க சமயங்களில் தடுப்பூசி போடுவதுடன், கொட்டைகைகளை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். நோய் வாய்ப்படும் சூழல் காணப்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதேபோல, சினை பிடிக்காத பசுக்களில் 5 முதல் 10 சதம் வரை மட்டுமே காணப்படும் நிரந்தர மலட்டுத் தன்மைக்கு பசுக்களில் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகள்தான் காரணம்.

இரட்டைக் கன்றாக ஆண் கன்றுடன் பிறந்த பெண் கன்றின் இனப் பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்து விடுவதால் இந்தக் கன்றும் சினையாகாது. இந்தக் குறைபாடுகள் மரபுக் கோளாறுகளால் ஏற்படுவதால் சிகிச்சை மூலம் சரிபடுத்த முடியாது. ஆகையால், இந்தக் குறைபாடுள்ள கிடேரிகளைப் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

விந்தணு, சினை முட்டை ஆகியவற்றிலுள்ள மரபணுக்களில் அழிவு குணங்கள் இருந்தால் கருவுறுதல் பாதிக்கப்படும். வயது முதிர்ந்த பசுக்கள், காளைகள் குறைபாடுள்ள முட்டை, விந்தை உருவாக்குவதால் வயது அதிகமான மாடுகளில் சினை பிடிக்கத் தாமதம் ஏற்படுகிறது. எனவே, வயது முதிர்ந்த மாட்டையும் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

மாடுகள் சினை பிடிக்கவில்லையெனில், எத்தனை நாளுக்கு ஒருமுறை சினைக்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். சினை ஊசி போட்ட 21 நாள்களுக்குப் பிறந் சினை தருண அறிகுறிகளை வெளியிட்டால் அது சினை பிடிக்கவில்லை என்பது தெரிந்து விடும். உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

இத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மையை நீக்கி பெரும்பாலான பசுக்களை கருவுறச் செய்ய முடியும்