- மரு. R.V.விஜயக்குமார், கால்நடை உதவி மருத்துவர்,கால்நடைமருந்தகம், திருமலைப்பட்டி,நாமக்கல். தொலைபேசி எண் ; 9 443 217 843
சரியான சினைத் தருணத்தை அறிந்து கருவூட்டல் செய்வதன்மூலம் பெரும்பாலான மாடுகளின் சினைப் பிடிக்கும் தன்மையை அதிகரித்து விடலாம். மேலும் பசு கிடாரியை 2 வயதிலும், எருமைக் கிடாரியை 3வயதிலும் கன்று ஈன வைக்க வேண்டும். கன்று ஈன்ற பசுவை 2மாதத்திற்குள்ளும், எருமையை 3 மாதத்திற்குள்ளும் சினை பிடிக்க வைக்க வேண்டும்.இப்படிச் செய்வதே இலாபகரமான பண்ணை மேலாண்மையாகும்.
சினைத் தருண அறிகுறிகள்:.
1.அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும்.
2.பிறப்பு உறுப்பிலிருந்து, எண்ணெய் போன்ற வழவழப்பான திரவ ஒழுக்கு காணப்படும்.
3.மாடுகள் அமைதியற்று காணப்படும்.
4.இருப்புக்கொள்ளாமல் ஓடும், சில சமயங்களில் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடுவதும் உண்டு.
5.உட்கொள்ளும் தீவனத்தின் அளவு குறையும்.
6.வாலைத்தூக்கிக் கொண்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும்.
7.பிற மாடுகளை நுகர்ந்து பார்க்கும்.
8.அருகில் உள்ள மாடுகளின் மீது தாவுவதோடு மற்ற மாடுகளை தன்மீது தாவ அனுமதிக்கும்.
9.பிறப்பு உறுப்பின் உதடுகள் தடித்தும், சிவந்தும், வழவழப்புடனும் காணப்படும்.
10.பால் மாடுகளில் பாலின் அளவு குறைந்து சினைத் தருணம் முடிந்த உடன் அதிகரிக்கும்.
ஊமை சினைப் பருவம்: 21 நாட்களுக்கு ஒருமுறை பருவத்திற்கு வந்துகொண்டிருக்கும். ஆனால் பருவ அறிகுறியை வெளிக்காட்டாது. கிடாரிகளிலும், கன்று ஈன்ற எருமைகளிலும் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.வெயில் காலங்களில் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.
இந்த சினைத்தருண அறிகுறிகள் மாட்டிற்கு மாடு வேறுபட்டும்,பருவகாலம், பாலின் அளவு, தீவனத்தின் தன்மை போன்ற காரணிகளால் வேறுபட்டும் காணப்படும். பொதுவாக மாடுகள் பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் தனமையானது வெப்பநிலை குறைந்த நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக காணப்படும். எனவே,மாடுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் 10 நிமிடங்கள் கவனமாக கண்காணித்து பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை உற்று நோக்குவது அவசியம். பலரது கறவை மாடுகளின் பராமரிப்பை வேலையாட்கள் கவனிப்பார்கள். இச்சூழ்நிலையில் சினை தருணம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
வருடம் முழுவதும் எருமைகள் சினைக்கு வந்தாலும், பொதுவாக வருடத்தில் 8 மாதங்கள் மட்டுமே சினைத்தருண அறிகுறிகளை மிகவும் வெளிப்படுத்தும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4மாதங்களுக்கு அவை சினை தருண அறிகுறிகளை அவ்வளவாக வெளிக்காட்டாது. மழைக்காலங்களில் அதிகப்படியாக சினைத் தருண அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.
எருமைகள் சினைப் படிக்காமல் போவதற்கு முக்கியக் காரணம் எருமை மாடு வளர்ப்போர் சினைத் தருணத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் அதற்கு சினை ஊசி போடுவது கிடையாது. எருமைகளில் ஊமை சினை பருவம் அதிகம் இருக்கும். ஆகவே சினை தருண அறிகுறிகளை அனைத்தையும் தெரிந்துகொண்டு இக்கட்டுரையில் கொடுக்குப்பட்டுள்ள
சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள் பகுதியை பின்பற்றினால் சினை தருணத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள்
ஒரு பருவத்தை தவறவிட்டால் 20 நாட்களை இழக்கிறோம். ஏனெனில் பசுக்கள் 17-20 நாட்களுக்கொருமுறையும், எருமைகள் 20-24நாட்களுக்கொருமுறையும் பருவத்திற்கு வருகின்றன. ஆகவே எக்காரணத்தைக்கொண்டும் சினை தருணத்தை தவற விடக்கூடாது. கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சினை தரணத்தை தவறவிடவமாட்டோம்.
1. அறிகுறிகள் அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் 2 அல்லது 3 அறிகுறிகள் தென்பட்டாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
2. மாதக் காலண்டர் அல்லது ஒரு சிறிய நோட் போட்டு பருவத்திற்கு வந்த அல்லது சினை ஊசி போட்ட நாளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றிலிருந்து பசுவாக இருந்தால் 18வது நாளையும், எருமையாக இருந்தால் 21வது நாளையும் குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளுக்கு 2 நாள் முன்பாகவே பருவ அறிகுறிகள் தெரிகிறதா என பாருங்கள். பின் தொடர்ந்து 5 நாட்கள் பாருங்கள்.
ஒரு பசு சினை ஊசி போட்ட தேதி 1 என்றால், சினை பிடிக்காவிட்டால் அடுத்து பருவத்திற்கு வரும் நாள் 18ம் தேதி. ஆகவே 16ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என பார்க்க வேண்டும்.
3. பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டிய நேரம் காலை மற்றும் மாலை வேலை. வாலில், மாட்டின் பின்புறத்தில் எண்ணேய் போன்ற வழவழப்பான திரவம் ஒட்டியிருக்கிறதா, மாட்டின் பிறப்பு உறுப்பு தடித்து, சிவந்து காணப்படுகிறதா, மேலே கூறிய மற்ற பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஏதேனும் 2அறிகுறிகள் தென்பட்டாலும், பருவம் இருக்கிறதா என சந்தேகம் எழுந்தாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவது நல்லது.
4. கன்று ஈன்ற மாட்டில், கன்று ஈன்ற நாளை குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளிலிருந்து 20வது நாள் பருவத்திற்கு வரும். ஆனால் அது ஊமை சினை தருணமாக இருக்கும். ஆகவே பருவ அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. சில மாடுகளில் மட்டும் பருவ அறிகுறிகள் தெரியும். அப்படித் தெரிந்தாலும் சினை ஊசி போட வேண்டாம். மீண்டும் 40வது நாள் பருவத்திற்கு வரும். இந்த நாளை தவறவிடாதீர்கள். நன்கு சினை பிடிக்கக்கூடிய தருணம் இது.
இம்முறை சினை பிடிக்காவிட்டால் மீண்டும் 60வது நாள் சினை தருணத்திற்கு வரும். அப்பொழுது சினை ஊசி போடலாம். அதாவது கன்று ஈன்றவுடன் வருகின்ற சினை பருவத்தில் சினை பிடக்கக்கூடிய தன்மை அதிகமாக இருக்கும். நாள் செல்ல செல்ல சினை பிடிக்கக்கூடிய தன்மை குறைந்து கொண்டே போகும். ஆகவே கன்று ஈன்ற 60 நாட்களுக்குள் சினை பிடக்க வைத்து விட வேண்டும்.
கருவூட்டலுக்கு ஏற்ற காலம்
மாடுகளில் பருவச் சுழற்சியானது பசுவில் 17-20 நாட்களுக்கு ஒருமுறையும், எருமைகளில் 21-24 நாட்களுக்கு ஒருமுறையும் ஏற்படுகின்றது. சினைத்தருணமானது பசுக்களில் 12 முதல் 24மணிநேரமாகவும், எருமைகளில் 8 முதல் 18 மணி நேரமாகவம் இருக்கும்.
மாடுகள் காலையில் முதலில் பருவ அறிகுறிகள் காட்டினால் மாலையிலும், மாலையில் முதல் பருவ அறிகுறிகள் காட்டினால் அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்யப்படவேண்டும். சில மாடுகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பருவ அறிகுறிகள் காட்டினால் 12 முதல் 24 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை கருவூட்டல் செய்வது அவசியம். சுருக்கமாக மாடுகளுக்கு நடுச்சினைத் தருணத்தில் கருவூட்டல் செய்வதே உகந்தது.
பசுக்களை அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் தாக்கும்பொழுது அது அவற்றின் இனவிருத்தித் திறனை பாதிக்கும். முக்கியமாக வெயில் காலங்களில் காலை அல்லது மாலை நேரங்களில் ஊசி போடலாம்.
கிடாரிக் கன்றை இனவிருத்தி செய்யும்போது அது சினைத்தருணத்திற்கு வரும் வயதைக் கணக்கிடுவதோடு மட்டுமல்லாது தகுந்த உடல் எடையினை அடைந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
கறவை மாடுகள் கன்று போட்ட மூன்று மாதத்திற்குள் தான் நன்கு சினை பிடிக்கும். இதை உணராது பலர் மாடு சினை பிடித்தால் பால் குறைந்துவிடும் என்பார்கள்; மாடு சினை பிடிப்பதை தவிர்ப்பார்கள். சினைக்கு வந்த மாட்டிற்கு கருவூட்டல் செய்ய மாட்டார்கள். நாட்டு மாடுகள் பல சினைப்பட்டதும் பால் கொடுப்பதை குறைத்துவிடும் அல்லது நிறுத்திவிடும். பல எருமைகளும் அப்படியே. இந்த எண்ணத்தில் பலர் கலப்பின பசுக்களுக்கும் காலத்தில் கருவூட்டல் செய்வதில்லை. ஆனால் கலப்பின பசுக்கள் சினை பிடித்தவுடன் பாலை நிறுத்துவதில்லை, பாலை குறைப்பதுமில்லை. இயற்கையாகவே கன்று ஈன்று 2 மாதங்கள் பாலின் அளவு அதிகரித்துகொண்டே செல்லும், பின்1 மாதம் பாலின் அளவு மாறாமல் இருந்துவிட்டு, பின் 3மாதத்திற்குமேல் பால் குறைய ஆரம்பிக்கும். இது கருவூட்டல் செய்தாலும், செய்யாவிட்டாலும் இயற்கையாக நிகழக்கூடியது. ஆகவே3 மாதத்தில் சினை பிடிக்கும்போது, சினை பிடித்ததால் தான் பால் குறைகிறது என நினைக்கத் தேவையில்லை.
பலர் எண்ணெய் போன்ற திரவம் (கோழை) வடிவதால், பருவம் அடங்கிய பிறகு சினை ஊசி போடலாம் என நினைத்து பருவம் ஆரம்பித்து 2 நாள் கழித்தே சினை ஊசி போட வருகின்றனர். அப்பொழுது பருவமே இருப்பதில்லை. அவர்கள் நினைப்பது கோழையுடன் சேரத்து விந்துவும் வெளியே வந்துவிடும் என்பதே. உண்மை என்னவெனில், சரியான பருவத்தில் கர்ப்பபையில் செலுத்திய விந்து கோழையுடன் சேர்ந்து வெளியே வராது. ஏனெனில் கோழை உற்பத்தியாகும் இடம் கர்ப்பையின் வாய்ப்பகுதியாகும்.. அந்த இடத்தை கடந்து கர்ப்பப்பைக்குள்தான் விந்தணு செலுத்தப்படுகிறது. ஆகவே கோழை அதிகமாக அடித்தாலும் பரவாயில்லை, முதல் பருவ அறிகுறி தெரிந்ததும் 12 மணி நேரத்திற்குள் முதல் கருவூட்டல் செய்துகொள்ளுங்கள், மேலும் பருவம் 24 மணி நேரத்திற்கு நீடித்தால் மீண்டும் ஒரு கருவூட்டல் செய்துகொள்ளுங்கள்.
கருவூட்டலுக்கு முன் மாடுகள் பராமரிப்பு
கருவூட்டலுக்கு கொண்டு செல்லும் மாடுகளை அடித்தோ உதைத்தோ துன்புறுத்தியோ அல்லது அதிக பயத்திற்கு உட்படுத்தியோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவ்வாறு கொண்டு செல்லப்படும் மாடுகளில் அட்ரீனலின் எனப்படும் கனநீர் (Hormone)சுரந்து கருப்பையின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்துவிடும். இதன் விளைவாக பிட்யூட்டரி எனப்படும் நாளமில்லாச் சுரப்பியன் கனநீரான ஆக்சிடோசின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையை அடைவது தடைப்பட்டுவிடும். இதன் விளைவாக கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைந்து விந்தணுக்கள் கரு முட்டையோடு இணைவது தடைபடும். மேலும், கருவூட்டல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளுக்கு உடனடியாக கருவூட்டல் செய்யாமல் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கட்டி வைத்து பின்பு கருவூட்டல் செய்வதன் மூலம் மேற்கூறிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
கருவூட்டல் செய்வதற்கு முன்பு மாடுகளின் பிறப்பு உறுப்பினை சுத்தமான நீரினைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். ஏனெனில், பிறப்பு உறுப்பில் சாணம், சிறுநீர் போன்றவை ஒட்டி இருப்பதோடு நுண் கிருமிகளும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவைகள் கருவூட்டல் உபகரணத்தின் வாயிலாக கருப்பையினுள் செல்வதால் கருப்பை அழற்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
கருவூட்டலுக்கு பின் மாடுகள் பராமரிப்பு
கருவூட்டல் செய்த மாடுகளை உடனடியாக ஓட்டிச் செல்லாமல் 10நிமிடங்கள் மர நிழலில் கட்டி வைத்த பின்பு ஓட்டிச் செல்வது நலம். ஏனெனில் உடனடியாக ஓட்டிச் செல்வதால் முன்பே குறிப்பிட்டது போல ஆக்சிடோசின் என்ற கனநீர் தடைபட வாய்ப்பு உள்ளது. சிலர் கருவூட்டல் செய்த மாடுகளின் தலையை உயரமாக உயர்த்தி மரக்கிளை போன்றவற்றில் கட்டி மாட்டை படுக்கவிடாமல் செய்வதோடு தண்ணீர், தீவனம் போன்றவற்றையும் தராமல் பட்டினிபோட்டு விடுவர். இப்படிச் செய்வதன்மூலமாக செலுத்தப்பட்ட விந்தணுக்கள் திரவ ஒழுக்கின் மூலம் வெளியே வரவிடாமல் தடுத்து விடலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
ஏனெனில் , விந்தணுக்கள் கருப்பையின் நடுப்பகுதியில் செலுத்தப்படுவதால், பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவ ஒழுக்கு மூலமாக விந்தணுக்கள் வெளிவர வாய்ப்பு இல்லை. மாறாக மாடுகளை மேற்கூறிய கொடுமைகளுக்கு உட்படுத்துவதே அதன் சினைப் பிடிப்புத் தன்மையை பாதித்துவிடும். எனவே, கருவூட்டல் செய்த மாடுகளுக்கு போதுமான அளவு தீவனம், குடிநீர் போன்றவற்றை அளிப்பது அவசியம்.
வெயில் நேரங்களில் மாட்டின் மேல் குளிர்ந்த நீரைத் தெளிப்பதன் மூலம் சினைப் பிடிப்பு விகிதத்தை அதிகரிக்கலாம். மேலும் மாட்டிற்கு கருவூட்டல் செய்துவிட்டோம், சினைப் பிடித்துவிடும், மூன்று மாதங்கள் கழித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று இருந்துவிடாமல், கருவூட்டல் செய்தபின் 21 நாட்களுக்குள் ஏதாவது சினைத் தருண அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கவனித்து கருவூட்டல் செய்வது மிகவும் அவசியம்.
சினை ஊசி போட்டு 3 மாதம் கழித்து சினை பிடித்துள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சினை ஊசியில் 40முதல் 60 சதவீதம் வரை மட்டுமே சினை பிடிக்கும். நிறைய பேர் சினை பிடித்துவிட்டது என்ற நம்பிக்கையில் 7-8 மாதம் வரை இருந்துவிட்டு, தற்செயலாக 'எதற்கும் சந்தேகத்திற்கு பார்க்க வந்தேன்'என வருகிறார்கள். அப்பொழுத சில மாடுகள் சினையாக இருப்பதில்லை. இவர்கள் சினை ஊசி போட்டு 3 மாத த்திலேயே சினை பார்த்திருந்தால் 4 மாதம் வீணாவதை தவிர்த்திருக்கலாம்.
சினைத் தருண முடிவில் உதிரப்போக்கு
சில மாடுகளில் சினைத் தருணம் முடிவுற்ற 48 முதல் 96 மணி நேர இடைவெளியில் பிறப்பு உறுப்பு வழியாக உதிரப் போக்கிற்குப்பின் கருவூட்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். கருவூட்டல் செய்த மாடுகளில் காணப்படும் உதிரப்போக்கிற்கும், சினை பிடிப்புத் தன்மைக்கும் தொடர்பு இல்லை. இருந்தபோதிலும், இத்தகைய உதிரப்போக்கு கண்ட மாடுகளில் நோய்க்கிருமிகள் எளிதில் கருப்பையினை அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய மாடுகளின் பிறப்பு உறுப்பை நன்றாகக் கழுவி மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்தல் அவசியம் ஆகும்.
கிடாரிகள்
சினை ஊசி போட வரும் பல கிடாரிகள் கர்ப்பப்பை வளர்ச்சி இருப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் கன்றாக இருக்கும்போது தேவையான பால் தராததே ஆகும். கர்ப்பபை வளருவதற்கு காலம் கடந்து நாம் செய்யும் முயற்சிகள் அதிகம் தோல்வியையே தழுவுகின்றன. இதுவே கன்றாக இருக்கும்போது தேவையான பால் மற்றும் தீவனம் அளிக்கும் பெரிய பண்ணைகளில் 2 ஆண்டுகளில் பசுங்கிடாரிகள் கன்று ஈன்று விடுகின்றன. ஆகவே கன்றாக இருக்கும்போதே தேவையான பால் மற்றும் தீவனம் அளித்து கர்ப்பபை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். காலம் கடந்து அதாவது கிடாரியின்2 வயதில் இதற்கான முயற்சி செயவதை தவிர்க்க வேண்டும்.
கிடாரிகளுக்கு சினை ஊசி போடும்பொழது கீழ்க்கண்ட மூன்று விதிகளும் பின்பற்றப்படவேண்டும்.
கிடாரியின் எடை, அதன் தாயின் எடையில் 3ல் 2 பங்கு எடை அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.
கிடாரியின் வயது பசுவிற்கு 1½ வயதும், எருமைக்கு 2-2½ வயதும் அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.
கர்ப்பப்பை தேவையான வளர்ச்சி அடைந்துவிட்டதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்த 3 விதிகளும் ஒத்துப்போனால் மட்டுமே கிடாரிகளுக்கு சினை ஊசி போட வேண்டும்.
பருவ அறிகுறிகள் காட்டாமை
அதிக பால் கொடுக்கும் மாடுகள் பருவ அறிகுறிகள் காட்டும் தன்மையை தற்காலிகமாக இழந்துவிடுகின்றன.
மெலிந்த உடல் நிலையில் உள்ள (உதாரணமாக எலும்புருக்கி நோய் தாக்கிய) மாடுகளில் பருவ அறிகுறி காட்டாமை அதிகமாகக் காணப்படும்.
சத்துப் பற்றாக்குறை காரணமாக இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் கனநீரின் குறைபாடு ஏற்பட்டு இத்தகைய தன்மை ஏற்படுகிறது.
வயதான மாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது.
கருப்பையின் சூலகத்தல் கடினக்கட்டி ஏற்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது.
அதிக வெப்பநிலை உள்ள காலங்களில் சினைப் பருவம் தோன்றாமை அதிகமாகக் காணப்படுகிறது.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பாட்டால் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் கால்நடைகளைக் கையாளுவது நல்லது.
பருவத்தே பயிர் செய்வீர்!
பணம் பலம் பெறுவீர்!