யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 5 மே, 2013

செம்மறியாடுகளில் செயற்கைக் கருவூட்டல்

செயற்கைக் கருத்தரிப்பு முறை செம்மறியாடுகளில் தற்போது தான் பின்பற்றப்படுகிறது. இம்முறை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. நல்ல தரமான பொலிக் கிடாவின் விந்தணுவிலிருந்து வீரியம் குறைந்த பெட்டை ஆடுகளைக்கூட இம்முறையில் கருத்தரிக்கச் செய்யலாம். பெட்டை ஆடுகளை அதன் தோற்றம் மற்றும் உற்பத்தி அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் இச்செயற்கைக் கருவூட்டல் முறை 1950ற்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுத் தற்போது தான் ஆங்காங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் செம்மறியாடுகளின் விந்தணுக்கள் அதிகம் சேமித்து வைக்கப்படுவதில்லை. இந்த விந்தணுக்கள் நிறம், அடர்த்தி, அளவு போன்ற தோற்றத்தின் அடிப்படையிலே பிரிக்கப்படுகின்றன. இதில் ஆராய்ச்சிகள் அதிகம் நடத்தப்படவில்லை.
Sheep_AI
3 முறைகளில் செம்மறி ஆடுகளில் விந்தணு சேகரிக்கலாம்
  1. சினைப்பை மூலம்
  2. செயற்கை சினைப்பை முறை
  3. மின்சார தூண்டல் முறை
மின்சாரத் தூண்டல் முறையில் செம்மறி ஆட்டுக் கிடாக்களை 1 நாளைக்கு 30 முறை தூண்டலாம்.
குறைந்தது 16 முறை வரை விந்துச் சேகரிக்கலாம். செம்மறி ஆடுகளில் தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் விந்தணு உற்பத்தியை அதிகம் பாதிப்பதில்லை.

1 மி.லி அடர்வு நீக்கப்பட்ட கரைசலில் 1 மில்லியன் விந்தணுக்களுக்குக் குறைவாக இருந்தால் அது வீரியம் மிக்கதாக இருக்காது.  சேகரித்த விந்தணுக்களை பெட்டை ஆட்டின் சினைப்பையில் வைக்கும் போது மிகக் கவனமாக வைத்தல் வேண்டும். இதில் முக்கியமான விஷயம் விந்தணுவானது கருப்பையின் வாய்ப்பகுதியில் வைக்கப்படவேண்டும். இதற்கு உறுப்புக்களை விரிவுப்படுத்திக் காட்டும் உபகரணம் கொண்டு கருப்பையின் வாய்ப்பகுதியில் சரியாக வைத்தல் வேண்டும். இம்முறை கால்நடைகளின் உட்பகுதியில் சரியாக வைத்தல் வேண்டும். இம்முறை கால்நடைகளைப் போல ஆடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாவிடினும் சரியான முறைகளைக் கையாண்டால் ஆடுகளின் உற்பத்தி பெருகும்.
(ஆதாரம்: Handbook of Animal Husbandary Dr, Acharya)
செயற்கை கருத்தரிப்பு முறை
அறிமுகம்

செயற்கைக் கருத்தரிப்பு என்பது ஆண் இனப்பெருக்க உறுப்பிலிருந்து உயிருள்ள விந்தணுக்களை சேகரித்து சரியான நேரத்தில் சரியான முறையில் பெண் இனப்பெருக்க உறுப்புடன் சேர்ப்பதே ஆகும். இதன் மூலம் நாம் சாதாரண கன்றை  போலவே இளம் தலைமுறையைப் பெற முடியும். இதில் காளை மாட்டின் விந்தணுக்களைச் சோதித்து கருப்பையில் மேம்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சரியான தருணத்தில் செலுத்தி இளம் தலைமுறை பெறப்படுகிறது. முதன் முதலில் 1780ல் லாஸானோ ஸ்பால்பன்சானி என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் வளர்ப்புப் பிராணிகளில் நாயில் செயற்றைக் கருத்தரிப்புச் செய்தார். அவரது விளக்கப்படி கருத்தரித்தல்விந்தணுவில் தான் நடைபெறுகிறது. விந்தணுவின் நீர்ப்பகுதியில் அல்ல என்று கூறினார். அதன் பின்பு நடந்த பல ஆராய்ச்சிகள் மூலம் இக்கருத்தரிப்பு முறை பயன்பாட்டிற்கு வந்தது.
இச்செயற்கைக் கருத்தரிப்பு முறை கால்நடைகளில் நன்கு பயன்படுகிறது. கால்நடைகளில் தேவையான பண்புகளைப் பெற அயல்நாட்டுக் கால்நடைகளை நம் நாட்டு இனங்களுடன் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பெறலாம். ஆனால் இம்முறையில் கருத்தரிப்பு செய்யும் போது சில மரபியல் குணங்கள்  இழக்கப்படுகின்றன.
சினையின் பருவ அறிகுறிகள்
  1. மாடு அமைதியின்றிக் காணப்படும்.
  2. அடிக்கடி அடிவயிற்றை எக்கிக் கத்திக்கொண்டே இருக்கும்.
  3. அருகிலுள்ள மாடுகளின் மேல் அது தாவும். மேலும் மற்ற காளைகளோ / மாடுகளோ தன் மீது தாவ அனுமதிக்கும்.
  4. மந்தையாக மாடுகளை மேய்க்கும் போது, கூட்டத்திலிருந்து தனியாக ஒதுங்கி நிற்கும்.
  5. உடல்வெப்பநிலையின் அளவு சிறிது அதிகரித்துக் காணப்படும்.
  6. சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும். எருமைகளில் அதிகம் காணப்படும்.
  7. வாலை ஒதுக்கிக் கொண்டே இருக்கும்.
  8. பசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்தும் வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும். கண்ணாடிப் போன்ற திரவம் பசுவின் பிறப்பு உறுப்பிலிருந்து வழிந்து தொங்கிக்கொண்டிருக்கும்.
  9. கண்களின் கருவிழிப்பார்வை விரிந்திருக்கும்.
  10. கறவையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு 2-3 நாட்களுக்குக் குறையும்.
செயற்கைக் கருத்தரித்தலின் நன்மைகள்
  1. மந்தையில் கலப்பிற்கென காளை மாடுகள் வளர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே காளை மாடுகள் பராமரிப்புச் செலவு குறையும்.
  2. இது காளையிலிருந்து நோய் பரவுவதைத்  தடுக்கும்.
  3. முன்பே விந்துக்களைச் சேகரித்துத் தரம் பிரித்து வைப்பதால் குறைந்த தரம் கொண்ட விந்துக்களை அகற்றிவிடலாம்.
  4. இளம் கன்றுகள் உருவாகுவது பற்றி முன்பே தெரிந்து கொள்ளலாம்.
  5. விந்து சேகரித்த காளை மாடு அழிந்து / இறந்து விட்டாலும் தேவையான அளவு விந்தணுவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
  6. விந்துவை கிராமம் / நகரம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வது எளிது.
  7. இது கரு உருவாதலை உறுதி செய்கிறது. மேலும் எந்த ஒரு (பசு (அ) காளை) மாட்டிற்கும் கலப்பினால் ஏற்றுக் கொள்ளாவிடினும் மீண்டும் கலப்புச் செய்யலாம்.
  8. இது சரியான சினைத் தருணத்தைக் கணக்கிட்டுக் கொள்ள உதவுகிறது.
  9. கருவுருதலை அதிகப்படுத்துகிறது.
  10. பதிவேடுகளைப் பராமரிப்பது எளிது.
  11. பழைய, எடை அதிகமான, காயம் பட்ட காளைகளிலிருந்த கூட விந்தணுவை சேகரிக்கலாம்.
தீமைகள்
  1. நன்கு திறமையான தெரிவு முறைகளும் உபகரணங்களும் தேவை.
  2. இது இயற்கை முறையைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
  3. இனப்பெருக்கம் பற்றி முற்றிலும் தெரிந்த திறமை வாய்ந்த நபர்கள் தேவை.
  4. சரியாக சுத்தம் செய்யப்படாத கருவிகளைப் பயன்படுத்தும் போது அதன் விந்துத் திறன் குறைய வாய்ப்புள்ளது.
  5. காளையை சரியாக பரிசோதிக்காமல், சோதனைக்குட்படுத்தாமல் விந்து சேகரித்தால் பல மரபியல் நோய்கள் பசுவிற்குப் பரவக்கூடும்.
  6. காளைகளில் நல்ல உற்பத்தித்திறன் மிக்க காளைகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
விந்து சேகரித்தல் மற்றும் பகுத்தாய்தல்

விந்துக்களை சேகரிக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காலத்திற்கேற்ப சேகரிப்பு முறைகளும் புதிய முறைகள் பின்பற்றப்படுகிறது. பொதுவாக விந்து சேகரிக்க 3 முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவைகளாவன.
  1. செயற்கை சினைப் பை மூலம் விந்து சேகரித்தல்
  2. மின்னூட்ட முறை
  3. மலப்புழை வழியே ஆண் இனப்பெருக்க உறுப்புப் பகுதியை பிசைதல் மூலம் சேகரிக்கலாம்.
செயற்கை சினைப் பை மூலம்
  • செயற்கை பை ஆனது கீழ்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.
  • உறுதியான இரப்பரால் ஆன உருளை, இரண்டு பக்கத் துவாரங்களைக் கொண்டும், மேலும் அதன் மேல் பகுதி காற்று, நீர் சென்ற வர உள் மற்றும்  வெளிப்பகுதியைக் கொண்டும் காணப்படும்.
  • உள் இரப்பர்
  • விந்துக்களை சேகரிக்கும் குடுவை
விந்துச் சேகரிப்பிற்கு செயற்கை சினைப் பையை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை தகுந்த முறையில் கழுவி முறைப்படி சுத்தம் செய்து வைக்கவேண்டும். சினைப்பையை அமைக்க முதலில் உள் இரப்பை இரப்பர்  உருளையில் இருக்கும்.
ஒரு துவாரப் பகுதியின் வழியே கொண்டு சென்று மறு துவாரம் பகுதியின் வழியே வெளியே மடக்கவேண்டும். பிறகு இரப்பர் உருளையின் மேல்பகுதியில் உள்ள நீர்த் துவாரம் வழியே சூடேற்றப்பட்ட 45 டிகிரி செல்சியஸ் தண்ணீரை ஊற்றவேண்டும். பிறகு அளவுகள் குறிக்கப்பெற்ற விந்து சேகரிக்கும் குடுவையை செயற்கை சினைப்பையின் குறுகிய முனைப்பகுதியில் செருகவேண்டும். பின்னர் செயற்கை சினைப்பையின் உள்பகுதியில் ஜெல்லியை தடவவேண்டும். அதன் மூலம் நீர்ப்பகுதியில் அழுத்தத்தை உருவாக்கலாம்.  இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையான சினைப்பை அமைப்பை செயற்கை முறையில் உருவாக்கலாம்.
ஒவ்வொரு முறை விந்து சேகரிக்கும் போதும் செயற்கை சினைப் பையின் வெப்பநிலையைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். காளைகள் தாமதித்தாலோ, செயற்கை சினைப்பையில் வெப்பநிலை குறைந்தாலோ விந்து வெளிப்படும் தன்மை மாறுகின்றது. அவ்வாறு விந்து வெளிப்பட்டாலும் வெளிவரும் விந்து சிறுநீர் போன்றவற்றில் அசுத்தம் அடைந்து உபயோகம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம்.
செயற்கை கருப்பை மூலம் விந்து சேகரிக்கும் செயல்முறை

பசு அல்லது பொம்மை மாடு இருக்கும் இடத்திற்கு காளை மாட்டைக் கொண்டு வரவேண்டும். காளைகள் இனச்சேர்க்கைக்கு பசு அல்லது பொம்மை மாட்டின் மீது ஏறும் போது சுமார் 45 டிகிரி கோணத்தில் காளையில் இனச்சேர்க்கை உறுப்பிற்கு (ஆண்குறி) ஏற்றவாறு வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கையினால் பிடித்துக்கொள்ளவேண்டும். பிறகு காளை இனச்சேர்க்கைக்கான பசு மீது ஏறும் போது, ஆண் குறியின் தோல் பகுதியைப் பிடித்து மேலும் காளையின் ஆண்குறியின் முனைப்பகுதி செயற்கை கருப்பையினுள் உள்ளே செல்ல வழிவகுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, ஆண்குறியின் சிவந்த பகுதியைத் தொடாமல் இருப்பது நன்மை பயக்கும். காளை ஏறி இறங்கிய பின்னர் செயற்கை கருப்பையில் உள்ள காற்றுத் துவாரத்தை திறப்பதன் மூலமும், நீர்த் துவாரத்தைத் திறப்பதன் மூலமும் நீரை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை கருப்பையிலுள்ள விந்துவானது விந்து சேகரிக்கும் குடுவை அதன் இணைப்பில் இருந்து அகற்றி அக்குடுவைக்கு எவ்வித அசுத்தம் ஏற்படாதவாறு, அதனை பஞ்சு கொண்டு துடைத்து ஆராய்ச்சிக்கூடத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

cattleSemen Collection
விந்து சேகரிப்பு

விந்து பாதுகாப்பு

சேகரிக்கப்பட்ட விந்துக்களை உறை நிலைக்குக் கொண்டு சென்று 16 ஆண்டுகள் வரை பாதுகாக்க முடியும். 1949ல் பிரிட்டிஷ் அறிஞர் ஒருவர் விந்துப் பாதுகாப்பில் கிளிசராலை விந்துவுடன் சேர்க்கும் போது அது விந்து உறைதலைக் குறைப்பதைக் கண்டறிந்தார். மேலும் கிளிசரால் விந்துவிலுள்ள நீரை நீக்குவதால் விந்துவினுள் குளிர்க்(ஐஸ்) கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இக்குளிர்கட்டிகளின் சேதத்திலிருந்து விந்துவைப் பாதுகாக்க முடியும். விந்துவை உறைய வைத்துப் பாதுகாப்பதில் 2 முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை.
1. உலர் பனிக்கட்டி மற்றும் ஆல்கஹால் (100 டிகிரி பாரன்ஃஹீட்)
2. நீர்ம நைட்ரஜன் (320 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 190 டிகிரி செல்சியஸ்)
இவ்விரண்டில் நீர்ம நைட்ரஜன் (Liquid Nitrogen)சிறந்தது. ஏனனெில் இம்முறையில் விந்துவின் தன்மை குன்றாமல் அப்படியே நீண்ட நாட்கள் வரை இருக்கும். ஆனால் உலர் பனிக்கட்டி ஆல்கஹால் முறையில் விந்து சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிடில், அதன் வளம் குன்ற வாய்ப்புள்ளது. நீர்ம நிலையில் உள்ள விந்துவை 40 டிகிரி பாரன்ஃஹீட்டில் 1 முதல் 4 நாட்கள் வரை பாதுகாக்க முடியும்.
விந்தானது கண்ணாடியாலான குடுவை போன்ற அமைப்பில் சேகரித்து வைக்கப்படுகிறது. மற்றொரு முறையில், ஃபிரெஞ்ச் குழாய் அமைப்பில் சேகரித்து வைக்கப்படுகிறது. பல செயற்கைக் கருவூட்டல் நிறுவனங்கள், இந்த பிரெஞ்ச் குழாய் அமைப்பையே பின்பற்றுகின்றன.
சில முறைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எந்த இனத்திலிருந்த எடுக்கப்பட்ட விந்து என்பதை இனங்காணுதல் எளிது. எந்த முறையில் சேகரித்தும் பாதுகாத்தாலும் ஒவ்வொரு காளையின் விந்துவுக்கும் தனித்தனியே அடையாளக் குறியிடுதல் அவசியம்.
விந்துவை உட்செலுத்தும் முறைகள்

வெவ்வெறு இனங்களைப் பொறுத்து பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அவை.
  1. ஓட்டை வழியே உட்செலுத்துதல்
  2. சினைப் பையில் விந்துவை வைத்தல்
  3. மலப்புழை வழியே விந்துவை உட்செலுத்துதல்
மலப்புழை வழியே விந்துவை உட்செலுத்துதல்

கால்நடைகளில் இந்த முறையே பரவலாகக் கையாளப்படுகிறது.சூட்டில் உள்ள மாட்டை, கால்நடை மருந்தகம் அல்லது விந்து உட்செலுத்தம் செய்யும் இடத்திற்கு அழைத்து வர வேண்டும். சினை ஊசி போடுபவர் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பின்பு உறைநிலையிலிருந்த விந்துவானது தன்னிலை (நகரக்கூடிய நிலை) அடைந்தவுடன் கிருமி நீக்கம்  செய்யப்பட்ட செயற்கைக் கருவூட்ட ஊசியினுள் போடவேண்டும். பின்பு அதை ஒரு பிளாஸ்டிக் உறையால் மூடிவிடலாம். சினை ஊசி போடுபவர் இடது கையில் உறையை அணிந்து கொண்டு சோப்பு போன்ற ஏதேனும் இளக்கியை உறை மேல் தடவிக் கொள்ளவேண்டும். பின்பு இந்த கருவூட்டல் ஊசியை மலப்புழை வழியே கருப்பையின் அருகில் கொண்டு சென்ற விந்துக்குழாயில் வைத்துவிடவேண்டும். குழாயானது உட்சென்று விந்துவை கருப்பையில் சேர்த்து விடும். பின்பு கருவூட்ட உட்செலுத்திய ஊசியை எடுத்துக் கொள்ளவேண்டும்.
cattle_Insemination
உட்செலுத்துதல்
இம்முறையில் ஊசியை உட்செலுத்தி ஊசியானது கருப்பையில் கொண்டு சென்று விந்துவை வைக்க ஒரு விசை செலுத்தப்படுகிறது. பின்பு ஊசி வெளியில் எடுக்கப்பட்டு விடுகிறது.
குடுவை உட்செலுத்தும் முறை

இம்முறையில் ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையானது பசுவின் சினைப்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடுவை வழியே விந்துவை செலுத்தி கருப்பையில் விந்து விழுமாறு செய்யப்படுகிறது. இம்முறையில் குடுவையானது நன்கு கழுவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
சினைப்பை முறை

இம்முறையில் விந்து உட்செலுத்தும் ஊசியை கையிலேயே எடுத்துச் சென்று சினைப்பையில் விந்து விடுவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது கையில் உள்ள கிருமியால் பெண் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
விந்து சேகரிப்பும், பாதுகாப்பும்

விந்துக்களை சேகரித்து வைக்க, உறைய வைக்கும் முறை கண்டறியப்பட்ட பின்பு தான் விந்துப் பாதுகாப்பு முழுமையடைந்தது. இம்முறை மூலம் விந்துக்களை எந்த ஒரு சேதாரமுமின்றி நீண்ட நாட்கள் சேகரித்து வைக்க முடிகிறது. மேலும் வெகு தூரங்களுக்கு, வேறு கண்டங்களுக்குக்கூட எடுத்துச் செல்வதன் மூலம் பல்வேறு நாடுகளின் அதிக உற்பத்தி உள்ள இனங்களை பரிமாற்றம் செய்து கொள்ள இயலும். இம்முறை முலம் எந்த ஒரு விவசாயியும் தான் வளர்க்க விரும்பும் இனத்தின் விந்துக்களை எளிதில் பெற முடிகிறது.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இம்முறை விந்துச் சேகரிப்புக் காணப்படுகிறது. குழாயில் விந்து சேகரித்தல் முதன் முதலில் பிரான்சில் சேகரிக்கப்பட்டது. விந்துவை உறைய வைத்துப் பாதுகாக்கும் முறையில், பல நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன.
சோடியம் சிட்ரேட் டைஹைட்ரேட் 2.4-2.0 கிராம் 8.0 மிலி 25.0 சதவிகிதம் கொள்ளளவு 50000 அலகுகள் / 100 மிலி விந்து ஃபிரக்டோஸ் கிளிசரால் முட்டை மஞ்சள் கரு பெனிசிலின் நீர்த்த நீர்மங்கள், டைஹைட்ரோ ஸ்ரெட்டோமைசின் 50 மிகி / 100 மிலி நீர்த்த விந்தணுக்கள் நீர்த்த இரு கண்ணாடியில் காய்ச்சி வடித்த நீர் 100 மிலி.
கிளிசரலானது விந்துவில் உள்ள நீரை உறிஞ்சிக் கொள்வதால் அந்நீர் குளிர் கட்டிகளாக மாறுவது தடுக்கப்படுகிறது. இல்லையெனில் 196 டிகிரி செல்சியஸ் குளிர் கட்டிகள் விந்துக்களை சேதப்படுத்தும். இக்கலவையில் சுக்ரோஸ் சேர்ப்பதால் நீண்ட நாட்களுக்கு விந்துவிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
உறையவைக்கப்பட்ட விந்துவானது ஒற்றை இழைக் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கால் ஆன உறிஞ்சு குழலில் + 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அடைக்கப்படுகிறது. உறைநிலை செயலில் கிளிசரால் அளவு 7-7.6 சதவிகிதம் இருக்கவேண்டும். நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த கிருமி நாசினிகளைச் சேர்க்கவேண்டும். விந்துவானது 1 மி.லி விந்துவில் 20 மில்லியன் நகரும் விந்தணுக்கள் மட்டுமே இருக்குமாறு, அடர்வு நீக்கம் செய்யப்பட வேண்டும். விந்துவை உறை நிலைக்கு எடுத்துச் செல்லும் போது படிப்படியாக வெப்பநிலையைக் குறைக்க வேண்டும். வெப்பநிலை இறுதியில் -79 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். 3-5 நிமிடங்களுக்குள் -75 டிகிரி செல்சியஸ் கொண்டு வருதல் விரைவுக் குளிர்தல் முறையாகும். மெதுவாகக் குளிர்விக்கும் முறையில் +5 டிகிரி செல்சியஸ் லிருந்து -15 டிகிரி செல்சியஸ் வரை நிமிடத்திற்கு 1 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும். -15 டிகிரி செல்சியஸ் -31 டிகிரி செல்சியஸ் நிமிடத்திற்கு 2 டிகிரி செல்சியஸ் குறைக்கவேண்டும். -31 டிகிரி செல்சியஸ் -75 டிகிரி செல்சியஸ் வரை 4-5 டிகிரி செல்சியஸ் நிமிடத்திற்குக் குறைக்கலாம். இந்த முறையில் குளிர்விக்க 40 நிமிடங்கள் ஆகும். பின்பு -76 டிகிரி செல்சியஸ் வரை உடனே குறைத்துக் கொள்ளலாம். உறைய வைக்கப்பட்ட விந்துவானது நீர்த்து, உறை நிலை அடைந்த விந்துக்களின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இவ்வாறு அடர்வு குறைந்த விந்துக்களின் விலையும் குறைவு. மாற்றி மாற்றி ஒன்றுவிட்ட நாட்களில் மீண்டும் உட்செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நீர்ம நைட்ரஜனானது, விந்துவை அதிக நாள் சேகரித்து வைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
கால்நடையில் செயற்கைக் கருவூட்டம்

செயற்கை முறைக் கருவூட்டம் என்பது காளை மாடுகளில் இருந்து விந்தணுக்களைச் சேகரித்து, பாதுகாத்துத் தேவையான போது பசு மாடுகளின் இனப்பெருக்க உறுப்பில் கருவுற வைப்பதாகும். இம்முறையின் மூலம் கால்நடைகளில் கிடைக்கும் பயன்பாடுகளாவன:
விந்தணுக்களின் முழுமையான பயன்பாடு

இயற்கையான இனச்சேர்க்கையில் நிறைய விந்தணுக்கள் தேவைக்கதிகமாகவே மாட்டினுள் செலுத்தப்படுகிறது. இதனால் தேவையான அளவு அதாவது ஏற்றுக் கொண்ட அளவு போக, மீதமுள்ள அனைத்து விந்துக்களும் வீணாகின்றன. அதோடு இயற்கை இனச்சேர்க்கையில் அழுத்தம், வலி போன்றவை அதிகமாக இருக்கும். இவ்விரு குறைகளும் இனச்சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் செயற்கைக் கருவூட்டலில் விந்துக்களை நீர்த்து, தேவையான அளவே செலுத்தப்படுவதல் வீணாவது குறைகிறது. மேலும் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். நம் நாட்டில் இல்லாத, நல்ல உற்பத்தி உடைய இனங்களின் விந்துக்களைப் பிற நாட்டில் இருந்து தருவித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நல்ல மரபியல் திறனுள்ள காளைகளின் விந்துக்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்

செயற்கைக் கருவூட்டலில் குறைந்த காளைகளைக் கொண்டு அதிக அளவு சந்ததிகளை உருவாக்க முடியும். எனவே நமக்குத் தேவையான நாம் விரும்பும் பண்புகள் கொண்ட காளையைத் தேர்ந்தெடுத்து, அதன் மரபியல் குணங்களை ஆராய்ந்து பின்பு அதிலிருந்து பல கன்றுகளை உருவாக்கலாம். இம்முறையில் காளைகளின் திறனை அறிந்து பின்பு அதன் விந்துக்களை சேகரித்துக் கொள்ளலாம்.
குறைந்த செலவு

காளை மாடுகள் பசுக்களை விட அளவில் பெரியவை. இவை தீவனங்களும் அதிக அளவில் எடுக்கும். மேலும் இதற்கான கொட்டகை அமைப்பு, பராமரிப்பச் செலவுகளும் அதிகம். ஆகையால் மந்தையில் குறைந்தது 2 அல்லது 3 காளைகளைப் பராமரிக்க ஆகும் செலவை விட செயற்கைக் கருவூட்டலில் கிடைக்கும் சிறந்த பொலி காளைகளின் விந்துக்களின் செலவு குறைவே.
கால்நடை மற்றும் விவசாயத்திற்கும் பாதுகாப்பானது

காளையானது அளவில் பெரியதாகவும், இனச்சேர்க்கை காலத்தில் அதிக வேகத்துடனும், கட்டுக்கடங்காமல் திரியும். இதனைக் கையாள்வதும் கடினம். மேலும் பசுக்களின் மேல் காளைகள் தாவும் போது பசுவிற்கோ காளைக்கோ காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. செயற்கைக் கருவூட்டலில் இந்த அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன.
நோய் பரவும் அபாயம் குறைவு

இயற்கை முறை இனப்பெருக்கத்தில் காளையில் ஏதேனும் நோயிருந்தால் அல்லது ஏதேனும் நுண்ணியிரிகள் காளையிடமிருந்து பசுவுக்கும் பரவும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் செயற்கை கருவூட்டலில் சேகரிக்கப்பட்ட விந்துவில் ஏதேனும் நோயிருந்தால் அது சோதனை செய்யப்பட்டு நீக்கப்படுகிறது. இதனால் மரபியல் அல்லது பிற நோய்கள் காளையிடமிருந்து பரவுவது தடுக்கப்படுகிறது.
தீமைகள்

பல நன்மைகள் இருப்பினும் இம்முறையில் சில குறைபாடுகளும் உள்ளன.
  1. இம்முறைக்கு அதிக ஆள் தேவைப்படுகிறது.
  2. மாடு சூட்டில் இருக்கிறதா என்பதை விவசாயிகள் சரியாக கவனிக்கவேண்டும்.
  3. விந்து சேகரிக்க தேர்வு செய்யப்படும் காளையும் நல்ல சந்ததி உற்பத்தி உள்ளதாக இருக்கவேண்டும். இல்லையெனில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
  4. அதே போல் சேகரித்த விந்துவை சோதனைக்குப்பட்படுத்தி நோய்க்காரணிகளற்றதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுதல் வேண்டும்.
(ஆதாரம்: www.naweb.iaca.org)
செயற்கைக் கருவூட்டலின்போது கவனிக்க வேண்டியவை

பசுவில் ஊசி செலுத்துவதற்கு நன்கு பயிற்சி பெற்ற திறமையான நபர் வேண்டும். சினை ஊசி போடுபவர் சரியாக கருப்பையினுள் விந்தணுவை செலுத்தாவிட்டால் மாடு சினை பிடிக்காது. எனவே முறையான பயிற்சியின்றி செய்தால் அது பயனற்றதாகிவிடும்.
பழங்காலத்தில் பின்பற்றி வந்த செயற்கைக் கருவூட்டல் முறைகள் இயற்கை முறை போன்றே இருந்தன. இதற்கு நிறைய விந்துணுக்கள் தேவைப்பட்டன. எனவே சினைப் பை முறை முழுமையான பலன் தரவில்லை. பின்பு வந்த குடுவை முறையிலும் உபகரணங்கள் சரியாக சுத்தம் செய்யப்பட்டிருக்காவிடில், சரியான பலன் கிட்டவில்லை. இறுதியில் இப்போது மலப்புழை வழியே சினைப்பையில செலுத்தும் முறையே நன்கு பயன் தருகிறது.
மலப்புழை வழியே சினைப்பைக்குள் செலுத்தும் முறை நன்கு சுத்தம்  செய்யப்பட்ட வடிகுழாயில் குளிர்விக்கப்பட்டு உறைநிலை குறைந்த விந்துக்களை வைத்து சினைப்பைக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தம்போது செலுத்துபவர் கண்டிப்பாக உறை அணிந்திருக்கவேண்டும். அவர் அந்த வடிகுழாயை கவனமாக உருண்டையான மடிப்புகள் வழியே எடுத்துச் சென்றபின், அக்குழாயானது கருப்பையின் கழுத்துப்பகுதியை அடைகிறது. விந்தணுக்களை கவனமாக வெளியேற்ற வேண்டும். சில விந்தணுக்கள் கருப்பையினுள்ளும் சில கழுத்துப்பகுதியிலும் விழுமாறு கவனமாக வெளியேற்ற வேண்டும். கருப்பையின் அளவு சிறியதாக இருப்பதால் உள்ளே அதிகம் செலுத்தி ஏதும் காயம் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம். அதே சமயம் விந்துக்கள் வடிகுழாயிலேயே தங்கிவிடக்கூடாது. ஏற்கெனவே ஒரு முறை கருவூட்டல் செய்த மாடுகளுக்குச் சினைப் பிடிக்க சந்தர்ப்பம் இருப்பதால் வடிகுழாயை மிகவும் உட்செலுத்தக்கூடாது.
இம்முறை சிறிது கடினமாக இருந்தாலும் முறையாகப் பயிற்சி பெற்றபின் செய்வதானால் பிற முறைகளை விட அதிக பலன் தரக்கூடியது. அதே நேரம் சரியான சுகாதார முறைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
சினைப் பிடிக்க ஏற்ற நேரம்

கருவூட்டல் முறை வெற்றி வெற அடிப்படைக் காரணம் மாடுகள் சரியான சூட்டில் சினைக்குத் தயாராக உள்ளனவா என்று பார்த்துச் செய்வதே ஆகும். பல்வேறு ஆய்வுகள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டிரிம் பெக்கர் மற்றும் டேவிஸ் என்பவர்கள் நெப்ராய்காவில் 1943ல் நடத்திய சோதனைப்படி அதிகமான பசுக்களுக்கு சினை பிடிப்பது மையச் சினைப்பருவத்தில் தான், ஏனெனில் பருவம் ஆரம்பித்து 8-10 மணி நேரத்தில் தான் சூலகத்திலிருந்து சூலகம் வெளிப்பட்டு முட்டைக்குழாயை வந்தடைகிறது. இதையே, காலையில் பருவத்திற்கு வரும் மாட்டை மாலையிலும் மாலையில் பருவத்திற்கு வரும் மாட்டை அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்வது நல்லது எனக்கூறுகிறோம். மேலும் மாட்டின் விந்தானது 18-24 மணி நேரம் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்கும்.
கருமுட்டை வெளியான பின்பு 12 மணி நேரம் கழித்து கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பு விகிதம் குறைந்துவிடும். 12-24 மணி நேரத்திற்குள் கருமுட்டையானது, கருவாக உருவாகும் தன்மையை இழந்து விடுகின்றது. எனவே குறிப்பிட்ட காலத்தில் கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பது அதிகரிக்கும்.
கருவூட்டல் செய்யும் நேர அட்டவணை
ஈஸ்ட்ரஸ் வெளிக் காட்டும் பசுக்கள்
கருவூட்டல் செய்ய வேண்டிய நேரம்
கருவூட்டல் செய்ய வேண்டிய நேரம்
காலையில்
அதே நாளில்
அடுத்த நாளில்
மாலையில்
அடுத்த நாள் காலையில் / முன்பகலுக்குள்
பின்பகல் 3 மணிக்கு மேல்
(ஆதாரம்: www.world_agriculture.com)