யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 30 ஜூன், 2014

கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் அமைக்க விரும்பும் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: அரசு கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 50 பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கறிக்கோழி பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு பண்ணை கொட்டகை அமைக்கும் செலவில் 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும். இது தவிர நபார்டு வங்கியின் சார்பில் கோழி துணிகர முதலீட்டு நிதியிலிருந்தும் 25 சதவீதம் பின் மானியமாகவும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், வங்கிகள் மூலம் கடன் பெற்றோ அல்லது சொந்த செலவிலோ அமைத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் 5 ஆயிரம் கோழிகள் கொண்ட பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் வசிக்கும் விவசாயிகள், தனி நபர் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் இதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். இவர்களிடம் பண்ணை அமைக்க போதுமான இடம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருக்க வேண்டும். எனவே இத்தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும், பண்ணையை விரிவாக்கம் செய்வதற்கு ஆர்வமுள்ளோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். இத்திட்டத்தில் கடந்த ஆண்டு பயன் அடைந்தவர்கள் நிகழாண்டில் பயன் பெற முடியாது.
இதில், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் முறையாக பயிற்சி அளிக்கப்படும். அதேபோல், தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டாயம் 60 நாள்களுக்குள் கொட்டகை அமைக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட தகுதியும் ஆர்வமும் உள்ளளோர் மாவட்ட ஆட்சியரால் அங்கீகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளரின் திட்ட மதிப்பீட்டு கடிதம், தேர்வு செய்யப்பட்ட வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுகள் ஆகியவைகளுடன் விண்ணப்பங்களை விருதுநகர் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் டி.என். ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதன், 25 ஜூன், 2014

ஆடு வளர்ப்பு

1. ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
2. குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
3. வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
4. ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
5. அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது நல்ல எரு கிடைக்கிறது., வருடம்முழுவதும்வேலை
வெள்ளாட்டு இனங்கள்
சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி
நல்ல உயரமானவை
• காதுகள் மிக நீளமனவை
• ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
• கிடா 65-85 கிலோ பெட்டை - 45-60 கிலோ.
• பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
• 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
தலைச்சேரி / மலபாரி
• வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
• 2-3 குட்டிகளை போடும் திறன்
கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ
போயர்
• இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
• வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
• கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.
• குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்
• 2-3 குட்டிகள் ஈனும் திறன்
• 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
• தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
• 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
• நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
தீவனப் பாரமரிப்பு
• வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
• கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
• தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
• ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
• அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.
குட்டி தீவனம் வளரும் ஆட்டு தீவனம் பால் கொடுக்கும் ஆட்டு தீவனம் சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம் 37 15 52 35
பருப்பு வகைகள் 15 37 --- ---
புண்ணாக்கு 25 10 8 20
கோதுமை தவிடு 20 35 37 42
தாது உப்பு 2.5 2 2 2
உப்பு 0.5 1 1 1
மொத்தம் 100 100 100 100
• குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
• வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
• சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
• தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
• அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்
இனபெருக்கப் பாரமரிப்பு
• இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
• வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
• பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
• குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
• சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
• சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
• சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
• சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும் சினை காலம் 145-150 நாட்கள்
தடுப்பூசிகள்
• துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
• துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
• கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்
கொட்டகை பாரமரிப்பு
1.ஆழ்கூள முறை
• தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
• இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
• இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
• ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்
2.உயர் மட்ட தரை முறை
• தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
• ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்
வளர்ப்பு முறைகள்
1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
• மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
2.கொட்டகை முறை.
• வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
• கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
வெள்ளாடு காப்பீடு திட்டம்
• நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
• விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்

கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி?

கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி?
=========================================
பால் பண்ணைத் தொழில் மீதான ஆர்வம் விவசாயிகள் மட்டுமன்றி, பலதரப்பட்ட மக்களிடமும் அதிகரித்து வருகிறது. அதனால், பால் பண்ணைகள் அமைத்து லாபகரமாக நடத்திட தரமான பசுக்களைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியமாகும்.
தரமான பசுக்களைத் தேர்வு செய்வது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியர் த.ஆனந்த பிரகாஷ்சிங் கூறியது:
ஒரு தனிப்பட்ட பசுவின் உற்பத்தித் திறனை பாரம்பரிய உற்பத்தித் திறன், தனி மாட்டின் உற்பத்தித் திறன், சந்ததியரின் குணாதிசயங்கள் ஆகிய மூன்று காரணிகளால் அறிய முடியும்.
இருப்பினும், இந்த மூன்று அளவுகோல்களும் எப்போதும் கிடைப்பதில்லை. அத்தகைய சமயங்களில் பசுவின் தோற்றத்தைக் கொண்டு, அதன் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.
பால் பண்ணைத் தொழிலுக்கு பண்ணைகளில் பராமரிக்கப்படும் பசுக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
கறவை மாடுகளை வாங்கும்போது கலப்பின மாடாகவும் (ஜெர்ஸி அல்லது ப்ரிசியன் கலப்பினம்), முதல் ஈத்து மாடாக அல்லது இரண்டாவது ஈத்துக்குத் தாண்டாத மாடாகவும் இருக்க வேண்டும்.
பால் மாடுகளில் உற்பத்தித் திறன் இரண்டாவது ஈத்தில் இருந்து 4ஆவது ஈத்து வரை அதிகரிக்கும். அதன்பிறகு, பாலின் அளவு குறையக்கூடும்.
எனவே, பால் அதிகம் தரக்கூடிய ஈத்துள்ள 2 முதல் 4ஆவது ஈத்தில் உள்ள மாடுகள் பண்ணையில் இருப்பது அவசியம்.
தவிர, மாடுகள் 5, 6 ஈத்துக்களைத் தாண்டும் போது, 8 முதல் 10 வயதைக் கடந்திருக்கும் என்பதால், அவற்றைப் பராமரிப்பது லாபகரமானதாக இருக்காது.
மாடுகளை கன்று போட்ட 10 முதல் 15 நாள்களுக்குள் வாங்கிட வேண்டும்.
ஒரு மாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் கண்கள் பிரகாசமாகவும், மாடுகள் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
வெளி உறுப்புகளிலிருந்து எந்தவித திரவம், சீழ் வரக் கூடாது.காயங்கள், புண்கள் போன்றவை இருக்கக் கூடாது.
கால்கள் நன்றாக அமைந்து வலுவாக இருக்கவும், மாடு அசை போட்டுக் கொண்டு இருக்கவும், மேல் உதடு ஈரமாக வியர்வைகளைக் கொண்டிருக்கவும் வேண்டும்.
பால் மடியானது நன்றாக விரிந்து உடலோடு ஒட்டி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாலைக் கறந்தவுடன் சுத்தமாக சுருங்கிட வேண்டும்.
4 காம்புகள் இருக்க வேண்டும். அவை சம அளவுகளாகவும், சம இடைவெளிகளுடனும் அமைந்திருக்க வேண்டும்.
வயிற்றின் அடிப் பகுதியில் பால் மடிக்கு முன் இருக்கும் பால் நரம்புகள் நன்றாகத் தடித்து வளைந்து நல்ல ரத்த ஓட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
பால் மாடுகளின் நெஞ்சுப்பகுதியை விட வயிற்றுப் பகுதி அகன்று இருக்க, கால் முட்டிகளுக்கு இடையே இடைவெளி அதிகமாகவும், வயிற்றுப் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய தீவனத்தை உள்கொண்டு அதிக அளவு பாலை உற்பத்தி செய்யும்.
கறவை மாடுகளை சந்தையில் வாங்குவதைத் தவிர்த்து, மாட்டின் உரிமையாளரின் இடத்துக்கு நேரடியாகச் சென்று மாட்டின் கறவை அளவை தொடர்ந்து மூன்று முறை கறந்து பார்த்து வாங்க வேண்டும்.
தவிர, மாடு விற்பனையாளரிடம் மாட்டுக்கு இதுவரை தரப்பட்ட தீவனக் கலவை, தீவனம் அளவு குறித்து தெரிந்து கொண்டு, அதே கலவையில் தர வேண்டும்.
மாடுகளுக்கு தீவனத்தை திடீரென மாற்றக் கூடாது.
மாற்றினால் ஜீரண சக்தி இழந்து பால் உற்பத்தி குறையக்கூடும்.
அதேபோல, மாடுகளுக்கு முறையாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
— with Bupp Agriculture and 4 others.
R.k. Mugeskumaar's photo.
R.k. Mugeskumaar's photo.

ஞாயிறு, 22 ஜூன், 2014

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-----

இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!
சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.
கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/SS_Solar_pumps.htm
http://www.aed.tn.gov.in

புதன், 18 ஜூன், 2014

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பும் மூலிகை முதலுதவி மருத்துவமும் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
நாமக்கல் திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அன்று நண்பகல் 1.30 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி வகுப்பில், நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலம் நல்ல வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் பண்ணையாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 -233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 

நாட்டுக்கோழி வளர்ப்பும் மூலிகை முதலுதவி மருத்துவமும் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு  நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

நாமக்கல் திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அன்று நண்பகல் 1.30 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி வகுப்பில், நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலம் நல்ல வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் பண்ணையாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 -233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 19 மே, 2014

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன. குருவுக்கோழி,பெருவிடைக்கோழி,சண்டைக்கோழி, அசில்கோழி, கடக்நாத் என்னும் கருங்கால் கோழி, கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட்நெக், கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி.
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும்.

கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 500 கோழிகள் வளர்க்கலாம். கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது. கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

பாம்புகள் நடமாட்டம் இருந்தால் பண்ணை முறை என்றால் பண்ணையை சுற்றி ஒரு அடி உயரம் மீன் வலைகளை கட்டலாம். பண்ணையை சுற்றி சிறியாநங்கை வளர்க்கலாம்.

மேலும், கோழி வளர்க்கும் இடத்தில் வான்கோழி மற்றும் கின்னிக்கோழி ஒன்று அல்லது இரண்டு வளர்க்கலாம். கோழி வகைகளில் வான்கோழியும், கின்னிக்கோழியும் மட்டும் சற்று வித்தியாசமானவை.பொதுவாக கின்னிக்கோழியை வளர்ப்பதற்கு தனித்திறமையே வேண்டும் என்பார்கள். ஏனெனில் கின்னிக்கோழிகளின் முழுநேர வேலையே இரையை அரைத்துக் கொண்டு இருப்பது தான்.ஆனால், அதே நேரத்தில் கின்னிக்கோழிகள் வளர்க்கப்படும் இடத்தில் காட்டுப்பகுதியாக இருந்தாலும் மனிதர்கள் தைரியமாக நடமாட முடியும் மற்றும் வாழவும் முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் நாயின் செய்கைகளில் ஒருசில குணங்கள் கின்னிக்கோழிகளிடம் உண்டு .. இவற்றில் முக்கியமான ஒன்று கின்னிக்கோழிகள் வளரும் வீட்டிற்கு அருகில் விஷம் கொண்ட பாம்புகள் உள்பட விஷஜந்துகள் எதுவந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு எஜமானர்களுக்கு எச்சரிக்கை மணியாக கத்திக்கொண்டே இருக்கும். இதுமட்டுமின்றி வீட்டில் பழகிய நபர்களை தவிர வேறுயாராவது புதிய மனிதர்கள் வந்தாலும் கூட கின்னிக்கோழிகள் தங்களது கடமையை செய்ய தவறுவதில்லை…இது எழுப்பும் வித்தியாசமான சத்தத்தால் ஒருவிதமான அலைகள் உருவாகின்றன.. இதனால் அந்தபக்கம் பாம்புகள் வருவதில்லை..முயற்சி செய்து பார்க்கவும்…நன்றி.. வாழ்த்துக்கள்.

ஆட்டு கொட்டகை அமைத்தல்



ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.

ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.
வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.
நீண்ட முகப்பு கொண்ட முறை

இம்முறை மிகவும் குறைந்த செலவில் வெள்ளாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்க வல்லது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தில் 1.5 மீட்டர் அகலமும் 3 மீ நீளமும் கொண்ட இடம் இரண்டு ஆடுகளுக்கு போதுமானது. இதில் 0.3 மீ அளவு தீவனத் தொட்டிக்கும் 1.2 மீ ஆட்டிற்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. 1.5 மீ இடம் இரண்டு பெட்டை ஆடுகளுக்கும் இடையே ஒரு சிறிய பிரிப்புச் சுவருடன் அமைக்கலாம். ஓடு அல்லது அட்டையிலான, குடிசை போன்ற மேற்கூரை அமைக்கலாம். பக்கங்களில் அடைக்காமல் உள்ளே ஆடுகளைக் கயிற்றில் கட்டி வைக்கலாம். அல்லது பெரிய ஜன்னல் போன்ற அமைப்புகளுடன் ஆடுகளைக் கட்டாமலும் விட்டு விடலாம். தரைப்பகுதி மண்ணாக இருப்பதை விட சிமெண்ட் பூச்சாக இருந்தால் குளிர்காலங்களில் ஆடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.
வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.
கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
கிடா ஆடுகளின் கொட்டில்

கிடா ஆடுகளுக்கென தனியான கொட்டில் அமைத்து பாதுகாக்கவேண்டும். ஒரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.
தனி அறைக் கொட்டில்



0.75 மீ அகலமும் 1.2 மி நீளமும் கொண்ட மரத்தால் அல்லது உலோகத்தாலான ஒரு தனி அறை போன்ற பகுதி தனிக்கொட்டில் எனலாம். அதுவே இட அளவு 2 மீ ஆக இருந்தால் ஆடுகள் நீண்ட நேரம் தங்க வசதியாக இருக்கும்.
சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக அதே சமயம் தாய் ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.

சுத்தம் சுகம் தரும் !
தினமும் காலையில கொட்டிலை சுத்தம் செய்யணும். ஒவ்வொரு கொட்டிலையும் சுத்தி சிமெண்ட் வாய்க்கால் எடுத்து ஒரு தொட்டிக் கட்டணும். ஆடுகளோட சிறுநீர், கொட்டிலைக் கழுவுற தண்ணியெல்லாம் அதன் மூலமா சேகரிச்சு தீவனப்பயிருக்கு உரமா உபயோகப்படுத்தலாம். கிடாவை தனியான தடுப்புல நீளமான கயித்துல கட்டி வைக்கணும். தீவனங்களை தரையில் போடாம பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வெச்சுட்டா, தேவைப்படும் போது ஆடுங்க சாப்பிட்டுக்கும்.இந்தக் கொட்டில் அமைப்பு ரொம்பவும் செலவு கம்மியான முறை.

ஆடுகளுக்கு தாதுக்கலவை.,!

தாதுக்கலவை

தாதுக்கள் உடற்செயல் இயக்கம், எலும்புக்கூடு, பால் உற்பத்தி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதால் சரியான அளவு தாதுக்கள் அளிக்கவேண்டியது, அவசியம். இதில் மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். 50 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு கால்சியம் 6.5 கி, பாஸ்பரஸ் 3.5 கி தேவைப்படுகிறது. அடர் தீவனத்தில் 0.2 சதவிகிதம் என்ற அளவில் தாதுக்களைக் கலந்தும் அளிக்கலாம்.


சாதாரண உப்பு

சாதாரண உப்பு பாலில் சோடியம், குளோரைடு மற்றும் இரும்புச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே ஆடுகளுக்கு சாதாரண உப்பு தருவது மிகவும் முக்கியம். ஒரு கட்டி உப்பை ஆடுகள் நாக்கில் நக்குமாறு தருவது மிகுந்த நன்மை பயக்கும் அல்லது தீவனத்துடன் 2 சதவிகிதம் உப்பை கலந்துக் கொடுக்கலாம்.

விட்டமின் மற்றும் தடுப்பு மருந்துகள்

விட்டமின், ஏ, ஈ மற்றும் டி போன்றவை ஆடுகளுக்கு அத்தியாவசியமானவை. வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் தேவையான விட்டமின்களைத் தயாரித்துக் கொள்ளும். அது போக பசும்புற்களில் விட்டமின் ஏ நிறைந்திருக்கும் மக்காச் சோளம், சதையுள்ள பசுந்தீவனம் பிற விட்டமின்களைத் தரும். வளரும் கன்றுகளுக்கு விட்டமின்கள் மிகவும் அவசியம்.

ஏரோமைசின், டெராமைசின் வளரும் குட்டிகளுக்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு, நோய்த் தாக்குதலைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்கிவிக்கும்.



ஊட்டச்சத்து

சினை ஆடுகளுக்கு கடைசி இரு மாதத்தில் தான் குட்டிகள் 70 சதவிகிதம் எடை பெறுகின்றன. எனவே இந்த சமயத்தில் முறையான தீவன கவனிப்பு அவசியம். இல்லையெனில் குட்டிகள் குறைந்த எடையுடனோ அல்லது இறந்தோ பிறக்க வாய்ப்புள்ளது. எனவே இச்சமயத்தில் நன்கு அடர் தீவனம் அளிக்கவேண்டும். மேலும் கருப்பை விரிந்து வயிறு முழுவதும் அடைத்துக் கொள்வதால் நிறையத் தீவனமும் ஆட்டினால் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே சரியாக கவனித்து நன்றாக தீவனம் அளிக்கவேண்டும்.

சினையாக இருக்கும் போது ஆடுகள் உள்ளே சேகரித்து வைத்துள்ள கொழுப்பு, கார்போஹைட்ரேட் முழுவதும் குட்டிகளுக்கு கொடுத்து விடும். எனவே அதற்குத் தேவையான அளவு உணவைக் குறிப்பாக நல்ல தரமுள்ள உலர் தீவனம் அளித்தல் அவசியம். சினைக்காலத்தில் நல்ல உலர் தீவனம் அளித்தால் தான் குட்டி ஈன்றபின் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

அதே போல், புரதம் கலந்த அடர் தீவனம் கொடுக்கவேண்டும். அடர் தீவனம் அதிகமாகக் கொடுத்தாலும் கன்று ஈனுதல் மெதுவாகவும், செரிப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கும். எனவே 16-17 சதவிகிதம் புரதம், சிறிது உப்பு மற்றும் தாதுக்கள் கலந்த கலப்பு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
(ஆதாரம்: Handbook of Animal Husbandry Dr. Achariya)

மழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா?

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் தளிர் இலைகளையும், புற்களையும் ஆடுகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறு ஏற்படும். இது தவிர மிகவும் அரைத்து வைத்த தானியங்களை சாப்பிட கொடுக்கும் போதும், விரயமான காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் செரிமான கோளாறு ஏற்படும். வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது இவ்வாறு நேர்வதுண்டு.



பாதிக்கப்பட்ட அறிகுறிகள்
வயிறு உப்புசம் ஏற்படும். ஆடுகள் உறக்கமின்றி காணப்படும். பல்லை அடிக்கடி கடித்துக் கொள்ளும். பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை மாறி மாறி வைத்துக் கொள்ளும். இடது பக்க வயிறு, வலது பக்கத்தை விட பெருத்து இருக்கும். உப்புசத்தால் மூச்சு திணறும். வாயினால் மூச்சு விடும். நாக்கை வெளியில் தள்ளும். தலையையும், கழுத்தையும் முன்னோக்கி வைத்துக் கொள்ளும்.

வயிறு உப்புசத்தை சமாளிக்கும் முறைகள்
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை மேற்கொள்ளவும். இல்லாது போனால் நீங்களே முதல் உதவியாக 50 முதல் 100 மிலி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை வாய் வழியாக கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது புரை ஏறாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மேலும் கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

தடுப்பு முறைகள்:
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் அதிக நேரம் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவனத்துடன் நொதிக்க கூடிய மாவுப்பொருட்களை சேர்க்க கூடாது. போதுமான அளவு காய்ந்த புல் தர வேண்டும்.
தகவல்; டாக்டர் பூவராஜன்.

வெள்ளாடுகளுக்கான ஊட்டச்சத்துக்கள்!

புரதம்

நைட்ரஜன் அதிகமுள்ள ஊட்டச்சத்து புரதம் ஆகும். இந்தப் புரதமானது இரைப்பையிலுள்ள நுண்ணுயிரிகளால் தேவையான அளவு அமினோ அமிலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே நல்ல பால் உற்பத்திக்கு அத்தியாவசியம்.
மேலும் புரதமானது கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான திசுக்களை உற்பத்தி செய்கிறது. அதோடு பால் உற்பத்தி, நோய் எதிர்ப்பு, இனப்பெருக்கம் மற்றும் பராமரிப்பிற்கு அவசியமாகிறது. மீதமுள்ள நைட்ரஜன் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இது சற்று விலை உயர்ந்ததாகையால், தேவைக்கதிகமாகக் கொடுத்து வீணாக்குதல் கூடாது. 12-16 சதவிகிதம் புரோட்டின் ஒரு ஆட்டிற்குத் தேவைப்படுகிறது.

புரோட்டீனை உற்பத்தி செய்ய யூரியா போன்ற புரோட்டீனற்ற நைட்ரஜன் பொருட்களை இரைப்பையிலுள்ள நுண்ணுயிரிகள் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் இது கால்நடைகளுக்கு மட்டுமே. ஆடுகள் சிலவகைப் பயிர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும்.

ஆற்றல்

எல்லா ஊட்டச்சத்துக்களும் ஆற்றலை உருவாக்கவே பயன்படுகின்றன. பெரும்பாலான ஆற்றல், நார்ப்பொருட்கள், பசுந்தீவனங்களிலிருந்தும் பெறப்படுகிறது. ஆற்றல் அடர் தீவனம் ஸ்டார்ச், கொழுப்பு போன்றவற்றிலிருந்தும் பெறப்படுகிறது. சரியாக தேவைப்படும் ஆற்றல் கிடைக்காவிடில் பருவமடைதல் தள்ளிப் போதல், குறைபாட்டுடன் கூடிய உடல், வளர்ச்சி தடைபடுதல், இனப்பெருக்கத் திறன் குறைதல் போன்ற விளைவுகள் ஆட்டில் ஏற்படுகின்றன.
ஆற்றல் இரு வழிகளில் அளக்கப்படுகிறது. ஒன்று மொத்த செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள். பெயருக்கேற்றாற்போல் இம்முறையில் செரிக்கக்கூடிய கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு போன்றவை அளவிடப்படும். இம்முறையில் கழிவுகளில் வீணாகும் ஊட்டசத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு உடல் பராமரிப்பு, எடை அதிகரிப்பு, பால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட அளவு கணக்கிடப்படுகிறது.

தாது உப்புக்கள்
கால்சியம், பாஸ்பரஸ் உப்பு போன்ற பல தாதுக்கள் வெள்ளாடுகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. இவை தினசரி பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம் அளித்தலின் மூலம் பெறப்படுகிறது. ஆடுகள் தாதுக்களைத் தாமாகத் தயாரிக்க இயலாது. எனவே அடர் தீவனத்தில் தேவையான தாதுக்களின் கலவையைச் சேர்த்துக் கலப்புத் தீவனமாக வழங்கலாம். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சேர்த்துக் கலப்புத் தீவனமாக வழங்கலாம். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்கள் ஆடுகளுக்கு மிக முக்கியம். எனவே 2:1 என்ற விகிதத்தில் அளித்தல் அவசியம்.

விட்டமின்கள்
விட்டமின்கள் ஆடுகளுக்குச் சிறிதளவே தேவைப்படும். எனினும் விட்டமின் பி.கே போன்றவை இரைப்பையிலும் விட்டமின் சி உடல் திசுக்களிலும் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. விட்டமின் ஏ, டி, ஈ போன்றவை கோடைக்காலங்களில் சூரிய ஒளியில் தயாரிக்கப்பட்டு குளிர்காலங்களுக்கும், சேமித்து வைக்கப்படுகிறது.
இருந்தாலும் தானியத் தீவனங்களுடன் 6 மில்லியன் அலகு விட்டமின் ஏவும் 3 மில்லியன் அலகு விட்டமின் டியும் கலந்து கொடுத்தல் குளிர்காலங்களில் சிறந்தது.

கொழுப்பு
அசைபோடும் கால்நடைகளுக்கு கொழுப்பு குறைவாகவே தேவைப்படும். 1.5-2.5 சதவிகிதம் வகையுடன் கொழுப்பு சிறிது சேர்த்தல் நல்லது.

நீர்

இது மிகக் குறைவாகவே ஆடுகளில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், பற்றாக்குறை ஏற்பட்டால் பால் உற்பத்தி பாதிக்கப்படும். விலங்குகளின் உடல் செல்களில் நிர் மிகக் குறைந்தளவே இருந்தாலும் உடற்செயல்களுக்கு அது மிக அத்தியாவசியம். கழிவுகளை வெளியேற்றுதல், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல், ஊட்டச்சத்துக்களைக் கடத்துதல், செரிமானம் போன்றவற்றிற்கு நீர் மிக அவசியம். நாளொன்றுக்கு இரு முறை நீர் வைத்தல் நல்ல பால் உற்பத்திக்கு உதவும்.

ஆட்டு ஊட்ட கரைசல் செய்வது எப்படி?

இயற்கை விவசாயத்தின் ஒரு தூணாகிய பஞ்சகவ்யா பற்றி படித்து இருக்கிறோம். மாடு இல்லாத விவசாயிகள், ஆடுகள் மூலமாகவும் அதே மாதிரியான கரைசலை தயார் செய்ய முடியும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் முனைவர் தி.ராஜ்பிரவீன்.
சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆட்டு ஊட்டம் குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்ட வழிவகுக்கிறது என்கிறார் அவர்.
ஆட்டு ஊட்டம் தயாரிக்கும் முறை:
§  ஆட்டூட்டம் தயார் செய்ய விவசாயிகள் மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனை பயன்படுத்தலாம்.
§  ஆட்டு புழுக்கை- 5 கிலோ, ஆட்டு சிறுநீர்- 3 லிட்டர், ஆட்டுப்பால்- 2 லிட்டர், ஆட்டுத்தயிர்- 2 லிட்டர், வாழைப்பழம்- 10, இளநீர்- 2 லிட்டர், கடலை பிண்ணாக்கு- 2 கிலோ, கரும்புச்சாறு- 2 லிட்டர், கள்- 2 லிட்டர் என்ற அளவில் நன்றாக கலக்கி கதர்த்துணி அல்லது சணல் சாக்கு போட்டு மூடிவைக்கவும்.
§  கடலைப் பிண்ணாக்கு கிடைக்கவில்லை எனில், உளுந்து கால் கிலோ, பாசிப்பயறு கால் கிலோ என இரண்டையும் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து அரைத்துப் போடலாம்.
§  கள் கிடைக்கவில்லை என்றால் மாற்றாக தேங்காய் நீரை 4 நாள்கள் புளிக்க வைத்து ஊற்றலாம்.
§  இவ்வாறு உருவாக்கப்பட்ட கலவையை தினமும் இருவேளை குச்சியால் கலக்க வேண்டும். இப்படி செய்வதன் வாயிலாக கலவையில் காற்றோட்டம் ஏற்படும் மீத்தேன் வாயு வெளியேறி, நுண்ணுயிர்கள் பெருகும்.
கலவையை பயன்படுத்தும் முறை:
§  ஆட்டு ஊட்ட கலவை தயாரித்த 14-ம் நாள் முதல், அதை பயிர்களுக்கு தெளிக்கலாம்.
§  இந்த ஆட்டு ஊட்டத்தை 10 ஏக்கருக்கு பயன்படுத்தலாம். 10 லிட்டர் நீரில் இக்கலவையை 250 மில்லி கலந்து பயன்படுத்த வேண்டும்.
§  இந்த கலவையை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம
ஆட்டு ஊட்ட கரைசலின் பயன்கள்
§  பசுக்கள் இல்லாத விவசாயிகள் ஆடுகளின் கழிவுகளை திறன்பட பயன்படுத்தி ஆட்டு ஊட்டம் தயாரிப்பில் எளிதாக ஈடுபட முடியும்.
§  ஆடுகள் பலவிதமான இலை, தழைகளை உண்ணுவதால் புழுக்கையிலும், சிறுநீரிலும் அவற்றின் சாரம் இருக்கும். எனவே ஆட்டு ஊட்டம் தெளிக்கும் போது சுவையான காய், கனிகள் கிடைக்கும்.
§  பழத்தில் அதிகளவு இனிப்பு சுவை இருப்பதாக முன்னாடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
§  மேலும் நெற்பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் (Growth​ Promoter) மற்றும் நோய் விரட்டியாகவும் செயல்படுகிறது.
§  எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் ஆட்டு ஊட்டம் தயாரிப்பில் ஈடுபட்டு வாழ்வில் வளம் பெறலாம். கிராமங்களில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆடுகளை வளர்த்து, இந்த எளிய ஆட்டூட்ட கலவையை தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து லாபம் பெற முடியும் என்று விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,

 ''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி,நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும்.

காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும்.

50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.
ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம்.5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும்.

கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும்.

சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும்.

ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு,

''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாம, நீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்''என்று நம்பிக்கையூட்டினார்.

நன்றி: சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,  9943265061

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை!

    பால் பண்ணை தொழில் செய்வதற்கும் உள்ளது ஆன்லைன் படிப்பு

    வியாழன், 15 மே, 2014

    ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள்

    ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள்
    கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம்.
    தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.
    தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.
    காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.
    நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.
    பண்ணை அமைக்கும் முறைகள்:
    நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.
    பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
    பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.
    காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:
    குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.
    ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.
    குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.
    ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
    ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.
    -நன்றி-இணைப் பேராசிரியர் & தலைவர் எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மைய்யம். -திண்டுக்கல்.

    ஆடுகளின் நோய் மேலாண்மை

    ஆடுகளின் வயிறு ஊதலுக்கு
    பிரண்டை அரைத்து 50 மி.லி. 25மில்லி ஓமவல்லி சாறுடன் கலந்து கொடுக்கலாம் அல்லது
    பிரண்டை தண்டை வயிற்றை சுற்றி போட்டு பிறகு ஓமவல்லி சாறு 50 மில்லி அளவு 2 வேளை கொடுக்க வயிறு மந்;தம் குறைந்து விடும். அதன்பின் 2 மணிநேரம் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது .புளித்த மோர் கோடுக்கக் கூடாது.
    Rsga Seed Kannivadi's photo.
    Rsga Seed Kannivadi's photo.
    Rsga Seed Kannivadi's photo.

    புதன், 14 மே, 2014

    கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி

    திண்டுக்கல் மாவட்டத்தில் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி
    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகள் மூலம் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது.
    கோழி வளர்ப்பு
    திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் வீடுகளில் சுமார் 3¼ லட்சம் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    மேலும், இறைச்சி கோழி பண்ணைகளும் பெருமளவில் செயல்பட்டு உள்ளன. இந்த பண்ணைகளில் மட்டும் 25 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 28¼ லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
    கழிச்சல் நோய்
    இதர வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் கோழிகளுக்கு நோயை தாங்கும் சக்தி மிகவும் குறைவு ஆகும். எனவே, நோய் தாக்கினால் கோழிகள் எளிதில் இறந்து விடும் வாய்ப்பு உண்டு. இதில் கழிச்சல் நோய் கோழிகளை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாகும்.
    ஒருவித வைரஸ் மூலம் பரவும் இந்த நோய் தாக்கும் கோழிகள் இறந்து விடுவதும் உண்டு. ஆனால், தடுப்பூசி போடுவதன் மூலம் கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை காப்பாற்ற முடியும். எனவே, மாவட்டம் முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் 3¼ கோழிகளுக்காக அரசு கால்நடை மருத்துவமனைகளில் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    தடுப்பூசி
    இதற்காக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அனைத்து கால்நடை ஆஸ்பத்திரிகள், கிளை நிலையங்களில் கழிச்சல் நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கால்நடை ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு வாரமும், கிளை நிலையங்களில் 2 வாரத்திற்கு ஒருமுறையும் சனிக்கிழமை தினத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
    கோழிகளுக்கு ஒரு முறை தடுப்பூசி போடும்பட்சத்தில் அடுத்த ஓராண்டுக்கு நோய் தாக்குதல் இருக்காது. எனவே, கோழி வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று உதவி இயக்குனர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.


    திண்டுக்கல் மாவட்டத்தில் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகள் மூலம் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

கோழி வளர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் வீடுகளில் சுமார் 3¼ லட்சம் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

மேலும், இறைச்சி கோழி பண்ணைகளும் பெருமளவில் செயல்பட்டு உள்ளன. இந்த பண்ணைகளில் மட்டும் 25 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 28¼ லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

கழிச்சல் நோய்

இதர வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் கோழிகளுக்கு நோயை தாங்கும் சக்தி மிகவும் குறைவு ஆகும். எனவே, நோய் தாக்கினால் கோழிகள் எளிதில் இறந்து விடும் வாய்ப்பு உண்டு. இதில் கழிச்சல் நோய் கோழிகளை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாகும்.

ஒருவித வைரஸ் மூலம் பரவும் இந்த நோய் தாக்கும் கோழிகள் இறந்து விடுவதும் உண்டு. ஆனால், தடுப்பூசி போடுவதன் மூலம் கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை காப்பாற்ற முடியும். எனவே, மாவட்டம் முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் 3¼ கோழிகளுக்காக அரசு கால்நடை மருத்துவமனைகளில் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி

இதற்காக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அனைத்து கால்நடை ஆஸ்பத்திரிகள், கிளை நிலையங்களில் கழிச்சல் நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கால்நடை ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு வாரமும், கிளை நிலையங்களில் 2 வாரத்திற்கு ஒருமுறையும் சனிக்கிழமை தினத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.

கோழிகளுக்கு ஒரு முறை தடுப்பூசி போடும்பட்சத்தில் அடுத்த ஓராண்டுக்கு நோய் தாக்குதல் இருக்காது. எனவே, கோழி வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று உதவி இயக்குனர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

    புதன், 7 மே, 2014

    கால்நடை மருத்துவப் படிப்பு

    கால்நடை மருத்துவப் படிப்பு: மே 12 முதல் விண்ணப்பம் விநியோகம்
    இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
    இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 2014-15-ஆம் ஆண்டு அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான இளநிலைப் பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல்லில் திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வருகிற 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
    விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.600. தலித், பழங்குடியின மாணவர்கள் ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். இந்தக் கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் செலுத்தி ரசீது பெற்று, அதனுடன் விண்ணப்பக் கடித்தை இணைத்து அளித்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
    மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பெற்று, ஜூன் 2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் அளிக்க வேண்டும்.
    விண்ணப்பப் படிவங்கள் குறித்த வழிமுறைகள், இதர விவரங்களையும் www.tanuvas.ac.inugadmission என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286- 266491, 220650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காட்டுக் கோழிகள்

    காட்டுக் கோழிகள்
    மனம் ஒன்றி அன்போடு வாழும் தம்பதிகளை, மனமொத்த காதலர்களை இணைபிரியாத ஜோடிப் புறாக்களோடு ஒப்புமைப்படுத்திப் பலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். வனப் பகுதிக்குள்ளும் எப்போதும் இணை பிரியாமல் இருக்கும் ஒரு ஜோடி உண்டு. அதுதான் "ஜங்கிள் பவுல்' எனப்படும் காட்டுக் கோழியாகும்.
    இந்தியாவில் இரண்டு வகை காட்டுக் கோழிகள் உள்ளன. தென்னிந்தியாவில் காணப்படுவது சாம்பல் காட்டுக் கோழிகள் எனப்படும் "கிரே ஜங்கிள் பவுல்' இனமாகும். வடகிழக்கு இந்தியாவில் சிவப்பு காட்டுக் கோழிகள் எனப்படும் "ரெட் ஜங்கிள் பவுல்'கள் காணப்படுகின்றன. இத்தகைய காட்டுக் கோழிகளைக் குறித்து பறவை ஆராய்ச்சியாளரான கார்த்திகேயன் மற்றும் அவைநாயகம் ஆகியோர் கூறியது:
    ""மற்ற பறவை இனங்களைப் போல் இல்லாமல் காட்டுக் கோழிகள் எப்போதுமே தனது ஜோடியுடனேயே காணப்படும். அத்துடன் தனது இணையைத் தேடி அது போடும் சப்தம் தனித்தன்மையுடன் இருக்கும். அதனால், எந்த இடத்தில் காட்டுக் கோழிகள் உள்ளன என்பதை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
    வனப்பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்கும் போதும், மூங்கில்களில் அரிசி வரும்போதும் இவை அப்பகுதிகளில் கூட்டமாக காணப்படும். மூங்கிலில் அரிசி 60 ஆண்டுக்கொரு முறையும், குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுக்கொரு முறையும் மலரும் என்பது நமக்கு தெரியுமோ இல்லையோ காட்டுக்கோழிக்குத் தெரிந்துவிடும். அதனால் காட்டுக்கோழியைக் குறித்த ஆராய்ச்சியாளர்களும் இத்தகைய பருவங்களிலேயே தங்களது ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.
    காட்டுக் கோழிகளுக்கு ஓர் இயல்பு உண்டு. ஒரு கூட்டத்தில் ஓர் ஆண் சேவல் மட்டுமே இருக்கும். இந்த கூட்டத்திற்குள் மற்ற சேவல் ஏதேனும் நுழைந்துவிட்டால் அவை சண்டையிட்டு இரண்டில் ஒன்று கொல்லப்படும்வரை இந்த சண்டை ஓயாது. அதேபோல, பெண் காட்டுக் கோழிகள் அதிகபட்சமாக 4 முதல் 7 முட்டைகள் வரையே இடும். இவை இரவு நேரங்களில் மரக்கிளைகளில்தான் தங்கும். பகல் நேரங்களில் தரைப் பகுதியிலும், புதர்களில் இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவை மரக் கிளைகளையே நாடுகின்றன. பிப்ரவரி முதல் மே மாதங்கள் வரையே இவை முட்டையிடும் பருவமாகும்.
    காடை, கெüதாரி போன்றவையும் இத்தகைய கோழி இனத்தில் வந்தாலும் காட்டுக்கோழிகள் மட்டும் தனித்தன்மை வாய்ந்தவை. கம்பீரமாகக் காணப்படும் இவற்றின் கொண்டைப் பகுதியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தங்க நிறத்தில் காணப்படும். அதேபோல, ஆண் சேவலின் வால் பகுதி வளைந்த அரிவாள் போல இருக்கும். இதுவும் ஒளிரும் தன்மை கொண்டது.
    காட்டுக் கோழிகளைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலும் காணக் கிடைக்கிறது. வாரணம் என அழைக்கப்பட்டுள்ளன. வாரணம் என்றால் யானைகளையும் குறிக்கும். காட்டுக் கோழிகளையும் குறிக்கும்.
    இந்தியாவில் மவுண்ட் அபு, கோதாவரி நதிக்கரை தொடங்கி, குமரி முனைவரை சாம்பல் காட்டுக் கோழிகளே காணப்படுகின்றன. இலையுதிர் காடுகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் அதிகளவில் காணப்படும் இந்தக் காட்டுக்கோழிகள் லெண்டானா எனப்படும் உண்ணிச் செடிகளின் பழங்களைச் சாப்பிடுவதால் அவற்றின் கொட்டைகள் அதிக அளவில் பரவி களைகள் அதிகரிப்பிற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.
    ஆனால், மரங்களில் இவை வசிப்பதால் அந்த மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு மரங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மறைமுகமாகவும் உதவுகின்றன. பொதுவாக பறவைகள் ஆகாயத்தில் பறப்பவை, மரங்களில் கூடு கட்டி வாழ்பவை, தரைவாழ் பறவைகள் எனப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் காட்டுக் கோழிகள் தரைவாழ் பறவையாகும்.
    பிராய்லர் கோழிகள், நாட்டுக் கோழிகள் என மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு காட்டுக்கோழி இனத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. நாம் பார்த்த கோழிகளை விட உருவத்தில் சிறியவையாக இவை இருந்தாலும் வனப்பகுதிகளில் உள்ள பறவையினங்களில் இவை விசேஷமானவை என்பதே இவற்றின் தனிச்சிறப்பாகும்.
    இவற்றின் இறைச்சிக்கு மருத்துவக் குணம் உள்ளது என்ற தகவலால் இவை அதிக அளவில் கொல்லப்படுகின்றன. நமக்கு பிராய்லர்களும், நாட்டுக் கோழிகளும் வர்த்தக ரீதியாகவே கிடைப்பதால், காட்டுக் கோழி இனத்தையாவது அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

    விரால் மீன் வளர்ப்பு

    விரால் மீன் வளர்ப்பு
    ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச் செயல்படுத்தி வருகிறது இம்மையம்.
    மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க. விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற பத்து ரகங்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.
    ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.
    விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
    “எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
    நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
    குஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும். பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத் தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும். இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். (பார்க்க, பெட்டிச் செய்தி) மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
    நோய்களும் பெரியதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்த விற்பனைக்குத் தயாராகி விடும்
    பத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம் என்றால் ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வைத்தால் சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்னா வலைகள் போட்டு பறவைகளிடமிருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான் லாபம் கிடைக்கும். ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டால் 300 மீன்கள் கண்டிப்பாக வளர்ந்துடும். நன்றாக பராமரித்தால் 450 மீன்கள் வரைகூட தேத்தி விடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இரந்து 300 கிலோ மீன்வரைக்கும் அறுவடையாகும்
    தொடர்புக்கு
    நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தொலைபேசி 0462-2560670
    ஹனீபா, மைய இயக்குநர், அலைபேசி: 94431-57415


    பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

    வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்...

    காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கள். அவர்களில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பரத்.
    பேராசிரியர் விதைத்த வித்து!
    காலைவேளை ஒன்றில், தன் தோட்டத்தில் பரத் வேலை செய்து கொண்டிருந்தபோது சந்தித்தோம். ''சென்னை, பச்சையப்பா காலேஜ்ல எம்.எஸ்.சி ஜுவாலஜி படிச்சுட்டு இருந்த சமயத்துல, பஞ்சகவ்யா பத்தி ஒரு பேராசிரியர் சொன்னார். அந்த விஷயத்துல எனக்கு ஆர்வம் வந்து, அதைப்பத்தி நிறைய விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும், தமிழ்நாடு அரசின் பசுமையாக்கல் திட்டத்துல உதவி ஆராய்ச்சியாளரா தற்காலிகப் பணியில சேர்ந்தேன். வண்டலூர் வன ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில மரங்களை ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுக்கறதுதான் வேலை. அங்கதான், மரங்கள்ல இலையைச் சாப்பிடற பூச்சிகள், தண்டுகள துளைக்கிற வண்டுகள், வேரை பாதிக்கிற பூச்சிகள் பத்தியெல்லாம் அனுபவரீதியா தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, தேக்கு மரத்துல இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோயோட பாதிப்பு அதிகமா இருந்துச்சு. அந்த மரங்களுக்கு பஞ்சகவ்யாவைக் கொடுத்தப்போ பூச்சிகள் கட்டுப்பட்டுச்சி. நன்மை செய்ற பூச்சிகளும் நிறைய வந்துச்சி. புதுசா வெச்ச மரக் கன்றுகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்தப்போ, வளர்ச்சி அபரிமிதமா இருந்துச்சி. அப்போதான், 'இதைப் பயன்படுத்தி நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாது?’னு யோசனை வந்துச்சி. இதுதான், இன்னிக்கு என்னையும் ஒரு விவசாயியா உங்ககிட்ட பேச வெச்சிருக்கு.
    நிறைய இயற்கை... கொஞ்சம் செயற்கை!
    நாலு வருஷமா அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பாத்துட்டிருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, வேலை பார்த்துட்டு இருக்குற தம்பி பாஸ்கரனும் லீவு நாட்கள்ல எங்களோட சேர்ந்துக்கு வான். ஒரே பயிரைப் போடுறப்போதான், பூச்சிகள், நோய்கள், விலை இல்லாம போறதுனு பல பிரச்னைகள் வரும். அதனால, கீரை, காய்கறிகள், நெல்னு கலந்துதான் சாகுபடி செய்றோம். கொஞ்சம் ரசாயனம், கொஞ்சம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கலந்து விவசாயம் செய்றோம். நண்பர் மூலமா சீரகச் சம்பா விதைநெல் கிடைச்சுது. 20 சென்ட்ல அதை விதைச்சு... பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் சேத்துக் கொடுத்ததுல நல்லா வளந்துச்சு. இப்போ ஊர்க்காரங்கள்லாம் என்கிட்ட பஞ்சகவ்யா பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்ற பரத், தொடர்ந்தார்.
    கலப்புப் பயிரோடு கறவை மாடுகளும்!
    ''மொத்தம் ரெண்டு ஏக்கர் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். அதனால, எந்தப் பயிர் வெச்சாலும் தங்கமா விளையும். 15 சென்ட்ல கோ-4 தீவனப் பயிர், 10 சென்ட்ல மிளகாய் (இந்த 25 சென்ட்லயே 20 செம்மரம், 20 மகோகனி, 20 தேக்குக் கன்றுகள 6 க்கு 6 இடைவெளியில் நடவு போட்டிருக்கிறார்), 30 சென்ட்ல வெண்டை, 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா அவரையும், 20 சென்ட்ல கனகாம்பரம், 10 சென்ட்ல ராகி, 15 சென்ட்ல தனியாக கீரையும், 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா நூக்கல், முள்ளங்கி, பாம்பு வெள்ளரியை போட்டிருக்கேன். மீதி 40 சென்ட்ல வெண்டையும், நெல்லும் அறுவடை முடிச்சுருக்கேன். மூணு மாடுகள், மூணு கன்னுகுட்டிகளும் இருக்கு. அதுல, ரெண்டு மாடு கறவையில இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. மரப்பயிர், கனகாம்பரம், ராகி இதெல்லாம் இப்பத்தான் நடவு போட்டு வளர்ந்துகிட்டிருக்கு. இதுல மகசூல் பார்க்க இன்னும் நாளாகும்.

    சிறுகீரையை 17-வது நாள்ல இருந்து அறுவடை பண்ணலாம். அரைக்கீரை, முளைக்கீரை ரெண்டையும் 20-வது நாள்ல அறுவடை பண்ணலாம். தொடர்ந்து, 5 நாள் வரை கீரை பறிக்கலாம். தனித்தனியா மேட்டுப்பாத்தி அமைச்சு, ஒவ்வொரு பாத்தியிலயும் ரெண்டு நாள் இடைவெளியில விதைகளைத் தூவுவேன். இப்படி செய்யுறப்போ, தொடர்ந்து 20 நாளுக்கு கீரை பறிக்க முடியுது. மேட்டுப்பாத்திங்கிறதால, மழைக் காலத்துல தண்ணி தேங்காது. அதேமாதிரி சுழற்சி முறையில்தான் பயிர் நடவு செய்றேன். ஒரு முறை கீரை போட்டா... அந்த நிலத்துல அடுத்த முறை வெண்டை, அடுத்த முறை நெல், அடுத்த முறை கேழ்வரகுனு மாத்தி மாத்தி பயிர் செய்றப்போ, நிலத்துல சத்துக்கள் குறையறதில்லை.
    நிலத்திலேயே விதை வங்கி!
    இப்போ, கடைகள்ல 1 கிலோ விதை சிறுகீரை-180 ரூபாய், முளைக்கீரை-300 ரூபாய், அரைக்கீரை-400 ரூபாய்னு விதைகளை விற்பனை பண்றாங்க. விலை கூடுதலா இருக்கறதால... நானே விதையை உற்பத்தி பண்ணிக்கிறேன். எவ்வளவு விதை தேவையோ... அந்தளவுக்கான கீரைகளை மட்டும் பறிக்காம நிலத்துல விட்டுட்டா 40-45 நாள்ல விதை வந்துடும். அப்படியே கீரையை வேரோட பிடுங்கி, ஒரு வாரத்துக்கு காய வெச்சு கம்பால தட்டி தூத்துனா, விதைகள் கிடைச்சுடும். இதனால, விதைச்செலவு குறைஞ்சுடுது'' என்ற பரத் வருமானம் பற்றிச் சொன்னார்.
    3 மாதங்கள்... 90 ஆயிரம் ரூபாய்!
    ''30 சென்ட்ல இருக்கற வெண்டை அறுவடை முடிஞ்சிருக்கு. ஒரு அறுப்புக்கு ஏறக்குறைய 60 கிலோ வரைக்கும் கிடைச்சுது. எனக்கு மொத்தம் 22 அறுப்பு மூலமா 1,300 கிலோ காய் கிடைச்சுது. ஒரு கிலோ 13 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரைக்கும் வித்துச்சி. சராசரியா 15 ரூபாய் கிடைக்கும். அப்படி பார்த்தா... 1,300 கிலோ மூலமா, 19 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. வருஷத்துல மூணு முறை இப்படி வெண்டை போட்டுடுவேன்.
    கீரை மொத்தம் 75 சென்ட்ல இருக்கு. இதுல தனியா 15 சென்ட்ல இருக்கற கீரை இன்னும் அறுவடைக்கு வரல. 60 சென்ட் கீரை மூலமா... 3 ஆயிரத்து 800 கட்டு கீரை அறுவடை செஞ்சு, கட்டு 6 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, 22 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சுது. இந்த 60 சென்ட் கீரையில ஊடுபயிரா போட்டிருந்த வெள்ளரி, முள்ளங்கி, நூக்கல் எல்லாத்துலயும் சேர்த்து 5,800 ரூபாய் கிடைச்சுது. இதுல ஊடுபயிரா இருக்கற அவரையில 300 கிலோ கிடைச்சுது. கிலோ 20 ரூபாய் வீதம் விற்பனை செய்ததுல... 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிளகாய்ல 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. ஆகக்கூடி மூணு மாசத்துல கிடைக்கிற மொத்த வருமானம்... 61 ஆயிரத்து 600 ரூபாய்.
    மாடு வளர்க்கறதால... பால் மூலமா மாசம் 9 ஆயிரம் 660 ரூபாய் கிடைக்குது. இதையே மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா..
    28 ஆயிரம் 980 ரூபாய் கிடைக்குது. ஆக, 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல இருக்கற பயிர் மற்றும் மூணு கறவை மாடுகள் மூலமா, 90 ஆயிரத்து 580 ரூபாய் கிடைக்குது. மூணு மாசத்துக்கான செலவு 23,200. லாபம்...
    67 ஆயிரத்து 380 ரூபாய். மாசத்துக்கு 22 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்'' என்ற பரத், நிறைவாக, ''எவ்வளவு நல்ல விலை கிடைச்சாலும், ஒரே காயை அதிகப் பரப்புல சாகுபடி செய்ய மாட்டேன். கலந்து பயிர் செய்றதால எனக்கு விலை கிடைக்கலைங்கிற பிரச்னை இல்லை. நிறைய பேர் என்கிட்ட 'நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்தை ஏன் பாக்குற’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மழை மட்டும் கைகொடுத்தா, இன்னும் கூடுதலாவே என்னால சம்பாதிக்க முடியும். நல்ல மனநிறைவோட எனக்கு பிடிச்ச வேலையை சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்'' என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

    தொடர்புக்கு, பரத்,
    செல்போன்: 99766-92219.